Friday 18 November 2016

பணமில்லா சமூகத்தை நோக்கி - Towards cashless society

இது நேயர் விருப்பம், வாசகர் வட்டம் என்று எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம். சமீபத்தில் காரைக்குடியில் முத்தூராணி பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டேன். வாசகர் ஒருவர் இந்த 500, 1000 படுத்தும் பாடு இருக்கின்றதே அது பெரும் பாடு என்றார். இதை பற்றி நிறைய பேருக்கு நிறைய கேள்விகள் இருகின்றது. எழுதலாமே என்று கோடிட்டு காட்டினார். கோடு போட்டால் ரோடு போடலாம் தானே!! முயற்சிக்கலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்த கட்டுரை. பரஸ்பர நிதி பற்றி விலாவரியாக எழுதுவது போல் எளிமையான விஷயம் இல்லை. இருந்தாலும் தெரிந்ததை புரிந்ததை பகிர்வோமே என்று அடியேனின் முயற்சி இது.  500, 1000 என்று தற்போதைய சிக்கலை ஆராய்வதற்கு முன் சில அடிப்படை விஷயங்களை புரிந்துகொள்வோம். அப்போதுதான் தற்போதய அரசாங்கத்தின் நோக்கமும் காரணங்களும் அதன் தாக்கமும் தெளிவாக புரியும். கருப்பு பணம், போலி பணம், இரண்டும் ஒன்றா? இல்லை வெவ்வேரா? இரண்டும் ஒன்று என்று நீங்கள் நினைத்திருந்தால், எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். இரண்டும் வெவ்வேறு. எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

கருப்பு பணம்: 
அது என்ன கருப்பு பணம்? நமது பண நோட்டுக்களை எல்லாம் பச்சையாகவோ சிவப்பாகவோ இப்போது வயலட் கலரில் கூட ஹோலி பண்டிகை கலரை போல ரங்கோலி ஆக தானே இருக்கிறது. ஆனாலும் கருப்பாக இல்லாத பணத்திற்கு கருப்பு பணம் என்று பெயர் வைத்துள்ளோம். வெள்ளையாக இல்லாத பணத்தை வெள்ளை பணம் என்று கூறுகின்றோம் . ஆக கருப்பு வெள்ளை என்பதெல்லாம் கலரில் இல்லை, அதன் தன்மையில் உள்ளது.

பணத்தை பொறுத்த வரை, அதன் மதிப்பு, செல்லுபடியாகும் தன்மை என்பது அதன் வெளியீட்டாளரை பொறுத்து அமைகிறது. கருப்பு பணம் மற்றும் வெள்ளை பணம் எல்லா பணத்தின் வெளியீட்டாளரும் மத்திய ரிசெர்வ் வங்கி தான். கருப்பாக இருந்தாலும் வெள்ளையாக இருந்தாலும் மத்திய வங்கி தந்த எல்லா தாள்களும் செல்ல தக்கவையே.  எல்லாம் பத்தரை மாற்று தங்கம் தான். என்ன புரிந்தது போல் இருக்கிறதா? இல்லை அதிர்ச்சியாக இருக்கிறதா? எப்படி இருந்தாலும் இது தான் நிதர்சனம்! பின் ஏன் இந்த கருப்பு வெள்ளை பாகுபாடு. பார்க்கலாம்..

உதாரணமாக நமது வருமானம் ஆண்டிற்கு ரூபாய் 10 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நாம் தற்போதைய வருமான வரி சட்ட திட்டத்தின் படி 20% slab யின் படி சுமார் ஒன்றிலிருந்து இரண்டு லட்சத்திற்குள் வரி கட்டுமாறு வரும். இந்த வரி கட்டுதலை தவிர்ப்பதற்காக சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டு நமது வருமானம் 10 லட்சம் இல்லை 4 லட்சம் தான் என்று அரசாங்கத்திடம் கூறி, அதற்குரிய குறைந்த வரியை மட்டும் கட்டிவிட்டு மீதம் 6 லட்சத்திற்கான வரியை காட்டாமல் விடுவது பலரின் பழக்கம் தான். இப்போது இந்த 4 லட்சம் என்பது வெள்ளை பணமாக கருதப்படுகின்றது. 6 லட்சம் என்பது கருப்பு பணமாக கருதப்படுகின்றது.  எனவே அரசாங்க சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டு கணக்கில் காட்டப்படாத இந்த 6 லட்சம் பெரும்பாலும் பிரோவிலும், மெத்தைக்கு அடியிலும் இருக்கலாம். எப்படி எப்படியெல்லாம் மறைக்க முடியுமோ அப்படியெல்லாம் மறைக்க படுகின்றது. ஆனால் மொத்த கருப்பு பணத்தில் எல்லாமே இப்படி மறைக்கப்படுவதில்லை. ஒரு கணக்கின் படி இது சுமார் 6% இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அப்படி என்றால் மீதம் எங்குள்ளது? இது பெரும்பாலும் பினாமி பெயரிலும் இடமாகவோ, வீடாகவோ, நகையாகவோ, வங்கிகளிலோ , திரும்பவும் கூறுகிறேன் வங்கிகளிலோ, பங்கு பத்திரங்களாவோ இருக்கலாம். இப்படி எந்த ரூபத்திலோ எங்கிருந்தாலும் அது கருப்பு பண முதலீடே!

எனவே எளிதாக புரிய, வரி கட்ட வேண்டிய நேரத்தில் கட்டாமல் இருந்து விட்டு நாம் அன்றாடம் புழங்கும் பணமே கருப்பு பணம் தான். சரி, நானோ நீங்களோ கருப்பு பணம் வைத்திருப்பதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை? அதுவும் மத்திய வங்கி தந்த பணம் தானே என்று எண்ணலாம். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், அரசாங்கத்திற்கு வர வேண்டிய வரி வருமானம் இல்லாமல் போகிறது இந்த கருப்பு பணத்தினால். எனவே நமது கருப்பு 6 லட்சமாக இருந்தாலும் 6000 கோடியாக இருந்தலும் கருப்பு , கருப்பு தான்! அதை தடுக்கவே அரசாங்கத்தின் முயற்சிகள் இதுபோன்று சில நிகழ்வுக்கள்.

போலி பணம்:
சரி அடுத்த அத்தியாயத்திற்கு வருவோம். இது முந்தயததை விட மிக ஆபத்தானது. பெயரிலேயே புரிந்திருக்கும். இந்த பணம் நமது மத்திய ரிசெர்வ வங்கி வெளியிட்ட பணம் இல்லை. ரிசர்வ் வங்கியை தவிர வேறு யார் பணம் அச்சடிக்கின்றார்கள்? நிறைய பேர் என்று தகவல்.நம் நாட்டிலும் உளர், அயல் நாட்டிலும் உளர். இதை படித்தவுடன் ஒரு கேள்வி எழலாம்.. நமது நாடு புரிகிறது, அயல் நாட்டில் ஏன் நமது பணம் அச்சடிக்கப்பட்ட வேண்டும், அதனால் அவர்களுக்கென்ன லாபம்? என்ன இவ்வளவு வெகுளியாக கேள்வி கேட்கிறீர்கள்..அயல் நாட்டில் நமது பணம் அச்சடிப்பதற்கு தீவிரவாதம் என்று கருத்து நிலவுகின்றது.. இது அரசாங்கத்திற்கு மிக மிக பெரிய சவால். இந்த போலி பணம் நமது நாட்டின்  பொருளாதாரத்தை பல வகைகளில் பாதிக்கிறது. எனவே இந்த போலி பணத்தை தடுப்பதும் அரசாங்கத்தின் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று. இப்போது புரிகிறதா ஏன் இந்த 500, 1000 என்ற அவஸ்தைகள்! இந்த கருப்பு பணத்தையும் போலி பணத்தையும் தடுப்பதர்காகவே உயர் மதிப்பு பணமாக உள்ள 500, 1000 (High Denomination Notes ) பண தாள்களை செல்லாது என அறிவித்து புதிய தாள்களை புழக்கத்தில் கொண்டு வருவதன் மூலம் இந்த கருப்பு மற்றும் போலி பணம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்பு வெள்ளையாகுமா?
சரி எப்படி கருப்பு வெள்ளையாகிறது என்று பார்க்கலாம். நாம் முன்னர் கூறிய கணக்கில் வராத 6 லட்சத்தை அலமாரியிலிருந்து எடுத்து அது 500, 1000 தாளாக  இருந்தால் அதை உபயோகிக்க இரண்டே வழிதான். ஒன்று, வங்கியில் கொடுத்து தற்போதைய சட்ட திட்டத்தின் படி வரியும் மேலும் அபராத வரி 200% கட்டி மீதம் இருக்கும் சொற்ப பணத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம். நாம் பெற்றுக்கொண்ட சொற்ப பணம் தற்போது வெள்ளையாகிவிட்டது.  இரண்டாவதாக, இருக்கும் கருப்பு பணம்  வெளியில் சொல்ல முடியாத நேர்மையற்ற முறையில் வந்திருந்தால் அதை மாற்றுவது கடினம் தான். அரசாங்கத்தின் வரி அலுவலகம் கேட்கும் கேளிவிகளுக்கு பதில் சொல்ல சிரமப்படுபவர்களுக்கு, இந்த 6 லட்சத்தையுமே உபயோகப்படுத்தாமல் இருக்கவேண்டியதுதான். இந்த முறையில் இந்த பணம் வெள்ளையாக மாற சாத்திய கூறுகள் இல்லை. இந்த பணமெல்லாம்  உபயோகமற்றதாக இருக்கும்.  Whatsapp memes க்கு வந்த நகைச்சுவை போல் கிலோ ரூபாய் 12 க்கு பேரீச்சம்பளமாக மாற்றவேண்டியது தான்.  இவ்வாறு கருப்பின் நடமாட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதிலிருந்து ஒன்று புரிந்திருக்கலாம், கருப்பு பணத்தை பணமாகவே வைத்திருப்பவர்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவார்கள். முன்னர் கூறியபடி பினாமி பெயர்களில் பல வகை முதலீடாக இருக்கும் கறுப்பிற்கு இந்த HDN Demonetisation மூலம் வரும் தாக்கங்கள் குறையும். இன்னொன்றும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும், நமது கருப்பு குறைந்த மதிப்பு தாள்களாக இருக்கும் பட்சத்தில் இந்த நிகழ்வுகளால் பாதிக்கப்படுவதில்லை. அதிக அளவிலான கருப்பு பணம் குறைந்த மதிப்பு தாள்களாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு. எனவே தான் குறைந்த மதிப்பு காளைகளின் செல்லுபடி தன்மையில் அரசாங்கம் கை வைக்கவில்லை. 500, 1000 செல்லாதபோதே இவ்ளோ பாடு என்றால் எல்லா பண தாள்களும் செல்லாது என்று அறிவித்து புது தாள்களை கொண்டு வருவது அவ்வளவு எளிதாக நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. இன்னும் ஒரு கொசுறு தகவல்.. இது போன்று பண தாள்கள் செல்லாது என்று அறிவிப்பது இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்னர், 1946 மற்றும் 1978 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக தற்போதைய நிகழ்வுகளின் படி போலி பணம் எவ்வாறு கட்டுப்படுத்த படுகின்றது என்று பார்க்கலாம். இது எளிதான விஷயம் தான். போலி பணம் வைத்திருப்பவர்கள் யாரும் வங்கியில் சென்று அதை நல்ல பணமாக மாற்ற முயல மாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொரு வங்கியும் பணத்தை மாற்றுவதற்கு முன் அது அசலா அல்லது போலியா என்று பார்த்தே வாங்கப்படுகிறது. எனவே  இன்னும் சில காலத்திற்கு போலி பண நடமாட்டம் மட்டுப்படும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. திரும்பவும் படியுங்கள், ஏன் சில காலம் என்று குறிப்பிட்டேன் என்று புரிகிறதா? ஒவ்வொரு முறை புதிய தாள்கள் வெளியிடும் போதும் மேம்படுத்தப்பட்ட முறைகளில்  வெளியிடப்படுகின்றது. அந்த வகைகளை கற்று தேர்ந்து, போலி தாள்களும் வந்து விடுகின்றது. அது சில மாதங்களா அல்லது வருடங்களா என்பது அந்த தாளின் புதிய பாதுகாப்பு அம்ஸங்களை பொறுத்தே!

பணமில்லா சமூகத்தை நோக்கி
எனவே தற்போதைய அறிவிப்பானா 500, 1000 செல்லாது என்பது கருப்பு பணம் நடமாட்டத்தையும் போலி பணம் நடமாட்டத்தையும் குறைக்கும். அதே சமயம் இன்னொரு முக்கியமான விளைவானது அன்றாட தேவைகளுக்கு பணம் உபயோகிப்பதை தவிர்த்து மற்ற மின்னணு சேவைகளின் மூலமாகவோ, வங்கி காசோலைகள் மூலமாகவோ, கடன் அட்டைகள் மூலமோ அல்லது புது நவீன mobile செயலிகள் மூலமோ பணத்தை கொடுப்பதும் வாங்குவதும் அதிகரிக்கிறது. வரும் காலங்களில் இது மிகுந்த அளவில் பயன்படுத்தப்படும் போது கருப்பு பணம் மற்றும் போலி பணம் இரண்டுமே காணாமல் போய் விட வாய்ப்புகள் உள்ளது. ஆக நாம் பணமில்லா சமூகத்தை நோக்கி அடி வைத்து முன்னேறுகிறோம் என்று கொள்ளலாம்.

No comments:

Post a Comment