Friday, 2 April 2021

கம்பனும் தற்கால உளவியலும்

காரைக்குடி 2021 கம்பன் விழா பன்னாட்டு கருத்தரங்கில் வெளியிடப்பட்ட நூலில் இந்த கட்டுரை இடம் பெற்று இருக்கிறது 

கம்பனின் கதாபாத்திர படைப்புகள்,    பேசு பொருள்கள், பேசும் தகைமைகள்,  கூர்மையானவை, அறிவு செறிந்தவை, ஆச்சரியப்பட வைப்பவை. கவிதை நடைஉவமை, நயங்கள் படிக்க படிக்க திகட்டாதவை.  கம்பனின் காலம் ஆறாம் நூற்றாண்டு. நடப்பதோ இருபத்தோராம் நூற்றாண்டு. (2020)  ஆறாம் நூற்றாண்டு கருத்துக்கள் 21ம் நூற்றாண்டிற்கு பொருந்துமா?  பரிணாம வளர்சியின் புதிய பரிணாமங்களை தன்னுள் கொண்டுள்ளதா? 1960 களில் பட்ட படிப்பு என்றால் வேதியியலும், கணிதமும்தான். இன்று 2020 ல் உளவியல், நிர்வாகவியல் என்று ஏரளாமான பட்ட படிப்பகள். இதில் பயிற்றுவிக்க படிகின்ற, பேசு பொருள்கள் கம்பனில் தெரிகிறதா?   கம்பனது பார்வை, ஆண்டுகள் தாண்டி செல்கின்ற பார்வையா? இன்றய புதிய பரிமாண பார்வையின் உளவியலையும், நிர்வாகவியலையும்   கம்பன் எவ்வாறு தந்திருக்கிறான் என்று  இப்போது பார்ப்போம்.

மனிதவள உளவியல் மேம்பாட்டு வல்லுனர்களும், நிர்வாக இயல் வல்லுனர்களும் விவரிக்கும் முக்கிய கருத்தாளங்களும், அவற்றில் அன்றாடம் உபயோகிக்கும் சொல்லாடல்கள், சிலவற்றையும் இங்கு நினைவு கொள்வோம்

1.    Nonverbal Communication:  உளவியலில் முக்கியமான ஒரு பகுதி, பேசுவது இன்றி, சொல் இன்றி வாய்மொழி இன்றி உடல் மொழி கொண்டு எதிராளியின் நிலை அறிவது.

2.  Deep Dive Analysis: நுனிப்புல் மேயாமல் இருக்கும் எல்லா தகவல்களையும் ஆராய்ந்து அதன் உண்மை தன்மையை அறிந்து கலையெடுத்து உபயோகமான தகவல்களை உபயோகமான வகையில் எளிமைபடுத்தி செய்ய வேண்டிய செயலை தீர்மானம் செய்வதாகும்.

3.  Clarity of Thought: ஒரு செயலை செய்யும் முன் இந்தச் செயல் இவ்வாறு வந்தது, சிக்கல்கள் என்னென்ன அவற்றை வரும் காலங்களில் எப்படி மாற்றி செய்வது, முடிவு சிறப்பாக அமையுமா என்று மனதளவில் ஆராய்ந்து செயலுக்கு வடிவம் கொடுப்பது.

4.  Team Work: குழுவாக செயலை செய்வது, குழுவாக அனைவரையும்  அணைத்து செல்வது, அனைத்து கருத்தாளங்களுக்கு மதிப்பளிப்து,  ஒவ்வொரு கருத்தின்  உண்மை தண்மை அறிவது, முடிவாக செயலை சிறப்பாக செயல்படுத்துவது. அரசாங்கத் திட்டங்கள் முதல், தொழில்நுட்ப மென்பொருள் திட்டங்கள் வரை, செயல் முறை அவ்வப்போது விவாதிக்கப்பட்டு அதில் காலத்திற்கு ஏற்ற பல மாறுதல்கள் செய்து புது வடிவம் கொடுக்கப்பட்டு வேண்டிய பலன் பெற குழுவாக  முயற்சி செய்வது.

5.  Confidence: கொஞ்சம் தகவல் இருந்தாலும் எவ்வளவு அனுபவம் இருந்தாலும் இதை நம்மால் சிறப்பாக செய்ய முடியும் என்ற உத்வேகத்தோடு, சிறிதும் பயமோ, அச்சமோ இல்லாமல், செயலை செய்வது.

ராம காதையில் ராவணன் வதத்திற்கு பெரிதும் துணை நின்றது ராம-விபீடணன்  நட்பு. ராமன், விபீடணன் நட்பின் முதல் சந்திப்பு எவ்வாறு நடந்தது எவ்வாறு செயல் வடிவம் பெற்றது அதில் கம்பன் கூறும் உளவியல் கருத்துக்கள் என்னென்ன, அவை புதிய பரிமாண உளவியல் கருத்துக்களுடன் எவ்வாறு  பொருந்துகிறது என்று விரிவாக இங்கு பார்க்கலாம்.

அதற்கு ராம-ராவண முதல் சந்திப்பான விபீடணன் அடைக்கல படலத்தின் பாடல்களை எடுத்துக் கொள்வோம்

 செயல் : ராம விபீடணன் நட்பு, அடைக்கலம் மூலமாக

புதிய பரிணாம உளவியல் கருத்தில் முக்கியமானது தனி மனித முடிவுகளை விட குழு முடிவு எப்போதும் மேம்பட்டதாக இருக்கும்.  இதுபோலவே இராவணனுடன் விபீடணனக்கு ஏற்பட்ட கருத்து மோதல்களுக்கு பின் தனியாக முடிவு எடுக்காமல் தன் குழு அமைச்சர்களுடன் கலந்து ஆராய்ந்து விவாதித்து எதிரியான ராமனிடம் அடைக்கலம்  தேடுவதே சிறந்த முடிவு என்ற முடிவுக்கு விபீடணன் வருவதாக கம்பன் காட்டுகிறான்.

பிறந்த என் உறுதி நீ பிடித்தியால் எனத்

துறந்தனன்; இனிச் செயல் சொல்லுவீர் என்றான் –(6509.)

குழு விவாதத்தில் பங்கு பெறுபவர்கள் சூழ்நிலையை நன்கு அறிந்துவர்களாவும், அறிவு சார்ந்தவர்களாகவும், விவாதிக்கப்படும் செயல் முடிவு சிறப்பாக அமையக் கூடிய கருத்துக்களை சொல்வதாகவும் இருத்தல் அவசியம். அவ்வாறு விபீடணனது அமைச்சர்களும், பின்னர் ராமனது மந்திராலோசனையில் பங்கு பெரும் குழு உறுப்பினர்களும் மிகுந்த அறிவுப்பூர்வமாக விபிஷன ராம நட்பை அணுகுகிறார்கள் என்று கம்பன் மிக மிக தெளிவாக காட்டுகின்றான்

காட்சியே இனிக் கடன் என்று கல்வி சால்

சூட்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார். (6510.)

தற்போதைய உளவியல் சார்ந்த நிர்வாக திறனாய்வாளர்கள் சொல்லுவார்கள், கருத்துக்களை கேட்டு அறிந்த பின் குழுத்தலைவர், குழு உறுப்பினர்களை அனைத்து செல்லுவது நல்லது, அவர்கள் மூலமே அந்தச் செயலை செவ்வனே செய்ய வேண்டும் என்பதாகும். அதுபோலவே இங்கும் கருத்துக்களை கேட்ட பின் விபீடணன் குழு உறுப்பினர்களை, பாராட்டி சொல்லபட்ட கருத்தை ஆமோதித்து செயல்படுகின்றான்.

நல்லது சொல்லினீர்; நாமும் வேறு இனி

அல்லது செய்துமேல் அரக்கர் ஆதுமால்; (6511.)

பின்னர் சுக்ரீவன் மாறுபட்ட கருத்து  கூறிய போதும் ராமன் அவனுக்கு சரியான பதில் கூறீய பின் அவன்  மூலமாகவே விபீடணனை அழைத்துவர இயம்புகின்றான்.

கோது இலாதவனை நீயே

    என்வயின் கொணர்தி என்றான். (6609)

இவை எவ்வாறு தற்கால குழு ஒருங்கிணைந்து செயல்படுகிறதோ, அது போலவே அன்றும் விபீடணன் குழுமம்  மற்றும் இராமனது குழுவும் செயல்பட்டது என்பதற்கான அத்தாட்சி என்று வேறு என்ன?

ராமனைச் சந்திப்பது என்று முடிவு செய்தாகிவிட்டது முதல் சந்திப்பு இருட்டில் இருக்கலாமா? ஆகாது ஆகாது - நல்ல உளவியல்,  காலையில் சந்திப்போம் என்று விபீடணன் நினைக்கின்றான்

 இருளுற எய்துவது இயல்பு அன்றாம் என

பொருள் உற உணர்ந்த அப் புலன்கொள் புந்தியார் ( 6515.)

எந்தவொரு செயலையும் சந்தேகமின்றி அச்சமின்றி முழு மன தைரியத்தோடு செய்ய வேண்டும் என்கின்றது நிர்வாகவியல். விபீடணன் அவ்வாறே செய்தான் என்கிறான் கம்பன்

முறைபடு தானையின் மருங்கு முற்றினான்

அறைகழல் வீடணன் அயிர்ப்பு இல் சிந்தையான் ( 6525.)

நாம் முன்னர் கூறிய உளவியலின் தண்மையில், ராம காவலர்கள் வந்திருக்கும் விபீடண குழுவின் பண்பை உடல் மொழி கொண்டு அறிந்து கொள்வதாக கம்பன் அழகா காட்டுகின்றான்

சலம் குறி இலர் என அருகு சார்ந்தனர்

புலக்குறி அறநெறி பொருந்த நோக்கினார். ( 6532.)

நட்பு கொண்ட இருவர்டித்தில், நட்பு ஆழமாக வேண்டுமெனில் ஒருவரை மற்றவர் நன்கு அறிந்து இருக்க வேண்டும். அவர்களது பண்பு நலன்கள் அடுத்தவர்களுக்கு தெரியவேண்டும். தற்கால சமூக ஊடகங்கள் இதை Profile என்று வெளிப்படுத்துகின்றது இங்கு விபீடணனின் பண்பு நலன்கள்  ராமனுக்கு சேருமாறு பட்டியலிடபடுகின்றது

தகவு உறு சிந்தையன் தரும நீதியன்

மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான் (6534.)

நாயகன் தர நெடுந் தவத்து நண்ணினான்

தூயவன் என்பது ஓர் பொருளும் சொல்லினான். ( 6544.)

தற்போதைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் எல்லா வகையான தகவல்களையும் சேகரித்து அதன் உண்மை தன்மையை அறிந்து, யாணையின்  காலையோ, தும்பிக்கையோ தனியா பார்க்காமல் யாணையின் முழு வடிவத்தை பார்ப்பதுபோல ( Complete Picture) ஒரு தகவல் முழுமையாக கிடைத்தால் அதிலிருந்தே செயல்களை செய்வது எளிமையானதாக இருக்கும்.  இந்த வகையிலேயே கண்டதை மட்டும் சொல்லாமல் நீயும் என்னிடம் கண்டதையும் கேட்டதையும் சொல்லு  என்று ராமன் கூறுவதாக அமைந்துள்ளது இந்தப் பாடல்

6540.      மண்டலச் சடைமுடி துளக்க வாய்மையால்

கண்டதும் கேட்டதும் கழறல் மேயினான்.

தற்காலங்களில் எந்த ஒரு செயலையும் திட்டமிடும் போது அந்தச் செயல் எவ்வளவு காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதையும் சேர்ந்து திட்டமிட்டு அது அந்தந்த செயலுக்கு அருகே  குறிக்கப்படுகின்றது. இதே மாதிரியான வழக்கத்தை அன்று ராவணனும் கடைபிடித்தான் என்று படிக்கும்போது நாம் ஆச்சரியத்தில் மூழ்கி கம்ப பாத்திர படைப்பை என்னி வியக்கின்றோம்.  ராவணன் விபீஷணனை இங்கிருந்து செல் என்பது என்று கூறும் போது அவன் கூறிய கால அளவு, திணை அளவு, என்னொவொறு உவமை கம்பனிடம்மிருந்து

 சாம் தொழிற்கு உரியை; என் சார்பு நிற்றியேல்;

ஆம் தினைப் பொழுதினில் அகல்தியால் எனப்

போந்தனன் என்றனன் ( 6546)

உளவியல் கூற்றுப்படி இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது கம்பன் அதையே இங்கு காட்டுகின்றான்

தடமலர்க் கண்ணனைத் தடக்கை கூப்பி நின்று

இடன் இது; காலம் ஈது என்ன எண்ணுவான் (6548)

ஒருவன் ஒரு செயலுக்கு தீர்வு காணும்போது அவன் வாழ்க்கையில் அனுபவித்த பார்த்த கேட்ட தகவல்கள் வைத்து அவனால் தீர்வு சொல்ல முயலுவான். இது உளவியல்  விஞ்ஞானம். சுக்ரீவனை, வாலி  கொல்லுமளவுக்கு புறப்பட்டபோது ராமனிடம்  நட்பு பாராட்டி தொடர்கின்றான்.  இதைப்போல விபீஷணனுக்கு எந்த நிகழ்வுகளும் இல்லை அவன் இராவணனால் கொல்லப்படும் அளவு விரட்டபடவில்லை எனவே இவனை சேர்க்க வேண்டாம்  என்று,அவனது கண்ணோட்டத்தில்  வாதிடுகின்றான்

 

வெம் முனை விளைதலின் அன்று; வேறு ஒரு

சும்மையான் உயிர் கொளத் துணிதலால் அன்று; (6551.)

தம் முனைத் துறந்தது தரும நீதியோ?

உலகத்தில் விஞ்ஞான வளர்ச்சி, வளர்ந்து பரவ முதல் காரணம் கேள்விகள் கேட்பது,ஏன்? எதற்கு? எப்படி? இதன் தாக்கமோ,  சுக்ரீவன் ராமனைப் பார்த்து கேள்விகள் கேட்கின்றான். ராமனும் அதை அனுமதிக்கிறான் இது ஒரு நல்ல நிர்வாக திறமைக்கு சான்று அல்லவா

 

பகை உற வருதலும் துறந்த பண்பு இது

நகை உறல் அன்றியும் நயக்கற் பாலதோ? (6552.)

எந்த ஒரு தீய செயலில் கூட நல்லதையே காண்பார்கள் நல்லவர்கள் இது ஒரு உளவியல் உண்மை இதுபோன்று இராவணன்  தண்ணை விரட்டுகின்ற தீய செய்கையின் விளைவாக  விஷ்ணுவின் வடிவமான ராமனுடன் நட்பு கிடைக்க ஏதுவாக அமைந்தது என்று எண்ணி பார்த்து விபீஷணன்  மகிழ்வதாக கம்பன் காட்டுகின்றான்

 

என்முனார் எனக்குச் செய்த

    உதவி என்று ஏம்பல் உற்றான். ( 6627.)

நட்பு மலர ஒருவருக்கு மற்றொருவர் அவர்கள் விரும்புவதை செய்து கொண்டே இருக்க வேண்டும். மிகுதியான நேரங்களில் ஒருவர்  நேரடியாக விரும்புவதை சொல்வதில்லை. இதே போன்று தருணம் இங்கே காண்பிக்கப்படுகின்றது. விபீடணன் நேரிடையாக எனக்கு இலங்கை  வேண்டும் என்று எங்கும் கூறவில்லை மறைமுகமாகவும் குறிக்கவில்லை. அனுமன் அனுபவ அறிவினால் யூகிக்த்து ராமனிடம் கூறுகின்றான் அது ஆமோதிக்கும் வகையில்  ராமனும் அதை ஏற்று லட்சுமணன் மூலமாக இலங்கை கிரீடத்தை விபீடணனுக்கு அணிவிக்கின்றான். என்ன ஒரு உளவியல் சிந்தனை. வேற என்ன உளவியல் சிந்தனை புதிய பரிமாணங்களில் இருக்கக்கூடும்?

 

வாழும்நாள் அன்று காறும்,

    வளை எயிற்று அரக்கர் வைகும்

தாழ்கடல் இலங்கைச் செல்வம்

    நின்னதே தந்தேன் என்றான். ( 6631)

அடைக்கலம் என்று வந்தவனுக்கு நாடும் கொடுத்து நின்னோடு எழுவரானோம் என்று உறவும் கொடுத்து, நட்புப் பாராட்டும் ராமனது மனது உளவியலுக்கு உட்பட்டதா? அப்பார்பட்டதா? எந்த ஒரு  உளவியல் அறிஞராலும் ஒருநாளும் கோடிட்டுக் காட்ட முடியாத அளவுக்கு மனச் சிந்தனை கொண்ட மானுடனாக எப்படித்தான் படைத்தான் கம்பன், ராமனை?

 

குகனொடும் ஐவர் ஆனேம்

    முன்பு; பின், குன்று சூழ்வான்

மகனொடும், அறுவர் ஆனேம்;

    எம் உழை அன்பின் வந்த

அகன் அமர் காதல் ஐய!

    நின்னொடும் எழுவர் ஆனேம்; ( 6635)

தற்காலத்தில் நேர்காணலுக்கு செல்லும் வேலை தேடுபவர்கள் இந்த வேலை கிடைக்குமோ? இல்லயோ? என்ற மன உளைசளில்  செல்வார்கள் அதேபோல் விபீடணன் இராமனிடம் அடைக்கலம் தேடி வரும் போது இது கிடைக்குமோ கிடைக்காதோ என்ற எண்ணத்துடனேயே வந்திருப்பான் போலும். சாப்பாடு தேடி வந்தவனுக்கு விருந்து கிடைத்ததை போல அடைக்கலம் தேடி வந்தவனுக்கு மணிமுடி கிடைத்த போது அவனது அச்சம் நீங்கியதாக கம்பன் சொல்வான். பிறரின் உணர்வுகளை புரிந்த உளவியல் அறிஞனாக காட்சி தருகின்றான்

  அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித்

தொடுகழல் செம்பொன் மோலி

    சென்னியில் சூட்டிக் கொண்டான். (6636.)

 நல்ல நண்பர்கள் ஒத்த சிந்தனை உடையவர்களாக பெரும்பாலும் ஒரே கருத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள் அதேபோல்  பல நேரங்களில் அவர்கள் சிந்தனையில் ஒரே மாதிரி  இருக்கின்றார்கள். பின்னர் வருவதை முன்னர் அறிவதில் விபீடணன்  வல்லவனாக இருக்கின்றான். பின்னால் நடப்பதை முன்னரே அறியும் ஆற்றல் ராமனுக்கு இருந்தது என்று சொல்லவும் வேண்டுமோ?

விளைவினை அறியும் வென்றி

    வீடணன், என்றும் வீயா

அளவு அறு பெருமைச் செல்வம்

    அளித்தனை ஆயின் ஐய! (6634)

ராமனின் வடிவழகை வர்ணிக்கும்போது கம்பன் ஐயோ இவன் வடிவழகை என்னென்பது  என்று  சொல்லுவான். நாமும் சொல்லுவோம் ஐயகோ இத்தனை வண்ணங்களா? பரிமாணங்களா?  எப்படித்தான் படைத்தானோ கம்பன் இந்த காவியத்தை என்றே முடிப்போம்