Wednesday 16 August 2023

மியூச்சுவல் ஃபண்டின் வகைகள்.


நாம் இதுவரை மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன? அவற்றில் ஏன் நாம் முதலீடு செய்ய வேண்டும் என்று  முன்னர் பார்த்தோம். தற்சமயம். மியூச்சுவல் ஃபண்ட். முதலீடு செய்வதற்கு முன், எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்? என்று முடிவு செய்ய வேண்டும். எந்த மாதிரி மியூச்சுவல் ஃபண்ட் நமக்கு ஏற்றது என்று பார்க்க வேண்டும்.  இதற்கு அடிப்படையாக மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளை வகைப்படுத்துவதற்கு, பல்வேறு கோணத்தில் பல்வேறு. காரணங்கள் வைத்து வகைப்படுத்தபடுகின்றது . 

பண்டின் காலத்தை வைத்து வகை பிரிப்பது. 

உதாரணமாக பண்டில் பணம் போடுவதற்கும் எடுப்பதற்கும் உள்ள காலங்களை வைத்து அது எந்த வகை  என்று பிரிக்கலாம். உதராணமாக எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தை எடுக்க முடியும்  என்றால் அது ஓபன் எண்டெட், (Open ended) குறிப்பிட்ட காலம்  கடந்த பின் தான் எடுக்க முடியும்  என்றல், அது குளோஸ் எண்டெட் (Close ended).  

பண்டின் தன்மையை வைத்து வகை பிரிப்பது. 

இன்னொரு முறையில் எந்த வகையான முதலீடு பண்டு செய்கிறது, அது யாருக்கு ஏற்றது என்ற காரணங்கள் கொண்டு வகைப்படுத்தபடுகின்றது. இந்த வகைகளை புரிந்து கொள்வதற்கு, நாம் சற்று சரித்திரத்தை திரும்பி பார்க்கவேண்டும்.  ஒரு காலத்தில். இந்த திட்டங்கள் எவ்வாறு பெயரிட்டப்பட்டது ? அது எவ்வாறு பராமரிக்கப்பட்டு வந்தது ? இப்போது எப்படி செபி கட்டளைப்படி எவ்வாறு திருத்தியமைக்கப்பட்டு மிக தெளிவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. 

பண்டின் பெயர் காரணங்கள் - சரித்திரம் சொல்லும் செய்திகள்

சரிவிகித திட்டம் எனப்படும் பாலன்ஸ் திட்டங்கள் முதலீட்டாளர்களிடம் மிகவும் பிரபலம். சரிவிகித திட்டம் என்ற பெயர் இருந்தாலும் இதில்  ஒரு போதும், பங்கும், கடனும் சரி விகிதத்தில் இருப்பதில்லை.  சரிவிகித திட்டங்களில் நிறைய சின்ன சின்ன வேறுபாடுகள் இருந்து வந்தன. பண்ட் நிதி நிறுவனங்கள், பாலன்ஸ் திட்டங்கள் (Balanced), பாலன்ஸ் அட்வான்டேஸ் திட்டங்கள்(Balanced advantage), டைனமிக்  திட்டங்கள்(Dynamic) என்று பல பெயர்களில் திட்டங்களை வெளியிட்டுள்ளனர். இந்த வகையில் நிதி நிறுவனங்கள் முன்னமே வேறு பெயர்களில் இருந்த திட்டங்களை பாலன்ஸ் திட்டங்கள் என்று பெயர் மாற்றி விற்பதும் உண்டு. வரி சேமிப்பு திட்டங்கள் (Tax saving ELSS) பல காலங்களாக நிதி நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றது. இவை எல்லாவற்றிலும் வரி சேமிப்பு என்ற பெயர் திட்டத்தோடு இணைந்திருக்கும். ஒரு  நிதி நிறுவனம் இந்த  போக்கை சற்றே மாற்றி வரி சேமிப்பு என்ற வார்த்தை திட்டத்தின் பெயரில் இல்லாமல் லாங் டேர்ம் ஈக்விட்டி ( நீண்ட கால பங்கு திட்டம்) என்று பெயரோடு வெளியிட்டது, இது முதலீட்டாளர்களை ஈர்க்கவே , மற்ற அனைத்து நிறுவனங்களும் தனது வரி சேமிப்பு திட்டங்களின் பெயர்களை மாற்றி லாங் டேர்ம் ஈக்விட்டி என்று புது நாமகரணம் சூட்டிக் கொண்டது. இது பச்சோந்தி தனது நிறத்தை தாவரத்துக்கு ஏற்றவாறு மாற்றுவது போல் நிதிநிறுவனங்கள், காற்றடிக்கு திசையை நோக்கி தனது திட்டங்களின் பெயரை மாற்றிக் கொள்கின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு எதுவும் லாபம் ஒன்றுமில்லை. அதே திட்டம் அதே செயல்பாடு, புது பெயர், அது சம்பந்தமான குழப்பங்கள். 

நிதி நிறுவனங்கள் தங்களிடம் உள்ள திட்டங்களுக்கு புதிதாக முதலீட்டாளர்களைக் கொண்டு வர முடியாமல் புதுப்புது திட்டங்களை சின்னச் சின்ன மாறுதலகளோடு, கவர்ச்சிகரமான பெயர்களில் அறிமுகப்படுத்தி முதலீட்டாளர்களை ஈர்க்கிறார்கள்.  முதலீட்டாளர்கள் தற்போதிருக்கும் திட்டங்களின் அதிகமாக என் எ வி (NAV)  இருக்கும் பட்சத்தில் அதைப் பார்த்து பயந்து புது திட்டங்களின் என் எ வி 10  ஆக  கிடைக்க  அதில் முதலீடு செய்ய வருகிறார்கள். இது ஒரு தவறான புரிதல். 

தற்போது 47 இக்கு  மேற்பட்ட நிதிநிறுவனங்கள் சுமார் 5000+  திட்டங்களுக்கு மேல் வழங்கி வருகின்றது. இந்த திட்டங்களின் தன்மை, நடைபடுத்த படும் முறை ஆகியவற்றைப் புரிந்து முதலீடு செய்வது சற்று கடினமான பிரம்ம பிரயத்தனமான செயல்தான். காரணம் ஒரு நிறுவனத்தின் லார்ஷ் கேப் (Large cap) திட்டமும் மற்றொரு நிறுவனத்தின் லார்ஷ் கேப்  திட்டமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை எனவே நாம் ஆப்பிள்களையும் ஆரஞ்சையும்  பார்த்து ஒப்பீடு  செய்ய விழைகின்றோம்.  இது தவறான முதலீட்டிற்க்கு  வழி வகுக்கின்றது.

மியூச்சுவல் ஃபண்டின் வகைகள்  செபி வழிகாட்டுதலின்படி. 

மேற்கண்ட காரணங்களை கருத்தில் கொண்டு செபி 2017 ஆண்டு, மிக முக்கிய இரண்டு மாறுதல்களை செய்தது. எல்லா வகையான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களையம். அது ஒருமைப்படுத்தி வகைப்படுத்தியது. 

  1. முதலாவது வெவ்வேறு பெயர்களில் இயங்கும், ஒரே தன்மைகளில்  உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களை, ஒன்றாக சேர்க்க சொல்லியது. ஒரே வகையில்/தன்மைகளில்  பண்டு நிறுவனங்கள்  ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. 
  2. இரண்டாவதாக திட்டத்தின் பெயர்கள் திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்பட்டது. உதாரணமாக எல்லா. பேலன்ஸ் திட்டங்களும். ஈகுட்டி மற்றும் டெபிட் கலந்த  திட்டங்கள். ஹைபரீட்  என்ற பெயரோடு அழைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. எனவே திட்டத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பெயர்கள் இருக்கும் என்பதை கட்டாயமாக்கியது. 

இந்த இரண்டு மாற்றத்தால் முதலீட்டாளர்களுக்கு திட்டங்களை தேர்வு செய்வது மிக எளிதாக மாறியது. 

முதலில் செபி எல்லா வகையான திட்டங்களையும் வகைப்படுத்தி ஐந்து பிரிவுகளாக பிரித்தது. ஒவ்வொரு திட்டமும் எந்த வகையான முதலீடுகளை செய்கின்றது, உதாரணமாக அவை ஈக்விட்டி (Equity) வகையில் முதலீடு செய்கிறதா அல்லது கடன் வகையில் முதலீடு செய்கிறதா அல்லது இரண்டும் கலந்த கலவையா அல்லது குறிக்கோளுடன் கூடிய முதலீடுகளா இல்லை இவற்றில் எதிலும் அடங்காத தனி வகையா என்பதை கொண்டு இவை ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள திட்டங்களை அதன் தன்மைகளுக்கு ஏற்றவாறு உட்பிரிவுகளாக பிரித்தது

வகைப்படுத்துதல் - முதல் முக்கியமான ஐந்து வகைகள்

1. ஈக்விட்டி வகை (Equity)

இந்த வகையில் உள்ள பண்டுகள் அனைத்தும் தன்னிடம் உள்ள பணத்தை நிறுவனங்களின் பங்குகளில் (Shares) முதலீடு செய்யும் வகையைச் சார்ந்தது. இந்த வகையான திட்டங்களில் ரிஸ்க் மிக அதிகமாக இருக்கும். இந்த வகையான திட்டங்களில் 65 சதவீதங்களுக்கு அதிகமாக ஈக்விட்டி முறையில் முதலீடு செய்யப்பட்டிருந்தால் இந்த வகையில் அடங்கும். தனிநபர் முதலீடுகளில் (individual investor) இந்த ஈக்விட்டி வகையான முதலீடு முதல் இடம் வகிக்கின்றது . தனிநபர் முதலீட்டுத் தொகையில் சுமார் 70 லிருந்து 80 சதவீதம் வரை ஈக்விட்டி வகைகளிலேயே முதலீடு செய்யப்படுகின்றது

2. கடன் வகை (Debt)

இந்த வகையில், நிறுவன கடன்கள், அரசாங்க கடன்கள், மற்றும்  வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் பத்திரங்கள் என்ற முறையில் முதலீடு செய்யப்பட்டிருந்தால் அந்தத் திட்டங்கள் இந்த வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த வகை திட்டங்களை நிறுவனங்கள் தங்களது பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது இந்த மாதிரி திட்டங்களில் முதலீடு செய்கிறது. (Institutional investors) நிறுவனங்கள் செய்யும் முதலீட்டு தொகையில் கடன் வகை முதலீடுகள் மிக அதிகமாக காணப்படுகின்றது

3. கலப்பின வகைகள் ( ஹைபிரிட் - Hybrid)

சில திட்டங்கள் ஆற்றில் ஒரு கால்  சேற்றில் ஒரு கால்  என்பது போல் இரண்டு வகையிலும் சம்பந்தப்பட்டிருக்கும். இதுபோன்ற திட்டங்களில் பங்குகளிலும் பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கும், கூடவே  கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கும். இரண்டும் கலந்த கலவைக்கு ஹைபிரிட் திட்டங்கள் என்று பெயர். ரிஸ்க் குறைவாகவும் லாபம் கிடைக்க ஏதுவாகவும் இருக்கும் இந்த கலப்பினை திட்டங்களில் தனிநபர் அதிகம் முதலீடு செய்வதில்லை என்பது ஒரு குறிப்பு

4. குறிக்கோளுடன் கூடிய முதலீட்டு வகைகள் (Goal based Investments)

இவை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி முதலீட்டாளர்கள் பணம் முதலீடு செய்வதற்கு ஏற்ற திட்டங்களாக உள்ளது. உதாரணமாக குழந்தைகள் நன்மைக்காக செய்யப்படும் முதலீட்டு திட்டங்களும்.  முதுமை காலத்தில், பண சிரமம் இல்லாமல் இருக்கும் நோக்கத்தோடு, செய்யப்படும் முதியோர் ஓய்வூதிய திட்டங்களும் இதில் அடங்கும். தனிநபர் நிதி மேலாண்மையில் (Personal finance advisory) குறிக்கோளுடன் கூடிய முதலீடுகளை சிபாரிசு செய்யப்படுகின்றது, இருந்தபோதிலும் இந்த மாதிரி வகைப்படுத்தப்பட்ட திட்டங்களில் வரும் முதலீட்டு தொகை மிக மிக குறைவாகவே இருந்து வருகின்றது.

5. இதர வகை (Others)

இந்த மேற்கூறிய நான்கு வகைகளிலும் வராத ஒரு சில திட்டங்கள் தனி பிரிவாக இதர வகையில் பிரிக்கப்படுகின்றது. “அதர்ஸ்” எனப்படும் இந்த வகையில் 

  1. தற்போது மிகவும் பிரபலமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் ஈடிஎப் எனப்படும் திட்டங்களும் (ETF)
  2. இன்டெக்ஸ் ஃபண்டுகள் எனப்பட்ட நிப்டி  அல்லது சென்செக்ஸ் குறியீடுகளில்  முதலீடு செய்யப்படும் திட்டங்களும் (Index) 
  3. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்தியாவிலிருந்து முதலீடு செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ள திட்டங்களும் (Overseas investments)
  4. மேலும் இரண்டு பண்ட்களை உள்ளடக்கிய பண்ட் ஆப்  பண்ட் இந்த வகையில் அடங்கும். (Fund of Funds)

இந்த மேற்கூறிய ஐந்து வகைகளுக்குள் நாம் கூறிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்களை ஒன்றுபடுத்த வேண்டும். இதுவும் மிகக் கடினமான செயலாக தான் இருக்கும். எனவே ஒவ்வொரு பிரிவிற்கு கீழும் பல உட்பிரிவுகள், முதலீட்டு காலம், முதலீட்டு முறை, மிக நுட்பமான முதலீட்டு தன்மைகள், ஆகியவற்றை கணக்கில் கொண்டு எல்லா திட்டங்களும் மேற்கூறிய ஐந்து வகைகளுக்குள் உட்பிரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது ஆக மொத்த உட்பிரிவுகளின் வகை சுமார் 34,

முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள். 

  1. ஒன்று ஒவ்வொரு நிதி நிறுவனமும் ஒரு வகையில் ஒரு முதலீட்டு திட்டத்தை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு வழங்க முடியும். 
  2. இரண்டு முதலீட்டாளர்கள் ஒரு நிதி நிறுவனத்தின் குறிப்பிட்ட திட்டத்தையும் அதே வகையில் உள்ள இன்னொரு நிதி நிறுவனத்தில் அதே திட்டத்தையும் எளிதாக ஆராய்ச்சி செய்து அவர்களுக்கு பிடித்த நிதி நிறுவன திட்டத்தில் முதலீடு செய்ய ஏற்றவாறு இருக்கும் 
  3. மூன்றாவதாக ஒரே திட்டங்களில் பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் போது நமக்கு அந்த திட்டத்தின் தன்மைகள் தெரியாமல் போகின்றது. அது போன்ற பிரச்சனைகள் தற்போது இல்லை. மேலும் திட்டத்தின் பெயர் ஒரு  மாதிரியும் திட்டத்தின் தன்மையும் வேறு மாதிரியும் இருக்கும் வாய்ப்புகளை இப்பொழுது அடியோடு மாற்றி ஆகிவிட்டது. எனவே திட்டத்தின் பெயரைப் படித்த உடனே நாம அந்த திட்டத்தின் தன்மையை நன்கு புரிந்து அந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 

உதாரணமாக மிட்கேப் என்ற திட்டத்தின் பெயர் இருந்தால் கட்டாயம் அது நடுப்பட்ட நிறுவனத்தில் மட்டுமே முதலீடு செய்யும் திட்டமாக இருக்கும். திட்டத்தின் பெயரில் இருந்து அதன் தன்மையைப் புரிந்துகொள்ளலாம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தற்பொழுது செபியின் வழிகாட்டுதலின்படி மேற்கூறிய வகையில் திட்டங்கள் வகைபடுத்தபற்றிப்பதாலும், பெயர்களில் இருந்து திட்டங்களை எளிதாக புரிந்துகொள்ள முடிவதாலும், ஒரே வகையில் இன்னொரு திட்டம் அதே நிறுவனத்திடமிருந்து வராமல் இருப்பதாலும், முதலீட்டாளர்கள் எளிதாக திட்டத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு வெவ்வேறு நிறுவன திட்டங்களே நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு ஏற்ற திட்டங்களில் ஏற்ற முறையில் முதலீடு செய்ய ஏதுவாக உள்ளது. எனவே இது இந்த வகையான முதலீடு திட்டங்களின் பிரிவுகள் முதலீட்டாளருக்கு பெரிய வரப்பிரசாதமாகவே உள்ளது

 உங்களது பண்டு முதலீடுகளுக்கு எங்களை அணுகி பயன் பெறுங்கள் 

தொடர்பு கொள்ள கிளிக் செய்யவும் 

மேலும் படிக்க 

மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு அறிமுகம்

ஏன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாற்றம்... யாருக்கு நன்மை

எஸ்.ஐ.பி யில் லாபத்தை அதிகரிக்கும் 6 வழிமுறைகள்

சிறுக சிறுக சேமிக்கலாம்

#MutualFunds #InvestmentInsights #FinancialPlanning


No comments:

Post a Comment