Sunday, 3 October 2021

கே ஒய் சி (KYC) என்பது வரமா சாபமா

 

03-10-2021

இந்த கட்டுரை நாணயம் விகடன் தளத்தில் படிக்க தொடவும் 

சேவை நிறுவனங்களும் அரசாங்கமும், வரம் என்ற பார்வையில் பார்க்கின்றது. வாடிக்கையாளர்கள், சாபம் என்ற வகையில் நிந்திக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில், அதிகம் பேசப்படுவது வரி தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள். இது தற்போதைய ஒன்று. ஆனால் காலங்காலமாக கே ஒய் சி செய்வதில் உள்ள சிக்கல்களை மறந்துவிட முடியுமா. அப்படி என்ன கே ஓய் சி செய்வதில் சிக்கல் என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்

கே ஒய் சி - KYC

கே ஒய் சி என்பது know your customer என்பதின் சுருக்கம். அப்படி என்றால் என்ன? அதாவது சேவை நிறுவனங்கள், தமது வாடிக்கையாளர்கள் எந்த இடத்தில் வசிக்கிறார்கள், அவர்களிடம் போதிய, சரியான விபரங்கள் இருக்கின்றதா, நாம் அவர்களுக்கு சேவை வழங்கலாமா, அவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது, அது  சட்டப்படி ஈட்டப்பட்ட பணமா என்பது போன்ற விவரங்களை சேகரிப்பது தான்

அடிப்படை கே ஒய் சி  விவரங்கள், பெயர், முகவரி, புகைபடம் மற்றும் பான் நம்பர் (PAN Number)  அடங்கியதாகும்  அடிஷனல் கே ஓய் சி  ( Additional KYC) என்பது அவர்களது மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் பணம் வருவதற்கான வழிகள்,  அவர்களது அன்றைய பணமதிப்பு போன்றவையாகும்

கே ஒய் சி - காரணங்கள்

கே ஒய் சி  ஐ அரசாங்கம் கட்டாயப்படுத்துவத்தின் நோக்கம், அரசாங்கத்திற்கு புறம்பான பண பரிவர்த்தனைகளை (PMLA - Prevention of Money Laundering Act). தடை செய்வதும், லஞ்ச லாவண்யங்களை  குறைக்கவும், வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை நன்கு அறிந்து கொள்ளவும்,  கே ஒய் சி தேவை என்று அரசாங்கம் நம்புகின்றது.

 கே ஒய் சி எங்கெல்லாம் தேவை

 எல்லா வகையான நிதி நிறுவன சேவைகளுக்கும்  இந்த கே ஒய் சி அவசியம் உதாரணமாக

  1. பங்கு வர்த்தகம்   (Stock trading)
  2. பண்டு முதலீடு ( Mutual fund investments)
  3. காப்பீடு ( Insurance )
  4. வங்கி சேவைகள் ( Banking) 
  5. வங்கி அல்லாத நிதி நிறுவன சேவைகள் (Non Banking financial institutions)
  6. தற்போது சமூகத்தில், புழக்கத்திலுள்ள மொபைல் பண பரிமாற்ற சேவைகள். (உ -ம் ) பேடிஎம்  (pay ™ , google.pay) போன்ற பணம் பரிவர்த்தனை சேவைகள்.

 

கே ஒய் சி யும் வாடிக்கையாளர்கள் சிரமங்களும்

ஏன் இந்தக் கே ஒய் சி சாபமாக, கெட்ட கனவாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.

கடந்த பத்து வருடங்களில் பலமுறை மாற்றப்பட்டு, புதுப்புது வடிவங்களில் அவதாரம் எடுப்பதாக இந்த கே ஒய் சி  உள்ளது

கே ஓய் சி என்பது பெரும்பாலும் மாறாத நிலையான தகவலாகவே உள்ளது. இருந்தபோதிலும் மேற்கண்ட ஆறு சேவை நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெறுவதற்கு, நாம் ஒவ்வொரு முறையும் கே ஒய் சி செய்ய வேண்டியுள்ளது. ஒரே நிறுவனத்தில் பல சேவைகளை பெற்றாலும் பலமுறை கே ஒய் சி செய்யவேண்டியுள்ளது. இதுவே வாடிக்கையாளர்களின் சாபமாக, கெட்ட  கனவாகவும் இருப்பதற்கு முதலும், முக்கிய காரணமும் ஆகும்.

எல்லா வகையான நிதி சேவைகளையும் பெறுவதற்கு ஒரு முறை கே ஓய் சி செய்தால் போதுமானது என்று அரசாங்கம் அவ்வப்போது சொல்லி  வந்தாலும், ஒவ்வொரு நிறுவனங்களும் தனித்தனியாக கே ஒய் சி பெற்றுக் கொண்டுதான் உள்ளது. கே ஒய் சி பெறுவது, இதுவரை சரிவர எளிதாக நடைமுறைப்படுத்த பட்டதாக எந்த ஒரு செய்தியும் இல்லை.

கே ஆர் ஏ ( KYC Registration Agency)

கே ஒய் சி தகவல்களை சேகரித்து பராமரிக்கும் நிறுவனங்கள் கே ஆர் ஏ எனப்படுகின்றன.  இவற்றில் முக்கியமானவை

  1. கேம்ஸ் (Cams)
  2. கே பின் டெக் (K fintech)
  3. டாட் எக்ஸ்  (Dotex) 
  4. சி வி எல்  (CVL, a division of Central Depository Services (India) Ltd)
  5. என் டி  எம் எல் (NDML, a subsidiary of National Securities Depository Ltd)

சி கே ஓய் சி (Centra KYC - CERSAI.org)

இந்த கே ஆர் ஏ நிறுவனங்கள் சேகரிக்கும் எல்லா தகவல்களையும் திரட்டி அதை ஒன்றாக்கி, அதிலுள்ள தகவல்களை சரிபார்த்து, ஒருவருக்கு,  ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் இருந்தால், அவற்றை நீக்கி நன்கு பராமரித்த பின்,  சுத்தமான தகவல்களை, தேவைப்படும் நிறுவனங்களுக்கு அளிக்க சி கே ஓய் சி என்ற பொது முறை சார்ந்த  அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுவான சி கே ஓய் சி மையங்களுக்கு கே ஒய் சி தகவல்  சென்ற பின் அங்கு பதியப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின் கே ஐ என் (KIN - kyc identification number) என்ற நம்பர் தரப்படுகின்றது. இந்த நம்பரை நாம் தேவைப்படும் நிதி நிறுவனங்களுக்குக் கொடுத்து திரும்பவும் கே ஒய் சி செய்வதை தவிர்க்கலாம் என்பது சி கே ஓய் சி இன் சாராம்சம். இதுபோன்று புதிய சி கே ஓய் சி அமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தாலும் தனித்தனியாக கே ஒய் சி கேட்பது  நின்ற பாடில்லை. காரணம், சி கே ஓய் சி எனப்படும் புதிய நடைமுறை, மற்றும் கே ஐ என் (KIN) எனப்படும்  நம்பர் முழுவதுமாக புரிபடவும் இல்லை, எங்கும் அறியப்படவும் இல்லை.

ரி  கே ஓய் சி  (Re KYC)

சி கே ஓய் சி, மற்றும் கே ஐ என் (KIN) இருந்தாலும் ரி  கே ஓய்  சி. தேவை என்று சொல்லப்படுகின்றது. நாம் முன்னரே கூறினோம்  கே ஒய் சி பெரும்பாலும் மாறுவதில்லை  என்று, காரணம்,  முகவரி மற்றும் வாடிக்கையாளர் நிதி நிலைமை போன்றவை மாறிக் கொண்டுதான் உள்ளது. எனவே இந்த மாறுகின்ற விவரங்களை சரியாக படம்பிடிக்க ரி  கே ஓய் சி  செய்யப்படுகின்றது. அதாவது திரும்பவும்   கே ஒய் சிசெய்வதே ரி  கே ஓய் சி எனப்படுகின்றது.

இந்த ரி  கே ஓய் சி இடைவெளி  காலம், நிறுவனத்துக்கு நிறுவனம்  மாறுகின்றது. காரணம் வங்கிகளை  நிர்வகிப்பது ஆர்பிஐ (RBI)  பண்டுகளை நிர்வகிப்பது செபி ( SEBI). புது புது விதிகள். எனவே ரி  கே ஓய் சி காலம் ஒரேமாதிரியாக இருப்பதில்லை, வெவ்வேறாக  உள்ளது.

வங்கிகளில் அதிக ரிஸ்க் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 2 வருடத்திற்கு ஒரு முறையும் குறைந்த ரிஸ்க் உள்ள வாடிக்கையாளருக்கு பத்து வருடத்திற்கு ஒரு முறையும் ரி  கே ஓய் சி செய்ய ஆர்பிஐ வலியுறுத்துகின்றது

ஐபிவி ( in person verification IPV)

முன்னர் கே ஒய் சி செய்யும்பொழுது வாடிக்கையாளர்களை நேரடியாக பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. புகைப்படம்  மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது. தற்போது கே ஓய் சி செய்யப்படும் பொழுது வாடிக்கையாளர், நேரிலோ, ஆன்லைன் மூலமாகவோ அவசியம் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதற்கு ஐபிவி ( in person verification - IPV)  என்று பெயர். எனவே முன்னர் சாதாரண முறையில் கே ஒய் சி  செய்து இருந்தால் இந்த  ஐபிவி முறையில் திரும்பவும் கே ஒய் சி செய்யவேண்டும் என்ற செபி கட்டாயப்படுத்துகிறது.

ஈ கே ஓய் சி  - eKYC - Electronic KYC

இந்த கொரோனா காலத்தில், வாடிக்கையாளரை நேரில் பார்ப்பது என்பது சற்று சிரமமாக இருக்கும் என்பதால் இந்த ஐபிவி முன்னர் மாதிரி செய்ய முடிவதில்லை. எனவே தற்போது ஈ கே ஓய் சி என்ற வகை அறிமுகமாகியுள்ளது.  இதன் மூலம் ஒருவர் தனது ஆதார் நம்பரையும், போன் நம்பரை வைத்து மொபைல் போனில் வரும் ஓடிபி (OTP) மூலம் ஈ கே ஓய் சி செய்ய முடியும்

இந்த வீடியோ மூலம் ஈ கே ஓய் சி  செய்வது, தளத்திற்கு தளம் மாறுபடுகின்றது. இதிலும் பல மாதங்களாக, பல மாறுதல்கள் செய்யப்பட்டு கொண்டே வருகின்றது, இன்னும் முற்றிலுமாக எளிதாக்கப்படவில்லை என்பதே பலரது கருத்து

அறியாமையா? நடைமுறை சிக்கலா?

நாம் இப்போது ஒரு நடைமுறை உதாரணத்தை பார்ப்போம்

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, கணவர் பெயர் முதலிடம், மனைவி பெயர் இரண்டாவதாக ஒரு வங்கியில் புதிதாக டீமேட் ( Demat) கணக்கு தொடங்குகிறார்கள். தேவையான கே ஒய் சி தகவலை கொடுத்து விடுகிறார்கள். எல்லாம் சரி. இன்னும் இரண்டு மாதம் கழித்து அதே தம்பதியினர் மனைவி பெயர் முதலாவதாகவும், கணவர் பெயர் இரண்டாவதாக, டிமேட் அக்கவுண்ட் திறக்க விரும்புகிறார்கள். தற்போது அதே வங்கி, திரும்பவும் அவர்களிடம் கே ஒய் சி  கேட்கின்றது இதற்கு காரணம் வங்கி ஊழியர்களின் அறியாமையா? அல்லது வங்கியில் உள்ள நடைமுறைச் சிக்கல்களா?  என்று தெரியவில்லை.  இது சற்றும் மாறவில்லை என்பது நிதர்சனம்.

கே ஒய் சி என்பது தவிர்க்க முடியாத எமன். அது இல்லாமல் எந்த பண பரிமாற்றங்கள் செய்ய இயலாது எனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அரசாங்கமும் இதை மேலும் எளிமையாக்கி சிறந்த ஒருமுகப்படுத்தப்பட்ட நடைமுறையை கொண்டு வந்து சம்பந்தப்பட்டவர்கள் அதை முழுவதுமாக கடைபிடிக்குமாறு பார்த்துக்கொண்டால் அனைவருக்கும் நலமே.


இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும்

உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும்  feedback here

முந்திய கட்டுரைகளை  படிக்க

சந்தையின் உச்சத்தில் லாபத்தை நிரந்தரமாக்குங்கள்

நிதி நலம் பேண, உடல் நலம் பேணும் ஃபண்டுகள்

பங்குகள் பண்டுகள்  ஒரு அலசல்

ரிஸ்க்கோ மீட்டர் 3

நாமினேஷன் அவசியம்

சந்தையில் ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்

எஸ் ஐ பி யை தொடர்வதில் சிரமமா?

முதலீடுகளில் எச்சரிக்கை

எஸ் ஐ பி