மேலே கூறிய, அளவுக்கு மீறிய கடன் அட்டை செலவைக் குறைப்பதற்கு பற்று அட்டை பரிவர்த்தனை நல்லதொரு மாற்று. இதில் முதலில் செலவு, பின்னர் பணம் கட்டவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. கையிலே காசு வாயிலே தோசை என்பது போல, வங்கியில் பணமிருந்தால், பரிவர்த்தனை செல்லும், இல்லையெனில் இதை உபயோகிக்க முடியாது. இது சமீப காலத்தில் மிகவும் பிரபலம். நிறைய வங்கிகளில் ஏடிஎம் அட்டையும் பற்று அட்டையும் ஒன்று தான். இந்த இரண்டையும் பெரும்பாலும் வங்கிகளோடு பன்னாட்டு நிறுவனமான மாஸ்டர் (MASTER) மற்றும் விசா (VISA) நிறுவனங்கள் மூலம் இந்த அட்டைகள் வழங்கப்படுகிறது.
இதில் சிறிதளவு பணம், சேவைக்காக எடுக்கப்படுகிறது. இது எளியோர்களைப் பாதிக்கும் என்ற எண்ணத்தில் இந்தியாவிலேயே நமது மத்திய வங்கி, வங்கிகளின் துணையோடு ரூபே கார்டு (RUPAY Card) விநியோகிக்கிறது அரசாங்கம். இந்த சேவைக்காக நாம் செலுத்தும் பணம் மிக மிகக் குறைவு. இது போக, பெட்ரோ கார்டு (Petro card), டைம்ஸ் கார்டு (Times card) இன்னும் எத்தனையோ பெயர்களில் பற்று அட்டைகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதில் உள்ள சாதக, பாதகங்கள் என்று பார்த்தால், இந்த அட்டைகளின் அடிப்படை தகவல்களைத் திருடி, போலி அட்டைகள் தயாரித்து, பணம் திருடுவது பல நிகழ்ந்துள்ளது. அது ஒரு மறுக்க முடியாத உண்மை. அதை குறைக்க, மெக்னட்டிக் ஸ்ட்ரிப் (magnetic strip) போக, 'சிப்' அடிப்படையிலான (chip based) அட்டைகள் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளது.
இதில் அட்டையைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன் பின் நம்பரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். எனவே, அட்டைகள் காப்பி அடிக்கப்பட்டாலும், நம்மிடம் உள்ள பின்நம்பர் இல்லாமல் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது.
3) கணினி பணப் பரிமாற்றம் (IMPS/NEFT)
அடுத்ததாக, கணினி மூலம் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்குப் பணம் மாற்றுவது. இதிலும் பல வகை உள்ளது. முதலாவதாக, இணையத்தின் மூலம் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மாற்றுவது. இவ்வாறு செய்வதற்கு நமக்கு தேவையான விவரங்கள் - இணைய இணைப்பு (internet) வேண்டும். நமது கணக்கின் விவரங்களை அறிய அதற்குரிய கடவு சீட்டு (username) மற்றும் ரகசிய தகவல் (password) இருக்க வேண்டும். மேலும், பணம் பெறுபவரின் பெயர், வங்கி கணக்கு எண், மற்றும் எம்ஐசிஆர் (MICR) மற்றும் ஐஎஃப்எஸ்சி (IFSC) தகவல்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இவ்வளவும் இருந்தால், நாம் நமது கணக்கிலிருந்து அவர்கள் கணக்குக்குப் பணத்தை மாற்றிவிடலாம்.
மிகவும் படித்தவர்களும், இணையம் பற்றி தெரிந்தவர்களும் இதை உபயோகித்து வருகிறார்கள். தற்போதைய காலத்தில் நிறைய பேருக்கு இது கடினமான செயலாகவும் இருக்கிறது. இது போன்று பணம் மாற்றுவதில் நெஃப்ட் (NEFT - National Electronic Fund Transfer) மற்றும் ஐஎம்பிஎஸ் (IMPS -Immediate Payment Services) என்று சிற்சில வேறுபாடுகளுடன் நிறைய வழிமுறைகள் உள்ளன. இதன் மூலம் எந்த உச்ச வரம்பின்றி பெரிய தொகையைகூட உடனடியாக மாற்றமுடியும். இது வங்கி காசோலைகளைவிட மிக துரிதமான வகையில் பணத்தை மாற்றமுடிகிறது. இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது, நமது தகவல்கள் தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ, அவர்களுக்கு நமது வங்கிக் கணக்கின் சரித்திரமே தெரியவரும். பணம் திருடு போகவும் வாய்ப்புகள் அதிகம். இந்த சிக்கல்கள் இல்லாமல் பணத்தை எளிதாக மாற்ற கைபேசியில் நிறைய புது செயலிகளும் வழிமுறைகளும் உள்ளன. அவற்றை இப்பொது பாப்போம். கைபேசியில் பணப் பரிமாற்றம் செய்வதற்கு அடிப்படையாக இரண்டு வெவ்வேறு செயல் முறைகள் உள்ளது. ஒன்று, நாம் இணையத்தில் கணினி மூலம் செய்த எல்லாவற்றையும் கைபேசியில் செய்வது, மற்றொன்று கீழே குறிப்பிட்டுள்ள செயல் முறைகளின் மூலம் கணினியைவிட விரைவாக எளிதாக மற்றும் பத்திரமாக பணத்தை மாற்றும் வழிமுறைகள்.
4) மொபைல் மணி (MOBILE MONEY)
அட்டைகள் இல்லாமல், ரூபாய் நோட்டுகள் இல்லாமல், கைபேசியில் இருந்து கைபேசிக்கு பணம் அனுப்புவதை 'மொபைல் மணி' என்று கூறலாம். இந்த சேவையை பல தனிப்பட்ட நிறுவனங்களும், தொலைபேசி நிறுவனங்களும், வங்கிகளும் தருகின்றன. இதிலும் சில சில வேறுபாடுகளுடன் பண பரிமாற்றத்துக்காக பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான மூன்று பணப் பரிவர்த்தனை வழிகளை இப்போது பார்ப்போம்.
1. கைபேசி மூலம் மின்னணு பணப்பை மூலம் (Digital Wallet)
2. சூட்டிகை கைபேசி மூலம் வங்கிகளுக்கு இடையே பண மாற்றல் (Smart phone transfer)
3. சாதாரண கைபேசியிலிருந்து வங்கிகளுக்கிடையே பண மாற்றல் (USSD Transfer)
கைப்பேசி மூலம் மின்னணு பணப்பை மூலம் பணப் பரிவர்த்தனை (Digital Wallet):
தற்போது இந்த சூட்டிகையான கைபேசியிலிருந்து மின்னணு பணப் பைகளுக்கு பணம் மாற்றும் முறையை பற்றி புரிந்துகொள்வோம். பணம் பெறுபவர், கொடுப்பவர் இருவரிடமும் ஸ்மார்ட் போன் மற்றும் நாம் உபயோகிக்க நினைக்கும் நிறுவனத்தின் செயலி இருக்க வேண்டும். இந்த முறையில் மிகவும் பிரபலமாகி வரும் செயலி பேடிஎம் (Paytm). இந்த செயலியை பணம் செலுத்துபவர் தரவிறக்கம் செய்து அதில் அவரது விவரங்களையும் வங்கி கணக்குகளையும் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர், அவரது வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை அவர் மின்னணு பணப்பைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பணம் பெறுபவருக்கு அவரது கைபேசியில் இந்த பேடிஎம் செயலியை வைத்திருக்க வேண்டும். இப்போது செலுத்துபவர் அவரது பேடிஎம் செயலியிலிருந்து வாங்குவோரின் கைபேசி எண்ணைப் பதிந்தவுடன் எவ்வளவு பணம் மாற்ற விரும்புகிறாரோ, அவ்வளவு பணம் வாங்குவோரின் பேடிஎம் செயலியில் வரவு வைக்கப்படும். கொடுத்தவரின் செயலியில் கழிக்கபடும். வாங்குபவர் வாங்கிய பணத்தை அந்த பணப் பையில் இருந்தவாறே மற்றவருக்கு மாற்ற முடியும். அல்லது தேவைப்பட்டபோது வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். வங்கிக்கு மாற்றும் சேவைகள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்; கட்டணங்களும் மாறுபடலாம். தற்போது மிகவும் பிரபலமான மின்னணு பணப் பைகள் பேடிஎம், ஃப்ரீசார்ஜ் (Freecharge), மொபிக்விக் (Mobikwik). இந்த நிறுவனங்கள் எல்லாம் தனிப்பட்ட நிறுவனங்கள். இதே போன்ற சேவையை சில வங்கிகள் அவர்களது செயலிகள் மூலம் தருகிறது. உதாரணம், ஐசிஐசிஐ பாக்கெட்ஸ் (ICICI Pockets).
5) யூபிஐ (Unified Payment Interface)
யூபிஐ என்பது மூன்றாவது நிறுவனம் ஏதுமின்றி, நமது வங்கிக் கணக்கிலிருந்து பெறுவோரின் வங்கி கணக்குக்கு அவரது பெயரோ, வங்கிக் கணக்கு எண் எதுவும் தெரியாமல், வாங்குவோரின் கைபேசி எண் மட்டும் வைத்து பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இவ்வாறு செய்வதற்கு நாம் அதனில் யூபிஐ மென்பொருள் செயல்படக்கூடிய செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் நமது கணக்கு விவரங்களை செலுத்தி மின் அஞ்சல் முகவரி போன்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் (virtual ID). இந்த தனி அடையாளத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து, நமக்கு வரவேண்டிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், நமது வங்கி கணக்கிலிருந்து அவரது வங்கி கணக்குக்கும் இந்த யூபிஐ செயலி மூலம் பணத்தை அனுப்ப முடியும். இது மத்திய ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள செயலி ஆகும். நாம் பணம் பெறும்போது நமது வங்கிக் கணக்கு எண், வங்கி பெயர் போன்ற விவரங்களைத் தெரியாத நபர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியதில்லை. நமது கைபேசி எண் மற்றும் virtual id மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
நாம் உபயோகிக்கும் நிறைய வங்கிகள் இந்த யூபிஐ செயலி திட்டத்தில் இணைத்துள்ளதால், நாம் யாருக்கு வேண்டுமானாலும் எளிதாக பணத்தை மாற்றிவிட முடியும்.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். மின்னணு முறையில் கணினி மூலம் பணம் மாற்றுவதைவிட இந்த வழிமுறை மிகவும் எளிதானது மற்றும் பத்திரமானது. நமது கணக்கு பற்றிய தகவல்கள் பறிபோவதற்கு வாய்ப்புகள் குறைவு. இதில் மின்னணு பணப்பை போன்ற உச்ச வரம்புகள் ஏதும் இல்லை. (அதிகபட்சம் ரூ.20,000 வரை டிஜிட்டல் வாலெட் மூலம் பரிமாற்றம் செய்யலாம்!)
6) ஆதார் வழி பண பரிமாற்றம் (ADHAAR based transfer)
நமது வங்கிக் கணக்கும் ஆதார் எண்ணும் இணைக்கப்படும்போது ரகசிய எண் மற்றும் அதுசார்ந்த தகவல்கள் இல்லமால், முழுக்க முழுக்க ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்யமுடியும். இதில் ரகசிய எண்ணுக்கு பதிலாக கை ரேகை பாதுகாப்பு அம்சமாக உபயோகிக்க படுகிறது. எனவே, கணக்கு வைத்திருப்போரின் கைரேகை இல்லாமல், அந்தக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாததால் இது மிகவும் பாதுகாப்பானதாகும். இதற்கு அடிப்படை தேவையான விவரங்கள் ஆதார் எண் அதோடு இணைந்த வங்கி கணக்கு எண் மற்றும் கை ரேகை மட்டுமே.
7) யூஎஸ்எஸ்டி (USSD - Unstructured Supplementary Service Data)
நான் முன்னாள் கூறிய பணப் பரிமாற்றங்களுக்கு இணைய இணைப்பு, உயர்ரக கைபேசிகள் மற்றும் சற்று படிப்பறிவு தேவைப்படுகிறது. இந்தியாவில் இணைய இணைப்பு எல்லா அடித்தட்டு மக்களுக்கும் எட்டப்படாத பட்சத்தில், கேஷ்லஸ் டிரான்ஷாக்சன் வகை பணப் பரிமாற்றங்கள் சாத்தியமா என்றால் இல்லைதான். அப்படியெனில் நாம் முன்னர் பார்த்த குப்பனும் சுப்பனும் எப்படி பணமில்லாமல் வியாபாரம் செய்வார்கள். அவர்களுக்காகத்தான் இந்த யூஎஸ்எஸ்டி வந்திருக்கிறது.
இதற்கு இணைய இணைப்பு தேவையில்லை. சாதாரண கைபேசி இருந்தால் போதும். இதற்கு அடிப்படை தேவை, வங்கி கணக்கு உதாரணமாக, ஜந்தன் கணக்கு இருந்தாலே போதும். இந்த கணக்கு எண்ணையும், கைபேசி எண் இரண்டையும் இணைக்க வேண்டும். இது வாங்குவோருக்கும் பெறுவோருக்கும் பொருந்தும். வங்கி கணக்கோடு கைபேசி இணைக்க பட்ட பின் குறுஞ்செய்தி போன்ற சரியான குறியீடுகளோடு நாம் ஒரு கைபேசியிலிருந்து இன்னொரு கைபேசிக்கு தகவல் அனுப்புவதால், நமது வங்கிக் கணக்கிலிருந்து அவரது வங்கி கணக்குக்கு பணம் மாறிவிடும்.
என்ன, இது எளிமையாக தானே இருக்கிறது? உபயோகிக்க ஆரம்பித்து பணமில்லாப் பரிவர்த்தனை செய்வோமா? இதனால் வங்கிகளுக்கு செல்வது, பணத்தைப் பாதுகாப்பது, ஏடிஎம் வரிசையில் நிற்பது போன்ற தொல்லைகள் இல்லை. நமது செளகரியத்துக்கு ஏற்ப 24 மணி நேரத்தில் தோதுபட்ட நேரத்தில் தோதுபட்ட இடங்களில் இருந்து பணத்தை மாற்றவும் பெறவும் முடிகிறது. சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல, பழக பழக நிச்சயம் இது எளிதாகி விடும். முயற்சித்துத்தான் பாருங்களேன்!