செயற்கை நுண்ணறிவு: எதிர்காலத்திற்கான ஒரு பார்வை
இந்தக் கட்டுரையின் PDF-ஐ பதிவிறக்கம் செய்து, AI பற்றி தமிழில் மேலும் அறிய விரும்பும் உங்கள் நண்பர்கள் மற்றும் குழுக்களுடன் பகிரவும் - தமிழில் கட்டுரைகள் அரிது, இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
அறிமுகம்
"கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு" - ஒளவையார்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒளவையார் கூறிய இந்த வார்த்தைகள், இன்றைய செயற்கை நுண்ணறிவின் உலகையும் அப்படியே விவரிக்கின்றன. நாம் கற்றது சிறிதளவே, கற்க வேண்டியவை அளவற்றவை. ஜனவரி 2025 இல், 'செயற்கை நுண்ணறிவில் தமிழ்: பழமையின் புதுமைப் பயணம்' என்ற கட்டுரையில் AI-ன் அடிப்படைகளை ஆராய்ந்தோம். ( அந்த கட்டுரை இங்கே: tinyurl.com/tamilAIpdf )
இன்று, அதே தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்வில் எப்படி ஊடுருவியுள்ளது என்பதை உணர்ந்து கொள்வோம். புதிய இடத்திற்குச் செல்லும்போது, உங்கள் கைபேசியில் உள்ள வரைபடச் செயலி ( Google Maps) நெரிசலைத் தவிர்த்து சிறந்த பாதையைக் காட்டுகிறது. இது செயற்கை நுண்ணறிவின் சாதாரண முகம் மட்டுமே.
இந்தக் கட்டுரையில் டீப் சீக், மனுஸ், AI ஏஜென்ட் மற்றும் குவாண்டம் கணிப்பொறியியல் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை எவ்வாறு புரட்சிகரமாக மாற்றப்போகின்றன என்பதை ஆராய்வோம். நமது கைகளில் இருக்கும் இந்த சிறிய சாதனங்களில் ஒளிந்திருக்கும் நுண்ணறிவு, நம் எதிர்காலத்தை மறுவரையறை செய்யும் சக்தியைக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவின் புதிய எல்லைகளை நாம் கடக்கும்போது, ஒளவையாரின் வார்த்தைகள் நம்மை விழிப்புடன் இருக்க அழைக்கின்றன - நாம் அறிந்ததை விட அறியாதது தான் அதிகம்.
டீப் சீக் (Deep Seek): செயற்கை நுண்ணறிவின் புதிய திருப்புமுனை
நம் வாழ்வில் ஏற்கனவே ஊடுருவியுள்ள செயற்கை நுண்ணறிவு, இனி எல்லைகளை உடைக்கத் தொடங்கியுள்ளது. 2022 நவம்பரில், ஓப்பன் AI நிறுவனம் அறிமுகப்படுத்திய AI சாட்பாட்( AI Chatbots) உலகை முற்றிலும் மாற்றியமைத்தது. 1950 களிலிருந்தே இருந்த இந்தத் தொழில்நுட்பம், சாதாரண மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் மாறியது அப்போதுதான். அன்று வரைபடத்தில் வழிகாட்டிய செயற்கை நுண்ணறிவு, இன்று நமது கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தோழனாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் சுட்டியின்(Mouse) வருகை கணினி உலகை மாற்றியதைப் போலவே, AI சாட்பாட்கள் உரையாடல் மூலம் தகவல்களை எளிதாக அணுக வழிவகுத்தன.
ஆனால் 2025இல், அமெரிக்காவிலிருந்து அல்ல, சீனாவிலிருந்து வந்த 'டீப் சீக்' என்ற புதிய அலை உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒளவையார் கூறியது போல "கற்றது கைம்மண் அளவு" என நினைத்திருந்த நாம், AI உலகில் இன்னும் பல அதிசயங்கள் காத்திருப்பதை உணர்கிறோம். டீப் சீக் AI என்பது மற்ற AI மாதிரிகளை விட வேகமாகவும், குறைந்த செலவிலும் செயல்படும் ஒரு முன்னோடி. அதன் செயல்திறன் மற்றும் வேகத்தைப் பற்றிய ஒப்பீட்டு விவரங்கள்:
டீப் சீக் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் நம் அன்றாட வாழ்க்கையையும், தொழில்துறைகளையும் அதிரடியாக மாற்றப் போகின்றன. இருப்பினும், இவற்றின் வளர்ச்சியில் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளும் எழுகின்றன
AI ஏஜென்ட்கள் (AI Agents) - புதிய பரிமாணத்தில் செயற்கை நுண்ணறிவு
DeepSeek போன்ற மொழி மாடல்கள் AI சாட்பாட்கள் தகவல்களை வழங்குவதிலும் உரையாடலில் ஈடுபடுவதிலும் சிறந்து விளங்கினாலும், அவற்றின் உண்மையான பயன்பாடு எல்லைக்குட்பட்டதாகவே உள்ளது. பெரும்பாலான மக்கள் AI சாட்பாட்களைப் பயன்படுத்தி ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர் அல்லது சில தகவல்களைப் பெறுகின்றனர். ஆனால் அன்றாட வாழ்க்கையில் உடனடி பலன் தரக்கூடிய உற்பத்தித்திறன் மிக குறைவாகவே உள்ளது.
AI சாட்பாட்கள் நம் உரையாடல்களுக்கு உதவினாலும், நமது தேவைகள் இன்னும் பெரிது, எனவே நமக்கான புதிய அறிமுகமே AI ஏஜென்ட்கள். இந்த AI ஏஜென்ட்கள் என்பது முற்றிலும் வேறுபட்ட, அதிக சக்திவாய்ந்த தொழில்நுட்பமாகும். AI ஏஜென்ட்கள் என்பது பழைய காலத்து விண்டோஸ் மேக்ரோக்கள் அல்லது பேட்ச் ஃபைல்களின் நவீன வடிவம் என நினைத்துக் கொள்ளலாம் - ஆனால் பல மடங்கு அதிக சக்தியுடன்.
AI ஏஜென்ட்கள் தனிப்பட்ட பணிகளுக்கு அப்பால் சென்று, சிக்கலான மற்றும் பல படிநிலைகள் கொண்ட செயல்முறைகளை தானியங்கி முறையில் நிறைவேற்றுகின்றன.
AI ஏஜென்ட்கள் என்றால் என்ன?
AI ஏஜென்ட் என்பது:
தானியக்க முழு செயல்முறைகள்: ஒரு தனி பணி அல்ல, முழு பணி வரிசையை செயல்படுத்தும் திறன்.
பல தளங்களில் செயல்படும் திறன்: பல்வேறு சாஃப்ட்வேர், வலைத்தளங்கள், மற்றும் சேவைகளுடன் தொடர்பு கொண்டு செயல்படுதல்.
முடிவெடுக்கும் திறன்: எதிர்பாராத சூழ்நிலைகளில் தானாகவே சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்தல்.
அன்றாட வாழ்வில் AI ஏஜென்ட்கள்
1. அலுவலக வேலை தானியக்கம்: நீங்கள் "இந்த வாரத்தின் விற்பனை தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, முக்கிய கண்டுபிடிப்புகளுடன் ஒரு பவர்பாயிண்ட் விளக்கக்காட்சி உருவாக்கு" என்று கேட்கலாம். ஒரு AI ஏஜென்ட்:
தரவுத்தளத்திலிருந்து தரவைப் பெறும்
தரவைப் பகுப்பாய்வு செய்யும்
முக்கிய கண்டுபிடிப்புகளை அடையாளம் காணும்
ஒரு முழுமையான பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியை உருவாக்கும்
அதை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பும்
சாதாரண AI சாட்பாட் உங்களுக்கு எப்படி பவர்பாயிண்ட் உருவாக்குவது என்று கூறும், ஆனால் அதை உங்களுக்காக செய்து தராது.
2. வீட்டு தானியக்கம்: "அமேசான் பிரைமில் உள்ள ஜுராசிக் பார்க் படத்தின் முதல் காட்சியை எனது சாம்சங் டிவியில் காட்டு" என்று கேட்டால்:
ஏஜென்ட் அமேசான் பிரைம் கணக்கில் உள்நுழையும்
படத்தைத் தேடும்
சரியான நேரத்தில் படத்தைத் துவக்கும்
உங்கள் ஸ்மார்ட் டிவியுடன் இணைந்து அதில் காட்சியை இயக்கும்
இதற்கு கூகுள் அசிஸ்டன்ட் அல்லது அலெக்ஸா பல வாக்கியங்களை அடுத்தடுத்து கூற வேண்டியிருக்கும், ஆனால் புதிய அலெக்ஸா plus AI ஏஜென்ட் ஒரே கட்டளையில் அனைத்தையும் செய்து முடிக்கும்.
3. பயண திட்டமிடல்: "சென்னையிலிருந்து மும்பைக்கு நான்கு நாள் பயணத்திற்கான முழு திட்டம் உருவாக்கு, என் வரவு செலவு ₹25,000" என்று கேட்டால், AI ஏஜென்ட்:
மலிவான விமான டிக்கெட்டுகளைக் கண்டறியும்
உங்கள் பட்ஜெட்டுக்கேற்ற ஹோட்டல்களைக் கண்டறியும்
பார்க்க வேண்டிய இடங்களை பரிந்துரைக்கும்
உணவகங்களைப் பரிந்துரைக்கும்
உள்ளூர் போக்குவரத்து விருப்பங்களை ஆராயும்
இவை அனைத்தையும் ஒரு முழுமையான பயணத் திட்டமாக ஒருங்கிணைக்கும்
AI சாட்பாட் வெறுமனே ஆலோசனைகளை வழங்கும், ஆனால் AI ஏஜென்ட் உண்மையான முன்பதிவுகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
உலகில் முன்னணி AI ஏஜென்ட்கள்
1. ஆந்த்ரோபிக் கிளாட் (Anthropic Claude) : கிளாட் AI ஏஜென்ட் திறனில் தனித்துவமானது. இது நூற்றுக்கணக்கான பக்க ஆவணங்களை ஆழமாக புரிந்துகொள்ளும் திறன் கொண்டது. உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் 200 பக்க அறிக்கையை கிளாட்டுக்கு அளித்து, "இந்த ஆண்டின் முக்கிய வணிக அபாயங்களை பகுப்பாய்வு செய்" என்று கேட்டால், அது மனித தரத்திலான பகுப்பாய்வை வழங்கும். இந்த ஆழமான புரிதல் திறன் சட்ட ஆவணங்கள், மருத்துவ ஆய்வறிக்கைகள், மற்றும் சிக்கலான தொழில்நுட்ப விளக்கங்களை கையாள்வதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
2. OpenAI ஏஜென்ட்கள்: OpenAI GPT-4 அடிப்படையிலான ஏஜென்ட்கள் பல்வேறு தளங்களுடன் இணைந்து செயல்படும் திறன் கொண்டவை. இவை வெறுமனே தகவல்களைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை. "எனக்கு தினசரி செலவுகளை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்கு" என்று கேட்டால், இது Google Sheets உடன் இணைந்து புதிய ஸ்ப்ரெட்ஷீட்டை உருவாக்கி, தானியங்கி கணக்கீடுகளை அமைத்து, உங்கள் ஸ்மார்ட்போனுக்கு அணுகல் அளிக்கும். மேலும், தானாகவே செலவு அறிக்கைகளை உருவாக்கி, தினசரி நினைவூட்டல்களை அனுப்பும் திறனும் கொண்டது.
3. Google Gemini: Gemini கூகுளின் முழு சூழலமைப்புடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறன் கொண்டது. இது "Ok Google" குரல் கட்டளைகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. "அடுத்த வாரம் நான் தொழில்முறை சந்திப்பிற்காக பெங்களூரு செல்கிறேன், அனைத்து ஏற்பாடுகளையும் செய்" என்று கூறினால், Gemini:
உங்கள் Google காலெண்டரில் உள்ள சந்திப்புகளின் அடிப்படையில் சிறந்த விமான நேரங்களைத் தேர்ந்தெடுக்கும்
சந்திப்பு இடங்களுக்கு அருகில் தங்குமிடங்களை கண்டறியும்
உங்கள் Gmail-ல் உள்ள தொடர்புகளுக்கு சந்திப்பு அழைப்புகளை அனுப்பும்
Google மேப்ஸில் இருந்து போக்குவரத்து விருப்பங்களை முன்கூட்டியே திட்டமிடும்
உங்கள் Google Drive-ல் இந்த பயணத்திற்கான அனைத்து ஆவணங்களையும் ஒரு கோப்புறையில் (folder) ஒழுங்கமைக்கும்
4. மனுஸ் AI (Manus AI Agent): சீனாவின் சக்திவாய்ந்த AI ஏஜென்ட்
டீப் சீக் மற்றும் AI ஏஜென்ட்கள் பற்றி பார்த்தோம். இப்போது, சீனாவிலிருந்து வந்துள்ள மனுஸ் AI என்ற மற்றொரு சக்திவாய்ந்த AI ஏஜென்ட் பற்றி அறிந்துகொள்வோம். மனுஸ் AI பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்து முடிக்கக்கூடியது, மேலும் அதன் செயல்திறன் மற்றும் வேகம் காரணமாக பலராலும் பாராட்டப்படுகிறது.
ஏன் AI ஏஜென்ட்கள் புரட்சிகரமானவை?
AI ஏஜென்ட்கள் நம் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துகின்றன. பல மணிநேர பணிகளை நிமிடங்களில் செய்து முடிக்கும் திறன் கொண்டவை. இவை சிக்கலான தொழில்நுட்ப திறன்கள் இல்லாதவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளன.
இந்த நவீன AI ஏஜென்ட்களின் ஒரு முக்கிய உதாரணம் மனுஸ் AI. இது எவ்வாறு வணிகங்களுக்கும் தனிநபர்களுக்கும் பல்வேறு தானியக்க சேவைகளை வழங்குகிறது என்பதை அடுத்து பார்ப்போம்.
நுண்ணறிவின் புதுமை: நாளைய உலகின் ஓவியம்
AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகளாவிய அளவில், AI சந்தை 2025-ல் 757.58 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2034-ல் 3,680.47 பில்லியன் டாலராக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், AI சந்தை 2025-ல் 7.8 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம்
AI மருத்துவத்தில் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. 2021-ல் மருத்துவத்தில் AI பயன்பாடு 11 பில்லியன் டாலராக இருந்தது, இது 2030-ல் 188 பில்லியன் டாலராக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது
கல்வி
AI கல்வியில் தனிப்பட்ட கற்றல் அனுபவங்களை உருவாக்குகிறது. பல கல்வி நிறுவனங்கள் AI கருவிகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு தனிப்பட்ட கற்றல் திட்டங்களை வழங்குகின்றன
வேலைவாய்ப்பு
AI வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2030-ல் சுமார் 12 மில்லியன் வேலைகள் மாற்றத்திற்கு உள்ளாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சவால்கள்
AI தொழில்நுட்பம் சில சவால்களையும் கொண்டுள்ளது. தவறான தகவல்கள் தரும் ஹாலுசினேஷன் (Hallucinations) போன்ற பிரச்சனைகள் உள்ளன, இது சில சமயங்களில் 15% வரை இருக்கும். இந்த பிரச்சனைகளை சமாளிக்க புதிய ஆராய்ச்சி மாதிரிகள் முன்னேறிய வரலாற்றைக் காட்டுகின்றன. சிறந்த விசாரணை திறன்களைக் கொண்ட இந்த மாதிரிகள் (Reasoning models), பாரம்பரிய AI மாதிரிகளை விட மேம்பட்டதாகவும் ஹாலுசினேஷனைக் குறைப்பதற்கான ஒரே தீர்வாகவும் விளங்குகின்றன.
இந்த அடிப்படையில், AI தொழில்நுட்பத்தை நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பாகவும் திறம்படவும் பயன்படுத்துவதற்கு திட்டமிட வேண்டும். உலகளவில் AI நெறிமுறை கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவது இதற்கு ஒரு முக்கிய படியாகும்.
குவாண்டம் கணிப்பொறியியல்: AI இன் எதிர்காலம்
பாரம்பரிய கணிப்பொறிகளும் குவாண்டம் கணிப்பொறிகளும்: ஒரு பரிணாம வளர்ச்சி
பாரம்பரிய கணிப்பொறிகள் "இது என்றால் இதை செய், இல்லையெனில் அதனை செய்" என ஒரே முடிவை எடுக்கின்றன. (If-Then-Else) ஆனால் குவாண்டம் கணிப்பொறிகளின் தனித்தன்மை, "சூப்பர்போசிஷன்" (Superpostion) என்ற அற்புதமான திறனை அடிப்படையாகக் கொண்டது. 2023-ல், IBM சில ஆயிரக்கணக்கான குபிட்களைக் (Qbits) கொண்டு குவாண்டம் கணினியை அறிமுகப்படுத்தியது; இது பாரம்பரிய கணினிகளால் இயல்பாக செய்ய முடியாத அளவிலான, ஒரே நேரத்தில் பல கணக்கீடுகளை மேற்கொள்ளும் திறனை வெளிப்படுத்துகிறது.
குவாண்டம் கணிப்பொறியியல்: எளிய விளக்கம்
பாரம்பரிய கணிப்பொறிகள் "0" அல்லது "1" என்ற இரண்டு நிலைகளில் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் குவாண்டம் கணிப்பொறிகளின் குபிட்கள், "0", "1" மற்றும் அவற்றுக்கு மேலதிக இடைநிலை நிலைகளில் இருப்பதன் மூலம், ஒரே சந்தர்ப்பத்தில் பல முடிவுகளைக் கவனிக்க முடிகிறது. உதரணமாக ஒரு, நாணயத்தை எடுத்துக் கொள்ளலாம், நாணயம் சுழலும்போது, அது இறுதியில் "ஹெட்(Head)" அல்லது "டெய்ல் (Tail)" ஆக உறுதிப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, சில நேரங்களில் அதன் சுற்றும் நிலையில் பல தோரணைகளை ஒரு நேரத்தில் காட்டும். இவ்விதமான "சூப்பர்போசிஷன்" திறன், குவாண்டம் கணிப்பொறிகளுக்கு பாரம்பரிய கணினிகளுக்கு அரிதான, ஒரு முறை எல்லா சாத்தியங்களை ஆராய்ந்து எளிதில் தீர்வு காண உதவுகிறது. ஒரு சோதனை முயற்சியில், குவாண்டம் கணினி ஒரு சிக்கலான கணக்கை வெறுமனே சில நிமிடங்களில் முடித்தது; இதற்கு, பாரம்பரிய சூப்பர் கணினிகள் அதே கணக்கினை தீர்க்க ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
குவாண்டம் கணிப்பொறியியல் மற்றும் AI ஒருங்கிணைப்பு
குவாண்டம் கணிப்பொறியியல், AI இன் எல்லைகளை புதிய பரிமாணங்களுக்கு கொண்டு சென்று, மிகவும் சிக்கலான கணக்கீடுகளை மிக வேகமாகவும் துல்லியமாகவும் தீர்க்க உதவுகிறது. மருத்துவத் துறையில், 2024-ல் குவாண்டம் மற்றும் AI ஒருங்கிணைப்பால், மருந்துகளின் மூலக்கூறு மாதிரிகளை உருவாக்கும் வேகம் பெரிதும் கூடியது; அதேபோல், உலக காலநிலை ஆய்வில் குறிப்பிடத்தக்க உயர்ந்த துல்லியத்தை வழங்கியது. இப்போது, உலகின் பல நாடுகள் குவாண்டம் கணினி ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதனை அடுத்த படியாக உயிர் பெறச் செய்ய முயன்றுவருகின்றன.
எதிர்கால வாய்ப்புகள் கூகுள், IBM போன்ற முன்னணி நிறுவனங்களின் அறிவிப்பின் படி, 2025-க்குள் குவாண்டம் கணினிகள், பெரிய AI மாடல்களை பயிற்றுவித்து, நல்ல தீர்வுகளை நமக்கு கொடுக்கும் தளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவாண்டம் கணிப்பொறியியல் தாக்கங்களும் சவால்களும்
குவாண்டம் கணினி மற்றும் AI ஒருங்கிணைப்பு, எதிர்காலத்தில் மிகப் பெரிய பொருளாதார மதிப்பை உருவாக்கக்கூடும். ஆனால், குவாண்டம் கணினிகள் தற்போதைய பாதுகாப்பு முறைகளை எளிதில் முறிக்கக்கூடியதன் காரணமாக, 2022-முதல் பல நாடுகள் புதிய (Post-Quantum Cryptography) தரநிலைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன.
AI மற்றும் குவாண்டம் கணிப்பொறியியல் ஒருங்கிணைப்பு, தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த பெரிய புரட்சியாக மாறவிருக்கிறது. இந்த இணைவு, மருத்துவம், காலநிலை கணிப்பு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் நிதி பாதுகாப்பு போன்ற துறைகளில் முன்னோடியான முன்னேற்றங்களை உருவாக்கும். எதிர்காலத்தில், AI கணக்கீடுகள் குறைந்த ஆற்றல் செலவில், அதிக துல்லியத்துடன் செயல்படுவதால், நமது அன்றாட வாழ்வில் ஒரு புதிய உலகத்தை அருள்புரியும் என நம்பப்படுகிறது. இந்த நாள் வெகு தூரத்தில் இல்லை
தொழில்நுட்பம் வழிநடத்தும் எதிர்காலம்
"கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு" என ஒளவையார் சொல்வது போல், செயற்கை நுண்ணறிவு ஒரு தொடக்கமே. தீவிர ஆராய்ச்சி, புதிய முன்னேற்றங்கள், மனித கற்பனைக்கு எல்லை கிடையாது என்பதற்கான சான்றாய் செயற்கை நுண்ணறிவு பரந்துபட்ட களமாக உள்ளது.
இதனை உணர்ந்து தமிழறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் இதை மட்டுமே பார்ப்பதல்ல, இன்னும் ஆழமாகச் செலுத்தி ஆராய்ந்து புரிந்துகொள்ள முயல வேண்டும். AI தொழில்நுட்பத்தின் சவால்களை நாம் எதிர்கொள்ளும் அதே வேளையில், அதன் அபரிமிதமான சாத்தியக்கூறுகளை உணர்ந்து, அதை நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
"தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"
என்று திருவள்ளுவர் கூறியது போல, அறிவின் ஆழம் கற்றல் அளவுக்கு ஏற்ப விரிவடைகிறது. செயற்கை நுண்ணறிவு என்ற இந்த புதிய நீரூற்றில், நாம் ஆழமாகத் தோண்டுவதை நிறுத்தாமல் தொடர்ந்தால், அது நமக்கு அறிவு என்ற பெருங்கடலாக மாறும். மரபுடன் கூடிய நவீனத்தை இணைத்து, பழமையின் வேர்களில் புதுமையின் விதைகளை விதைப்போம்.
எதிர்காலத்தின் வாசல்களைத் திறக்கும் திறவுகோல் நம் கைகளில் உள்ளது. தொழில்நுட்பத்தின் விளக்கொளியில் தமிழ் மொழியின் அறிவுச்சுடர் இன்னும் பிரகாசமாக ஒளிர ஒவ்வொருவரும் தன் பங்களிப்பை வழங்க வேண்டும். ஏனெனில் வள்ளுவர் சொன்னது போல, "கேடில் விழுச்செல்வம் கல்வி" - அழிவில்லாத செல்வம் கல்வியே. அந்தக் கல்விச் செல்வத்தை நாம் செயற்கை நுண்ணறிவின் வாயிலாக செழுமைப்படுத்தி, உலகிற்கே வழிகாட்டும் ஞானத் தீபமாய் ஒளிரச் செய்வோம்.
AI கல்வி இன்று மிகவும் அவசியம். வாசகர்களாகிய நீங்கள் இந்த கட்டுரையின் மூலம் AI-ன் மீது ஆர்வம் கொண்டு, அதை மேலும் கற்றுணர்ந்து பயன்படுத்தினால், அதுவே எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. பழமையின் ஞானமும் நவீனத்தின் தொழில்நுட்பமும் கைகோர்க்கும் இந்த புதிய காலகட்டத்தில், நாம் அனைவரும் கற்றல் என்ற பயணத்தில் ஒன்றிணைவோம். ஏனெனில், அறிவின் எல்லைகள் விரிவடைய விரிவடைய, மனிதகுலத்தின் சாத்தியங்களும் விரிவடைகின்றன.
மேலும் படிக்க எனது வலை பூவிற்கு வாருங்கள் https://tinyurl.com/rfcdownloadaiofficetamil
Kannan M
Consultant
"Unbiased Quality Advice"
Social Media
Subscribe to our Youtube channel
Blog - https://radhaconsultancy.blogspot.com/
LinkedIn : Connect with me on LinkedIn to learn more about my professional journey and insights.
FB Radha consultancy Page: Follow Radha Consultancy for updates on financial strategies and tips.
X Twitter : @KannanM1960 : Join the conversation on Twitter! Let's discuss finance, ebooks, and more.
Instagram : kannanm1994 : Get a glimpse into my world and the inspiration behind my writing.