நிதி பராமரிக்க பத்து கட்டளைகள்
கோவிட் வருகையால் பல கெடுதல்கள் நிகழ்ந்தாலும், ஒரு சில நன்மைகளையும் தந்திருக்கிறது. பண்டுகளில் முதலீடு சுமார் 47 லட்சம் கோடியாக பெருகி உள்ளது. டிமேட் கணக்குகள், கணக்கில்லாமல் உயர்ந்துள்ளது. சந்தையும் சமீபத்தில் உச்சியை தொட்டது. இது எல்லாம் பல புது முதலீட்டாளர்களின் வருகையால் நடந்த சாதனையே. இந்த புது முதலீட்டார்கள், தெரிந்து கொள்ள வேண்டியதும், பழைய முதலீட்டாளர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளக் கூடியதுமான 10 கட்டளைகளை இங்கு பார்ப்போம்
கட்டளை ஒன்று மந்திர கோல் எதுவும் இல்லை
பணம் பண்ணுவதற்கு, பலர் நினைப்பது போல் யாரிடமும் எந்த மந்திரக்கோலும் இல்லை. பெரும் பணம் பண்ணுவதற்கு சரியான திட்டமிடுதலும், புரிதலும், பொறுமையும் தேவை. பணம் பண்ணுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள் அது சில சமயம் சிலருக்கு கை கொடுத்துள்ளது. எப்பொழுதும் அவர்களுக்கு கை கொடுப்பதில்லை. இதை நினைவில் கொள்ளுங்கள்.
கட்டளை இரண்டு ரிஸ்க் அதிகம், லாபமும் அதிகம்.
என்னிடம் வரும் பலர், ரிஸ்க் எடுக்க தயங்குவதுண்டு. ஆனால் லாபம் மட்டும் நிரந்தரமாக அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். இது ஆசையல்ல, இது ஒரு பேராசை. உதாரணமாக ஈக்குவிட்டி வகையான திட்டங்களில் ரிஸ்க் அதிகம், அதில் லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. கடன் முதலான பண்டுகளில் ரிஸ்க் குறைவு, லாபமும் குறைவு. பண்டுகளுக்கு மட்டுமன்றி, இது எல்லா வகையான முதலீட்டு வகைகளுக்கும், பங்கு, வங்கி வைப்பு நிதிகள், நிறுவன வைப்பு நிதிகள், என்று அனைத்திற்கும் பொருந்தும். கட்டாயம், நினைவு கொள்ள வேண்டிய கட்டளை. ரிஸ்க் அதிகமாகும் பொழுது லாபம் அதிகமாகிறது ரிஸ்க் குறையும் போது லாபமும் குறைகின்றது. இதை எப்பொழுதும் மனதில் வைத்திருங்கள்.
கட்டளை மூன்று ரிஸ்க் அதிகம் வேண்டாம்.
மேலே உள்ள இரண்டாவது கட்டளையை படித்துவிட்டு, நான் அதிக ரிஸ்க் எடுத்து அதிக லாபம் பார்ப்பேன் என்று கோதாவில் இறங்க வேண்டாம். உங்களது நிதி நிலைமைக்கு ஏற்றவாறு, மனநிலைமைக்கு ஏற்றவாறு, எந்த அளவில் ரிஸ்க் சாத்தியமோ, அந்த அளவில் மட்டுமே ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்கிறீர்களா, ரிஸ்க் ப்ரொபைல்ர் (Risk profiler) என்று கூகுள் கடவுளிடம் கேளுங்கள், நிச்சயம் வரம் கிடைக்கும். ரிஸ்க் பற்றி அறிந்து, தெரிந்து, பின்னர் ரிஸ்க் எடுக்கவும்.
கட்டளை நான்கு பொது அறிவை அதிகம் பயன்படுத்துங்கள்.
பணம் பண்ணுவதற்கு நிதி பாடத்தில் தங்கமெடல் வேண்டும் என்று அவசியம் இல்லை. நிறைய நேரங்களில் பொது அறிவு மட்டுமே போதுமானது. கண்ணையும், காதையும் நன்கு திறந்து வைத்திருங்கள். படிப்பதில், பார்ப்பதில், கேட்பதில், நிதி பற்றி சரியான விவரங்களை சேகரியுங்கள். அதைப்பற்றி புரிந்து கொள்ளுங்கள். முதலீடு அதற்கு ஏற்றவாறு செய்யுங்கள். உதாரணமாக வங்கி அரை வட்டி தரும்போது ஒருவர் அல்லது புது நிறுவனமோ இரண்டு வட்டி தருகிறது என்றால் அவசியம் அந்த நிறுவனம் இருக்கும் வீதிக்கு போகாதீர்கள். இது படிப்பறிவு தந்த நன்மை மற்றும் உண்மை.
கட்டளை ஐந்து கவனச் சிதறல் கூடவே கூடாது.
முதலீடுகளில் அதிக கவனம் தேவை. கவனச் சிதறல் கஷ்டமே. நமது பணம் தொலைந்து போக வழி வகுக்கும். ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும் பொழுது, அல்லது பண பரிவர்த்தனைகள் செய்யும்பொழுது, சிறிய அளவில் கூட கவனச் சிதறல் இருக்கவே கூடாது. நிதி பற்றிய ஆன்லைன் பரிமாற்றங்களில், எதையும் எளிதில் நம்பி விடாதீர்கள். மிக மிக கவனமாக செயல்படுங்கள். கவனம் கவனம் கவனம். இதை மனதில் கொள்ளவும்.
கட்டளை ஆறு விற்பவர்கள் சமர்த்தர்கள் வாங்குபவர்கள் ஏமாளிகள்.
இதற்கு ஒரு போதும் இடம் விடாதீர்கள். ஏமாளிகளாக நிதி பரிமாற்றங்களில் இருக்கவே இருக்காதீர்கள். விற்பவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும், நாம் வாங்கும் முன் அது சரியானதா, அல்லது மிகைப்படுத்தப்பட்டதா, என்று பார்க்க வேண்டும். தெரியவில்லை என்றால் வாங்க வேண்டாம். பொறுத்திருந்து வாங்கலாம். இங்கு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்ற குறளை மனதில் கொண்டு அவசியம் புரிந்து செயல்பட வேண்டும். இது முதலீட்டிற்கு மட்டுமல்ல வாழ்க்கையிலும் நல்ல பயன் அளிக்கும்.
கட்டளை ஏழு பேராசை பெருநஷ்டம்
கட்டளை நான்கில் கூறியபடி வங்கி அரை வட்டி தரும் பொழுது யாராவது அல்லது நிறுவனமோ அதிக வட்டி தருவதாக கூறினால் முதலீடு செய்து ஏமாறாதீர்கள். அதிக வட்டி கூட கூட கட்டளை மூன்றில் சொன்னபடி ரிஸ்க்கும் கூடுகின்றது எனவே அதிக வட்டி என்ற வலையில் விழுந்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.
கட்டளை எட்டு திட்டமிடுதல் இன்றியமையாதது.
குறைந்த பணமோ, வண்டி வண்டியாக பணமோ தங்களது நிதி நிலைமைக்கு ஏற்றவாறு திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். எந்த அளவு எவ்வாறு எங்கு முதலீடு செய்ய வேண்டும், எப்பொழுது அதன் பலனை அனுபவிக்க வேண்டும் என்பதில் சரியான திட்டமிடுதல் அவசியம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருப்பது பயன் தராது.
கட்டளை ஒன்பது பணத்தை பராமரிப்பது அவசியம்.
திட்டமிட்டு, புரிந்து, நல்ல முதலீட்டை செய்தால் வேலை முடிந்தது என்று ஓய்வெடுக்க அமராதீர்கள். செடி வைத்தால் தண்ணீர் ஊற்ற வேண்டும் அது வளர. அதுபோல் முதலீட்டை நன்கு பராமரிக்க வேண்டும். வருடம் ஒரு முறை எவ்வளவு லாபம் வந்தது, அந்த நிறுவனம் நன்றாக நடைபெறுகிறதா? என்று கவனிக்க வேண்டும் தேவைப்பட்டால் நமது திட்டத்தை அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
கட்டளை பத்து பரந்து விரிந்த முதலீடு
எல்லாம் சரி, நன்கு அலசி ஆராய்ந்து ஒரு மிகச்சிறந்த திட்டத்தில் எல்லா சொத்தையும் முதலீடு செய்து விடலாமா? என்றால் நிச்சயமாக பதில் இல்லை என்று தான் கூற வேண்டும். உலகெங்கும் ஒவ்வொரு வகையான முதலீடும் ஒரு காலகட்டத்தில் நன்கு வளர்ந்து நல்ல லாபம் தருகின்றது. அதே சமயம் அடுத்து வரும் காலகட்டங்களில் அது தொலைந்து போகின்றது. இதை அசட் சைக்கிள் (Asset cycle ) என்பார்கள். எனவே நாம் ஒரு வகையான முதலீட்டில் முதலீடு செய்வது தவிர்த்து, தங்கம், ஈக்குவிட்டி, கடன், மற்றும் இடம் என்று பல்வேறு வகையான முதலீடுகளில், முதலீட்டை செய்ய வேண்டும். இது ஒரு முதலீடு குறைந்தாலும் அடுத்த முதலீடுகள் ஏறி நமக்கு லாபம் பெற ஏதுவாக இருக்கும்.
முடிவாக நிதி பராமரிப்பில் அதிக ஆசைப்பட வேண்டாம். அளவான ஆசையே போதுமானது. திட்டமிட்டு செலவுகள் செய்து ரிஸ்கை தெரிந்து, வருமானத்திற்கு ஏற்றவாறு முதலீடுகளை பரந்து விரிந்த முறையில் முதலீடு செய்து, செய்த முதலீட்டை நன்கு பராமரித்து, நல்ல பலன் பெற வாழ்த்துக்கள்