Success Stories

Monday, 19 March 2018

சந்தையின் வீழ்ச்சியால் சந்தியில் நிற்கும் பண்டு முதலீட்டாளர்கள்

சந்தையின் இறக்கம் புதிது அல்ல. பட்ஜெட்டிற்கு பிறகு,  09-03-2018 வரை சந்தையின் இறக்கம்  -8.2%.  மீயூச்சுவல்  பண்டுகளின் இறக்கமும் அதை சார்ந்தே உள்ளது. நமக்குத் தெரிந்ததுதான், கடந்த ஒன்றரை முதல் இரண்டு வருடங்களில்  பண்டு முதலீடுகள் உயர்ந்துகொண்டே போனது. கடந்த ஆறு மாதங்களில் பண்டு முதலீடு செய்த பலரின் திட்ட  தொகை  அளவு, முதலீடு செய்த தொகையை விட குறைவாக (நெகட்டிவ்வாக) உள்ளது. காரணம், சந்தை கடந்த ஒரு மாதத்தில் குறைந்துகொண்டே வந்திருக்கிறது. 26-02-2018 இருந்து 07-03-2018 வரை 7  தினங்களில்  -4.1% சதவீதம் வரை குறைந்து இருக்கின்றது.

கடந்த ஓரிரு வருடங்களில் பண்டிற்கு வந்தவர்களுக்கு இந்த சரிவு பெரிய அதிர்ச்சி. சந்தியில் நிற்பது போன்ற உணர்வு. டிப்ஸ் கொடுத்வர்கள் மேல் கோபம். இனி எந்த வழியில் பயணிப்பது என்று குழப்பம்.

சந்தையில் சரிவு
சந்தையில் குறைவுக்கு பல காரணங்கள் சொல்லப்படும், பட்ஜெட் பாதிப்புகள், பெரியண்ணன் அமெரிக்காவின் சட்டதிட்ட மாறுதல்கள், உலகச் சந்தையின் போக்கு, பிஎன்பி முறைகேடுகள் பதினோராயிரம் + கோடிகள் ( 11000 0000000) . எத்தனை சைபர்கள் என்று என்ன முடியாதபடி முறைகேடுகள், இது போன்று இதுவரையில் வெளிவராத புதிய கோடிகளை தொடும் ஊழல்கள்,  என்று ஒவ்வொரு ஏற்ற இறக்கத்திற்கும் காரணங்கள் சொல்லப்படும்.

எதார்த்தம்
நாம் மறக்காமல் மனதில் கொள்ள வேண்டியது, இது முடிவல்ல இதுவும் கடந்து போகும் என்ற எதார்த்தமே.  அதை விட்டு விட்டு,  நான் இனிமேல் பங்கே வாங்க மாட்டேன், பங்கு பண்டில் முதலீடு செய்ய மாட்டேன் என கூறுவதால் லாபம் ஏதுமில்லை.  தான் எப்படி இந்தச் சூழலை..  பாதகமான சூழலை, சாதகமாக மாற்றிக் கொள்ளலாம் என்று யோசித்து, அதற்கேற்றவாறு புதிய முதலீடுகளை  செய்வது சாலச் சிறந்ததாகும்.

எஸ்.ஐ.பி 
முதலில் மிக முக்கியமாக புதிய முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, நமது எஸ்.ஐ.பி யின் மொத்த மதிப்பு குறைந்து வருகிறது என்பதால் எஸ்.ஐ.பி தயைவு செய்து நிறுத்தி விட வேண்டாம். எஸ்.ஐ.பி யின் தாத்பரியமே, இதுபோன்று சந்தை இறங்கும் போது அதே மாதாந்திர தொகைக்கு கூடுதலான யூனிட்டுகளை  வாங்கும். எனவே எஸ்.ஐ.பி தொடங்கி கட்டி வருபவர்கள் சந்தையின் பாதிப்பைப் பற்றி மிகவும் வருத்தம் கொள்ளாமல் எஸ்.ஐ.பி யை தொடர்ந்து நடத்துவது மிக முக்கியமான புரிதலாக இருக்கவேண்டும்.

ஏற்றமும் இறக்கமுமே சந்தை 
இரண்டாவது, குறைந்து வரும் உங்களது போர்ட்போலியோ (Portfolio) தொகையை  தினந்தோறும் பார்த்து, ஏறியுள்ளது, இறங்கியுள்ளது என்று கவலை கொள்ள வேண்டாம். சந்தையில்  ஏற்படும் இறக்கமும், பின்னர் ஏற்றமும் சகஜமே.  

சந்தையில் சரிவால், பங்கில் நேரடியாக முதலீடு செய்பவர்களுக்கும், மற்றும் மியூச்சுவல் பண்ட்  மூலம் முதலீடு செய்பவர்களையும் எப்படி பாதிக்கிறது என்று பார்ப்போம். நாங்கள் அடிக்கடி சொல்வதுண்டு, நேரடி பங்கு முதலீட்டில் அதிகம் ரிஸ்க் என்றும் மியூச்சுவல் பண்ட் பங்கு முதலீட்டில் ரிஸ்க் குறைவு என்றும். இது இப்போது உறுதி செய்யபடுகின்றது.   உதாரணமாக நீங்கள் சுமார் 1 லட்சம் ரூபாயை முறைகேடு தகவலுக்கு முன், 29-01-2018 ல்  பி.என்.பி  ல் முதலீடு செய்திருந்தால் அது இன்றைய (09-03-2018) தேதியில் -45.1% சதவிகிதம் குறைந்து 54,900  இருக்கும். அதேசமயம் ஒரு டைவர்ஸிபைடு மியூச்சுவல் பண்டில் ( Diversified equity mutual fund)  முதலீடு செய்திருந்தால் இவ்வளவு குறைந்து இருக்காது. லார்ஜ் கேப் திட்டங்கள்  சராசரியாக -3.27% குறைந்துள்ளது, காரணம் எந்தவொரு மியூட்சுவல் பன்ட்  திட்டமும் தனிப்பட்ட பங்குகளில் 5 சதவீதத்திற்கு மேல் முதலீடு  செய்வது இல்லை. எனவே நேரடி பங்கு முதலீட்டில் ரிஸ்க் அதிகம். இது போன்ற பி.என்.பி முறைகேடு வரும்போது அந்த பங்கில் முதலீடு செய்த அனைவரும் அதிகபட்சம் பாதிக்கப் படுகிறார்கள். 

இந்த பி.என்.பி முறைகேடுகளால் பி.என்.பி மட்டும் பாதிக்கபடுவதில்லை, இந்த முறைகேட்டுடன் தொடர்புடைய மற்ற வங்கிகளும், நிறுவனங்களும் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக அலகாபாத் வங்கி, யூனியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ்.பி.ஐ வங்கி, கீதாஞ்சலி ஜெம்ஸ் என்று பல நிறுவனங்கள  இதனுடன தொடர்பு கொண்டதாக தகவல்கள்  உள்ளது. இது போன்ற நேரங்களில் அந்தந்த பங்குகளின் விலையும் குறைகிறது. தினந்தோறும் வரும் புதிய புதிய வங்கி முறைகேட்டு தகவல்களால் வங்கி குறியீடு மிகவும் குறைந்து வருகிறது - நிப்டி பி.எஸ்.யூ வங்கி -22.8%,  நிப்டி வங்கி -11.6%

பங்கு
29-01-2018
09-03-2018
வித்தியாசம்
சதவிகித மாற்றம்
கீதாஞ்சலி ஜெம்ஸ்
65.35
15.8
-49.55
-75.8%
பி என்பி வங்கி
173.95
95.5
-78.45
-45.1%
அலகாபாத் வங்கி,
69.05
45.45
-23.6
-34.2%
யூனியன் வங்கி
137.75
93.6
-44.15
-32.1%
எஸ் பி வங்கி
311
253.15
-57.85
-18.6%
ஆக்சிஸ் வங்கி
605.4
505.3
-100.1
-16.5%
பி எஸ்   வங்கி குறியீடு
31125
27347
-3778
-12.1%
பி எஸ் சென்செக்ஸ் குறியீடு
36283
33307
-2976
-8.2%
நிப்டி பி எஸ் யூ வங்கி குறியீடு
3704
2858
-846
-22.8%
நிப்டி வங்கி குறியீடு
27498
24296
-3202
-11.6%

நாம் நமது நேரடி முதலீடுகளில் இந்த நிறுவனங்களில் குறிப்பாக வங்கிகளில்  முதலீடு செய்திருந்தால், நமது முதலீட்டுக்கு பாதிப்புகள் அதிகம் இருக்கும். இந்த முறைகேட்டால் வங்கி சார்ந்த முதலீடு அல்லது வங்கி சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் நஷ்டம் அதிகமாக உள்ளது. எனவே இந்த முறைகேடுகள் கற்றுத்தரும் பாடம் நாங்கள் முன்னர்  சொல்வது போல்  டைவர்ஸிபைடு மியூச்சுவல் பண்டு திட்டங்களை விட அதிக ரிஸ்க் வாய்ந்தது செக்டார் பண்டு (sector funds)  எனப்படும் இந்த வங்கி சார்ந்த திட்டங்கள் ஆகும். செக்டார் பண்டு ( sector funds)  எனப்படும் இந்த வங்கி சார்ந்த திட்டங்களின் வீழ்ச்சி -6.1%.  பரந்த பங்கு முதலீட்டு திட்டங்களின் (Diversified equity schemes) வீழ்ச்சி -3.35%.  எனவே ரிஸ்க் அதிகம் விரும்பாதவர்கள் பரந்த பங்கு முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற குறிப்பிட்ட வங்கி திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் அதன் ரிஸ்க் தன்மையை உணரந்து  முதலீடு செய்ய வேண்டும்.

மியூச்சுவல் பண்ட திட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் சதவிகித சரிவு ( as on 09-03-2018)
வங்கி திட்ட சராசரி
-5.46%
மல்டி கேப் திட்ட சராசரி
-2.94%
லார்ஜ் கேப் திட்ட சராசரி
-2.57%
மிட் கேப் திட்ட சராசரி
-2.69%
ஸ்மால் கேப் திட்ட சராசரி
-4.29%

பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகள் என்பது கப்பலில் பயணிப்பது போன்றது. சந்தையில் சரிவு போன்ற சூறாவளிகளும், முறைகேடு போன்ற பணம் விழுங்கும் திமிங்கலங்களையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். திமிங்கலங்கள் இல்லாத கடல்கள் இல்லை. அவை இல்லாத கடலில் பயணித்து அக்கரை செல்வது என்பது லாபம் தரும் விஷயமாகவும் இல்லை. எனவே எந்த கப்பலில் எந்த வழியில் சென்றால் சூறாவளியும் திமிங்கலங்களுங்களையும் சமாளித்து லாபம் பெறலாம் என்று பார்ப்பது நம் கவனமாக இருக்க வேண்டும். இதுவே நிதர்சனம்.

தற்போதய சூழலில் சிறந்த முதலீடு
புதிய முதலீடுகளை, ஒரே தடவையில் பங்கு சாரந்த திட்டங்களில் முதலீடு செய்யாமல், எஸ்.ஐ.பி  மூலம்  செய்வது  உசிதம். ஸ்மால் மற்றும் மிட் கேப்பில் புதிய முதலீடுகளை, ஒரே தடவையில் செய்வதை தவிர்கலாம். தற்போதய சூழலில் எஸ்.ஐ.பி  யை தொடர்வது, கடன் பத்திரங்களில் முதலீடு செய்யவது, குறுகிய கால கடன் திட்டங்களிலும் சேவிங்ஸ் வகையான கடன் திட்டங்களிலும் முதலீடு செய்யவது சால சிறந்த்து. 

No comments:

Post a Comment