
ஃபோட்ரான் இன்ஜினியரும்... ஏஐ சாம்பாரும்! • தமிழில் எளிய ஏஐ புத்தகம்
எக்செல்லை நீங்கள் இயக்க வேண்டாம், ஏஐ இயக்கும் உங்களுக்காக கச்சிதமாக
தமிழில் AI • Blog 2 • கண்ணன் மீ • காரைக்குடி
எக்செல் தெரியாவிட்டாலும், உங்கள் வேலையை ஏஐ உதவியுடன் எக்செல்லிலேயே கச்சிதமாகச் செய்யலாம். ஒரு தடவை உள்ளீடு செய்தால் போதும். மற்றதை எக்செல் பார்த்துக் கொள்ளும்.

படம்: உள்ளீடு ஒரு தடவை. அறிக்கை தானாக. ஏஐ இயக்கும்.
1. நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும்
எக்செல் (Excel) தெரியாதவர்கள் இருப்பார்களா என்ன? எக்செல் தெரியவில்லை என்று வருத்தப்படுபவர்கள் இருக்கலாம். ஒரு நாள் பயிற்சிக்கு ரூபாய் ஐயாயிரம் கொடுத்து எக்செல்லை கற்க முயற்சி செய்பவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்.
குறியீடு (code) இல்லாமல், மேக்ரோ (macro) இல்லாமல், சுழல் அட்டவணை (pivot table) இல்லாமல், மிக எளிமையாக நமது வாய் மூலம் சொல்லும் வார்த்தைகள் மூலம் நமக்குத் தேவையான எக்செல் டெம்ப்ளேட்டை (template) செய்து கொள்ளலாம் என்றால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். மேலே படியுங்கள்.
“வரும் முன் காப்போம்” என்பது நமது தமிழ்மொழி.
நானும் லோட்டஸ் 1-2-3 (Lotus 1-2-3) முதல் இன்று எம்.எஸ். 365 (MS 365) வரை எக்செல் உபயோகித்து வருகிறேன். முதலில் இரண்டு பத்தியில் (column) ஆரம்பிப்போம். பின்னர் விட்டுப் போயிற்று என்று இரண்டு சேர்ப்போம். இறுதியில் நம்மிடம் பல பத்திகளும் பல வரிசைகளும் (row) ஒன்றோடு ஒன்று இணையாதவாறே, சரியான சூத்திரம் (formula) இல்லாமல், உண்மையில் சொல்லப் போனால் ஒரு குப்பையாக ஒரு டெம்ப்ளேட் அல்லது எக்செல் விரிப்புத்தாள் (spreadsheet) இருக்கும்.
இதில் நிறைய ஒரே மாதிரி பத்தி, ஒரே உள்ளீடு (input) இரண்டு முறை இருக்கும். இதை இப்போது எவ்வாறு தவிர்க்கலாம்? ஏஐ உதவுமா? உதவும்! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? மேலே படியுங்கள். ஆச்சரியம் தீரும் நிச்சயமாக.
2. கருத்து - ஏஐ எப்படி எக்செல் டெம்ப்ளேட்டுக்கும் எக்செல் ஆய்வுக்கும் உதவும்?
தரவுத்தள வடிவமைப்பில் (database modeling) சொல்வார்கள். நாம் உள்ளிடுவதை ஒரு தடவை மட்டுமே செய்ய வேண்டும். மற்ற எல்லா இடங்களிலும் அதையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று.
இதை நாம் தினந்தோறும் செய்யும் எக்செல் டெம்ப்ளேட்டில் வைத்திருக்கிறோமா? அடித்து சொல்வேன். சத்தியமாக இல்லை. அதனால்தான் நமக்கு எக்செல்லில் நிறைய பிரச்சினைகள் வருகின்றன.
நாம் தனியாக தரவுத்தளம் (database) பொறியாளரை தேட வேண்டியதில்லை. நாமே ஏஐ உதவியோடு நல்ல எக்செல் டெம்ப்ளேட்டை முதலிலேயே யோசித்து தயார் செய்து விட்டோம் என்றால், முடிந்தவரை அது ஒரு தடவை உள்ளீடு செய்தால் போதும். மற்றதை அதுவே செய்து கொள்ளும்.
நீங்கள் உங்களுக்குத் தேவையான எக்செல் டெம்ப்ளேட்டுகளை ஏஐ மூலம் உருவாக்கலாம். உதாரணமாக, செலவு கணக்கு எழுதுவது, அன்றைய தேவைகளை என்றென்றும் செய்ய வேண்டும், எந்தத் தேதியில் செய்ய வேண்டும் என்ற செய்ய வேண்டிய பட்டியலை (to-do list) ஆயத்த செயலி (app) இல்லாமல் நமக்கு ஏற்ற மாதிரி நாமே எக்செல் மூலம் செய்து கொள்வது, என்று பலவற்றைச் செய்ய முடியும்.
ஏஐ உதவியுடன் எக்செல்லில் செய்வதற்கு சில வழிகள் உள்ளன. உதாரணமாக, நம்மிடம் தரவு (data) இருந்தால், நிதி முதலீட்டு தரவு, கேம்ஸ் (CAMS), கேஃபின்டெக் (KFintech) போன்றவற்றிலிருந்து பெறுகிறோம். இவை வெவ்வேறு தரவு மாதிரிகளைக் கொண்டிருக்கும். இவை இரண்டையும் ஏஐயிடம் கொடுத்து ஆராய்ந்து விளக்கப்படம் (chart) வடிவத்தில் பெற முடியும். எக்செல்லில் நிறைய நேரம் கஷ்டப்படாமல் இதை எளிதாக செய்ய முடியும்.
நிறுவனங்களில் உங்கள் முதலாளியோ, மேலாளரோ கேட்கும் தகவல்களின் முக்கிய சாதக பாதகங்களை எளிதாகப் புரிந்து கொள்ளுமாறு விளக்கப்பட வடிவங்களில் எக்செல் மூலமாகவே பெற முடியும். எனவே குறைகள், தவறுகள் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. வழக்கமாக வரக்கூடிய மாயத் தகவல் (hallucination) இங்கு வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.
காரணம், இங்கு கணக்கைப் போடுவது ஏஐ அல்ல. எக்செல் தான்.
3. ஏஐ உண்மையில் எக்செல்லில் எப்படி வேலை செய்கிறது?
எக்செல்லில் விளக்கப்படம் போடுவது சற்று கடினம் தான்.
எக்செல்லில் ஏஐ உதவியோடு அந்த விளக்கப்படத்தை போட்டால் என்ன? நான் சாதாரண ஏஐ உரையாடலில் விளக்கப்படம் போட்டோம் என்றால் சில சமயம் தப்பான எண்கள் வரலாம் அல்லது விளக்கப்படம் சரியாக இருக்காது. நீங்கள் எக்செல் மூலம் ஏஐ உதவியோடு அந்த விளக்கப்படத்தை போட்டால் நிச்சயமாக அது சரியான விளக்கப்படமாக இருக்கும்.
முன்னர் பார்த்தது போல, அந்த விளக்கப்படத்தை உருவாக்குவது ஏஐ அல்ல. எக்செல் தான். எனவே அது நிச்சயமாக சரியாக இருக்கும். ஆனால் எந்த இடத்தில் எப்படி உருவாக்க வேண்டும் என்று ஏஐ செய்து விட்டு, உங்களுக்கு வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கு உரித்துத் தருவது போல் தயாராக விளக்கப்படத்தை தந்து விடும்.
இதைச் செய்வதற்கு இரண்டு வகை உண்டு.
முதல் வகை: தனியாக சாதாரண ஏஐ உரையாடல் மூலம் உங்களுக்குத் தேவையான விவரங்களைக் கொடுத்து முழுமையாக வேலை செய்யக்கூடிய எக்செல் டெம்ப்ளேட்டை பெறுவது. இது ஒரு வகை.
இரண்டாவது வகை: கூகுள் வொர்க்ஸ்பேஸ் (Google Workspace), மைக்ரோசாஃப்ட் கோபைலட் (Microsoft Copilot) போன்றவற்றில் ஏஐ பக்கப்பட்டை (side bar) உரையாடல் மூலம் எக்செல்லில் விவரங்களைப் பெற்று திரும்பவும் எக்செல்லிலேயே வெளியீட்டை (output) பெறும் வசதி. இது சற்று மாறுபட்டது. கிளாட் (Claude) எக்செல் டெம்ப்ளேட்டை நன்றாகச் செய்து தருகிறது. அதற்கென்று தனியாக உலாவி கூடுதல் வசதி (browser add-on) உலாவியில் உள்ளது. எந்த வகை ஏஐ மற்றும் ஏஐ ஒருங்கிணைப்பு (integration) உங்களுக்குத் தோதாக வருகிறதோ அதைத் தேர்ந்தெடுத்து அதன்படி செய்யவும்.
இப்போது யூடியூப் (YouTube) அல்லது ஏஐ செல்வாக்காளர் (influencer) மூலமாக “நீங்களே செயலி செய்யுங்கள்” என்று ஏகப்பட்ட விளம்பரங்களும் யூடியூப் காணொளிகளும் உள்ளது. நான் சொல்வது அதுவல்ல.
இது போன்ற ஒரு சிறு மளிகைக் கடையின் விவரங்களை மூன்று வகைகளில் செய்யலாம்.
ஒன்று: மிகக் கச்சிதமாக எம்.எஸ். அக்சஸ் (MS Access) அல்லது எஸ்.கியூ.எல் (SQL) போன்ற தரவுத்தளங்களின் மூலம் செய்ய முடியும். அதற்கு நிறைய பணம் தேவைப்படும். அதற்கு தனியாக குறியீடு எழுதுபவர்கள் தேவைப்படுவார்கள்.
இரண்டு: இப்போது எல்லோரும் சொல்வது போல் ஏஐ மூலம் இந்த குறியீடுகளை நீங்களே எழுதிக் கொள்ள முடியும். செயலி உருவாக்கு என்று சொல்கிறார்கள். அது செய்ய முடியும். இங்கு ஒரு சிக்கல் உள்ளது. இது எந்த இடத்தில் போய் உங்களது தரவுகளை சேமிக்கும்? எந்த இடத்திலிருந்து தரவுகளை எடுக்கும்? உங்களது டெம்ப்ளேட்டின் முன்பகுதியும் (front end), பின்பகுதியும் (back end) இணைந்து செய்யப்படுமா என்பது சந்தேகமே. எனவே இது சிறு தொழிலுக்கு அன்றாட வேலைகளுக்கு சரியாக வருவதில்லை.
மூன்று: நாம் தனியாக உரையாடலில் எக்செல் டெம்ப்ளேட் தரவுகளைக் கொடுத்தால் அது ஆராய்ந்து சொல்லும். இரண்டாவது முறை கேட்டால் அது வேறு மாதிரி சொல்கிறது. அதுவும் நமது தொழிலுக்கு எப்போதும் ஏற்றதாக இருப்பதில்லை.
எனவே நான் சொல்லும் எளிய வழி, நீங்கள் எக்செல் மூலமாகவே, நீங்கள் எப்போதும் செய்யும் எக்செல் கோப்பு மூலமாகவே நல்ல டெம்ப்ளேட் ஏற்பாடு செய்து தரவுகளை ஆராய முடியும், விளக்கப்படங்களைப் பெற முடியும். இது மிகக் கச்சிதமாக நடக்கும்.
ஒரு முக்கியமான எச்சரிக்கை. எக்செல் டெம்ப்ளேட்டை ஏஐ எவ்வாறு தயாரித்தது என்பதை நீங்கள் ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கேட்ட மாதிரியே தயாரித்துள்ளதா? அதில் அது உபயோகித்த சில அனுமானம் (assumption) அல்லது அடிப்படை (basis) சற்று மாறுபட்டுள்ளதா? என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அது செய்த அனுமானப்படி எக்செல் சரியாக வேலை செய்யும். அந்த அனுமானம் நீங்கள் நினைத்த மாதிரி இல்லை என்றால் உங்களது வெளியீடு தவறாக இருக்கக் காரணம் இருக்கிறது. எனவே நன்கு உபயோகிக்கும் முன்பு ஒரு சில மாதிரிகளை சோதித்து அதன் பின் பயன்படுத்துவது நல்லது.
4. நேரடி எடுத்துக்காட்டு (demo) - சிறு மளிகைக் கடையின் டிராக்கர்
நாம் இப்போது உண்மையாகவே ஒரு சிறிய மளிகைக் கடையில் அன்றாட சில்லறை வியாபாரத்தை எப்படி ஏஐ உதவியோடு செய்த எக்செல் டெம்ப்ளேட்டில் வரவு வைத்து, மாதந்தோறும் அதற்கான அறிக்கையை தமிழிலேயே ஒருவர் செய்து முடிக்க முடியும், ஏஐ உதவியோடு என்பதை விரிவாகப் பார்ப்போம்.
4அ. என்ன பிரச்சினை?
மளிகைக் கடையில் ஒவ்வொரு நாளும் ஆர்டர் வருகிறது. ஆனால் அதை எங்கும் ஒழுங்காக எழுதுவதில்லை. எது இருப்பில் இருக்கிறது, எது அனுப்புதல் (dispatch) ஆனது, எது சேர்ப்பு (delivery) ஆனது, எது பணம் வந்தது, எது திருப்புத் தொகை (refund) கொடுக்க வேண்டும், எது விட்டுப் போனது என்று தெரியாது.
நாம் செய்வது போல் இரண்டு பத்தி போட்டு ஆரம்பித்து, பின் இன்னும் இரண்டு சேர்த்து, இறுதியில் ஒரே மாதிரி பத்தி, ஒரே உள்ளீடு இரண்டு முறை கொண்ட குப்பை டெம்ப்ளேட் ஆகி விடுகிறது. மாதக் கடைசியில் மொத்த வருமானம் எவ்வளவு, யார் பணம் தர வேண்டும், யாருக்கு திருப்புத் தொகை தர வேண்டும் என்று கணக்குப் பார்க்க முடியாது.
கடைக்காரர் தரவுத்தள பொறியாளரையோ, குறியீடு எழுதுபவரையோ வேலைக்கு அமர்த்த முடியாது. விலை உயர்ந்த செயலியும் வேண்டாம். தினமும் உபயோகிக்கும் அதே எக்செல் கோப்பில் இதைச் செய்ய வேண்டும்.
4ஆ. என்ன உள்ளீடு?
இந்தக் கடைக்கு ஆர்டர்கள் மூன்று வழியில் வருகின்றன.
ஒன்று: வாட்ஸ்அப்பில் (WhatsApp) எழுத்து செய்தியாக அல்லது படமாக வருகிறது.
இரண்டு: சில குடும்பப் பெண்மணிகள் தொலைபேசியில் ஆர்டர் கொடுத்து மளிகை சாமான்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
மூன்று: நேரில் வந்து கையால் எழுதிய சிட்டையைக் கொடுத்து விட்டுச் செல்வார்கள்.
இந்த மூன்றையும் எளிதாக ஏஐ உதவியோடு நாம் ஏஐ தந்த டெம்ப்ளேட்டின் உள்ளீடு பகுதிக்கு ஏற்றவாறு மாற்றி விட முடியும். ஏஐ பயன்படுத்தி சி.எஸ்.வி. (CSV) கோப்பாகப் பெற முடியும், படங்களை ஒளி எழுத்து அறிதல் (OCR) செய்து மூலத் தரவு பெற முடியும், மற்றும் நேரடியாக உள்ளீடு செய்வது என்ற வகையில் இந்த மூன்று வகைகளில் வரும் தரவுகளை நாம் நமது ஏஐ தயாரித்த எக்செல்லின் உள்ளீடு தளத்தில் பதிவேற்ற முடியும்.
உள்ளீடு ஒரே இடத்தில் மட்டும். ஆர்டர் எண், தேதி, வாடிக்கையாளர், பொருள், அளவு, தொகை, வழி (channel), இருப்பு, அனுப்புதல், சேர்ப்பு, கொடுத்த தொகை, திருப்புத் தொகை, உங்கள் குறிப்பு. மஞ்சள் நிறத்தில் மட்டும் தட்டச்சு செய்ய வேண்டும். சிவப்பு, பழுப்பு நிறம் எக்செல் தானாகக் கணக்கிடும்.
4இ. என்ன தேவை?
கடைக்காரருக்குத் தேவை மிக எளிமையானது.
உள்ளீடு பதிவு செய்தால் அவர் வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. அவருக்கு தினந்தோறும் எவ்வளவு பொருள் விற்று இருக்கிறது, எவ்வளவு வருமானம் வந்து இருக்கிறது, மாதம் மாதம் மொத்த வருமானம் எவ்வளவு, ஏதாவது விட்டுப் போனதா என்ற விவரங்களை மிக எளிதாகப் பார்க்க முடிய வேண்டும்.
அவர் எந்த தரவுத்தள பொறியாளரையோ அல்லது குறியீடு எழுதுபவர்களையோ வேலைக்கு அமர்த்தாமலே இதைச் செய்ய வேண்டும். அவர்களுக்கு வேறு ஏதாவது தேவைப்பட்டால் ஏஐ உதவியோடு அவர்களே இந்த டெம்ப்ளேட்டை பதிவேற்றம் செய்து அவர்களுக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து புதிய எக்செல் டெம்ப்ளேட் பெற்றுக் கொள்ள வேண்டும்.
4ஈ. என்ன வெளியீடு?
உள்ளீடு போட்டதும் அறிக்கை தானாக வருகிறது.
மாதத்தைத் தேர்வு செய்தால் மொத்தமும் விளக்கப்படமும் தானாக மாறும். எவ்வளவு மொத்த விற்பனை, எவ்வளவு நிகர விற்பனை, எவ்வளவு வசூல் ஆனது, எவ்வளவு திருப்புத் தொகை தர வேண்டும், எவ்வளவு மீதித் தொகை (balance) வசூலிக்க வேண்டும் என்று தெரியும். வழி வாரியாக, வாட்ஸ்அப், காகிதம், தொலைபேசி, எதில் எவ்வளவு விற்பனை என்று விளக்கப்படத்தில் தெரியும். பொருள் வாரியாக எது அதிகம் விற்றது என்றும் தெரியும்.
ஆழ்ந்த ஆய்வு (deep dive) பக்கத்தில் வாடிக்கையாளர் பெயரால் வடிகட்டினால் அவரது எல்லா ஆர்டர்களும் தெரியும். நிலையால் (status) வடிகட்டினால் நிலுவை கட்டணம் யார், திருப்புத் தொகை யாருக்கு என்று தெரியும்.
நான் செய்வதையே சொல்வேன், சொல்வதையே செய்வேன். நான் இது போன்று எக்செல் உதவியோடு மூன்று நான்கு தடவை ஏஐ உதவியோடு எக்செல் டெம்ப்ளேட்டுகள் செய்த பிறகு இந்த வலைப்பூவை (blog) எழுதுகிறேன்.
இந்த நேரடி எடுத்துக்காட்டு சிறு மளிகைக் கடை டிராக்கர் (tracker) தான். இது தவிர, நான் இதே முறையில் இரண்டு டிராக்கர் செய்திருக்கிறேன். ஒன்று, மெட்டா ஏஐ (Meta AI) உதவியுடன் என் புத்தக விற்பனை டிராக்கர். இரண்டு, சாட்ஜிபிடி (ChatGPT) உதவியுடன் பி.ஓ.டி. (POD - Print on Demand) புத்தக டிராக்கர்.
நான் எனது தமிழ் ஏஐ புத்தகத்தின் விற்பனையை, அதற்காகச் செய்யும் சந்தை முயற்சிகளை எப்படி பின்தொடர்வது என்பதற்கு ஐந்து தாள்கள் கொண்ட எக்செல் டெம்ப்ளேட்டை மெட்டா ஏஐ உதவியோடு தயாரித்து அதை உபயோகித்து வருகிறேன். அது வழக்கமாக நான் ஒரு வாரத்தில் செய்யக்கூடிய டெம்ப்ளேட்டை ஒரு மணி நேரத்தில் செய்து கொடுத்துள்ளது எனக்கு. இந்த முறையைப் பற்றி மேலும் என் தமிழ் புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளேன், ஃபோட்ரான் இன்ஜினியரும்... ஏஐ சாம்பாரும்!
இரண்டாவது, நான் எப்போது தமிழ் ஏஐ புத்தகங்களை பி.ஓ.டி. (POD) மூலம் ஆர்டர் செய்தேன், எவ்வளவு செலவு செய்தேன், எவ்வளவு புத்தகம் வந்தது, யார் யாருக்குக் கொடுத்தேன், அது என்ன விலையில் கொடுத்தேன், எத்தனை மாணவர்களுக்கு இலவசமாக அளித்தேன் என்ற விவரங்களை கண்காணிப்பதற்கும் சாட்ஜிபிடியின் உதவியோடு ஒரு டிராக்கர் செய்து கொண்டேன். அதுவும் மிக நன்றாக வேலை செய்கிறது.
நான் இதை உங்களுக்குச் சொல்லும் காரணம், இது போன்று உங்களுக்கு அன்றாடத் தேவைகளை ஏஐ உதவியோடு எக்செல் டெம்ப்ளேட்டாக மாற்றி கண்காணித்தால் உங்கள் வேலையும் நன்றாக முடியும். உங்களுக்கு வரக்கூடிய மன அழுத்தம் கட்டாயம் குறையும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏஐ எப்படி மன அழுத்தத்தை குறைக்கும் என்று ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் வேலைகளை மிகச் சரியாகச் செய்து வந்தால் எங்கிருந்து வரப் போகிறது உங்களுக்கு மன அழுத்தம்?
நீங்கள் நான் கொடுத்துள்ள டெம்ப்ளேட்டை சின்ன மளிகைக் கடைக்காரர்கள் எளிதாக உபயோகிக்க முடியும். இந்தப் பதிவின் உள்ள டெம்ப்ளேட்டைப் பதிவிறக்கம் செய்து பாருங்கள்.
5. அன்றாட வாழ்க்கையில் நீங்கள் இதை எங்கு பயன்படுத்தலாம்?
எண்மத் தரவு ஆய்வு, எக்செல் அடிப்படை டெம்ப்ளேட், மேம்பட்ட எக்செல் என்று எக்செல்லில் உள்ள எல்லா விஷயங்களையும் இனிமேல் நீங்களே ஏஐ உடன் செய்ய முடியும். நம்புங்கள். நிச்சயம் முடியும்.
5அ. கற்பவர்கள் - மாணவர்கள், வேலை தேடுபவர்கள், ஜென் ஜி
மாணவர்கள் தங்கள் படிப்பு, செலவு கணக்கு, செய்ய வேண்டிய பட்டியல், வேலைக்கு விண்ணப்பித்த விவரங்கள், நேர்காணல் தேதிகளை கூகுள் கீப் (Google Keep), எம்.எஸ். டு டூ (MS To Do) போன்ற ஆயத்த செயலி இல்லாமல், தங்களுக்கு ஏற்ற மாதிரி நாமே எக்செல் மூலம் செய்து கொள்ளலாம்.
வேலை தேடுபவர்கள் தங்கள் முதலாளியோ, மேலாளரோ கேட்கும் தகவல்களை ஏஐ மூலம் ஆராய்ந்து, முக்கிய சாதக பாதகங்களை விளக்கப்பட வடிவங்களில் எக்செல் மூலமாகவே கொடுக்க முடியும். இது தான் அவர்களுக்கு நிஜமான எக்செல் கற்றல். ஒரு நாள் பயிற்சிக்கு ஐயாயிரம் கொடுத்து கற்பதல்ல. செய்து கற்பது.
உதாரணம்: ஒரு ஜென் ஜி (Gen Z) மாணவரிடம் 3 விவரக் குறிப்புகள் (resume) இருக்கிறது. ஒன்று தகவல் தொழில்நுட்பத்துக்கு, ஒன்று வடிவமைப்புக்கு, ஒன்று பயிற்சிப் பணிக்கு. ஒவ்வொன்றிலும் கவனப் புள்ளி (focus point) வேறு. தகவல் தொழில்நுட்ப விவரக் குறிப்பில் முக்கியப் புள்ளி (main point) குறியீடு, வடிவமைப்பு விவரக் குறிப்பில் முக்கியப் புள்ளி படைப்புத் தொகுப்பு.
ஒன்று ஒன் டிரைவில் (OneDrive), ஒன்று கூகுள் டிரைவில் (Google Drive), ஒன்று கைபேசியில் உள்ளூர் சேமிப்பில் சேமித்திருக்கிறார். எந்த விவரக் குறிப்பு எங்கே இருக்கிறது, எந்த நிறுவனத்துக்கு எந்த பதிப்பு அனுப்பினோம் என்று நினைவில் இல்லை. இது தான் கண்காணிப்பது கஷ்டம்.
ஏஐ உதவியுடன் செய்த ஒரு டிராக்கரில் உள்ளீட்டில் ஒரு தடவை எழுதி புதுப்பித்தால், எந்த விவரக் குறிப்பு, எந்த கவனப் புள்ளி, எங்கே சேமித்திருக்கிறோம், எந்த நிறுவனத்துக்கு அனுப்பினோம் என்று அறிக்கை காட்டும். அடுத்த விண்ணப்பத்திற்கு முன் பார்த்து சரியான விவரக் குறிப்பை எடுக்கலாம். இது கைக்கு அடக்கமாக இருக்கும்.
5ஆ. இல்லத்தரசிகள் - இளைஞர்கள்
குடும்பப் பெண்மணிகள் தொலைபேசியில் ஆர்டர் கொடுப்பது போலவே, தங்கள் வீட்டுக் கணக்கையும் எக்செல்லில் வைக்கலாம். மாத மளிகைச் செலவு, குழந்தைகள் கல்விக் கட்டணம், செய்ய வேண்டிய வேலை பட்டியல், எந்தத் தேதியில் என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களைத் தமிழிலேயே ஒரு டெம்ப்ளேட்டில் வைக்கலாம்.
வாட்ஸ்அப்பில் வரும் பில் படத்தை ஏஐ உதவியோடு ஒளி எழுத்து அறிதல் செய்து சி.எஸ்.வி. ஆக்கி, அதை எக்செல் உள்ளீட்டில் போட்டால் போதும். மற்றதை எக்செல் பார்த்துக் கொள்ளும்.
உதாரணம்: ஒரு வீட்டம்மா மாத மளிகை வாங்குகிறார். மாத கடைசியில் எவ்வளவு செலவு, எங்கே செலவு என்று நினைவில் இல்லை. உள்ளீட்டில் ஒரு தடவை எழுதினால், அறிக்கையில் மாத மொத்தம், எந்த கடையில் எவ்வளவு என்று காட்டும்.
இளைஞர்கள் தங்கள் கைச் செலவு, செலவு கணக்கு, படிப்புத் திட்டத்தை இதே மாதிரி செய்யலாம். ஆயத்த செயலி அவர்களுக்கு ஏற்ற மாதிரி இருக்காது. அவர்களே செய்த டெம்ப்ளேட் அவர்களுக்கு ஏற்ற மாதிரி இருக்கும்.
5இ. சிறு தொழில் - இறுதியாக, மிக முக்கியமாக
மீன் கொடுப்பது அல்ல. மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது. இது தான் இந்த முறை.
சிறு தொழில் செய்பவர்களுக்குத் தான் இது மிகவும் தேவை. மளிகைக் கடை போலவே, எந்தச் சிறு கடையும், சிறு சேவை நிறுவனமும் தங்கள் ஆர்டர், இருப்பு, சேர்ப்பு, கட்டணம், திருப்புத் தொகை ஆகியவற்றை இதே டெம்ப்ளேட்டில் வைக்கலாம்.
தேவை மாறினால், டெம்ப்ளேட்டை ஏஐயில் பதிவேற்றம் செய்து, “இதில் இந்த மாற்றம் செய்” என்று சொன்னால் புதிய டெம்ப்ளேட் கிடைக்கும்.
6. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
லோட்டஸ் 123 காலம் முதல் இன்றைய ஏஐ விரிப்புத்தாள் எக்செல் காலம் வரை எக்செல் இல்லாமல் உலகத்தில் எந்த நிதி நிறுவனங்களும் இயங்குவதில்லை. நமது அன்றாட நிதித் தேவைகள், குடும்பக் கணக்குகள் பலவற்றிற்கு இந்த எக்செல் பாலமாக இருந்து வருகிறது.
மாதிரியில் கடினமாகத் தோன்றினாலும், “கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை” என்பது போல, ஏஐயில் எக்செல்லை உபயோகிக்கத் தொடங்கிய பிறகு உங்கள் பாதை செம்மையாக ரோஜா மலர் தூவிய சிவப்பு கம்பளம் விரித்த பாதையாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். நான் ஒன்றும் அதிகம் சொல்லவில்லை. இது நிதர்சனமான உண்மை.
அதைப் பற்றி நன்கு படித்து ஏஐ உதவியுடன் நாமே நமது வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வோமே.
இந்த டெம்ப்ளேட்டைப் பதிவிறக்கம் செய்து, ஒரு சில மாதிரி உள்ளீடுகளைப் போட்டுப் பாருங்கள். உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி ஏஐ உதவியோடு மாற்றுங்கள். நீங்களே எக்செல் வல்லுநர் ஆவீர்கள்.
இந்தத் தொடரில்
Blog 1: ஆங்கிலம் தெரியாதது குறையா? வாய்ப்பை இழப்பதுதான் குறை!
Blog 2: எக்செல்லை நீங்கள் இயக்க வேண்டாம், ஏஐ இயக்கும் உங்களுக்காக கச்சிதமாக - நீங்கள் இப்போது படித்தது இதுதான்.
Blog 3: (அடுத்து வருவது) தவறு செய்தால் திட்டுவார்கள்; தெரியவில்லை என்றால் கேட்க முடியவில்லை!
🤝 கண்ணன் மீ உடன் இணையுங்கள்
Blog: radhaconsultancy.blogspot.com | LinkedIn | Instagram | Facebook | YouTube | X / Twitter | Amazon Author
சேவைகள்: AI பயிற்சி & விழிப்புணர்வு • தனி நபர் மியூச்சுவல் ஃபண்ட் வழிகாட்டுதல் • Soft Skills & Career Guidance • மாணவர்களுக்கு Project வழிகாட்டுதல்
💡 பாரபட்சமற்ற, தரமான ஆலோசனைக்கு நம்பிக்கையுடன் அணுகுங்கள்!
ஏஐ-யை தமிழில் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? என்னை அணுகுங்கள் - Blog Contact Us வழியாக செய்தி அனுப்புங்கள்.
📖 புத்தகம் பற்றி
ஃபோட்ரான் இன்ஜினியரும்... ஏஐ சாம்பாரும்! - எல்லோருக்கும் ஏஐ! தமிழில் எளிய ஏஐ புத்தகம். 3 பாகங்கள், எளிய தமிழ், அன்றாட உதாரணங்கள்.
வாங்க: Amazon | Google Play Books | Author Page
— கண்ணன் மீ • காரைக்குடி • தமிழில் AI தொடர் - Blog 2 —
#தமிழில்ஏஐ #எக்செல் #ஏஐ #சிறுகடைகணக்கு #கடைகணக்கு #டிராக்கர் #AIinExcel #ExcelinTamil #SmallShopTracker #AITamil #ExcelTips #FreeTemplate

