Wednesday, 24 August 2016

பரஸ்பர நிதிகள் ஒரு முன்னோட்டம் /Introduction to Mutual Funds

தனி நபர் நிதி மேலாண்மை ( Personal Finance) கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆம் எனில் எவ்வளவு தெரியும்? தெரியும் தெரியும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்புதானே!! அது எனக்கு நன்றாக தெரிகிறது... சரி வாருங்கள், பரீட்சை எழுதலாமா? quiz வைக்கலாமா? என்ன… தயக்கம் தானே?? உங்களை சொல்லி குற்றம் இல்லை. நாட்டு நடுப்பு, அவ்வளவு தான்.

சரி விஷயத்திற்கு வருவோம். கடந்த 30 ஆண்டுகளில் பலதரப்பட்ட பல நிலை மக்களை சந்தித்து இது பற்றி உரையாடி இருக்கிறேன். உயர் பதவியில் உள்ள நிதி மேலாண்மை செய்பவர் கூட XIRR , IRR போன்ற விஷயங்கள் பிடி படுவதில்லை. லாப விகிதங்கள் தெரியாமலேயே எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்வதன் காரணம்.. எல்லோர்க்கும் தெரிந்த உடனடி முதலீட்டு அனுபவம், அது தனது அனுபவமாகவோ அல்லது செவி வழி செய்தியாகவோ "நிலத்தை வாங்கி போடு , கோடீஸ்வரன் ஆகலாம்" என்ற செய்தி தான்.

இந்த நிலை, முதல் தட்டு முதல் கடை தட்டு வரை அனைவரும் அறிந்த தாரக மந்திரம் தான். அவர்களிடம் multiple asset based mutual fund பற்றி கேட்டால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த சிறு முயற்சி. இது பற்றி ஆங்கில ஊடங்கங்களில் அதிகம் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் நமது தமிழில் எளிமையாக புரியும் படி இருப்பது குறைவு தான். எனவே, தமிழில் தனி நபர் மேலாண்மை பற்றி பரஸ்பர நிதிகள் பற்றி, அறிய வாருங்கள்!! கருத்துக்களை சூத்திரங்களை பகிர்வோம்,சுவைப்போம் வாருங்கள்!!

முதலில் பரஸ்பர நிதி என்றால் என்ன?? அதற்கு முன், உங்களுக்கு குட்டி பெண் Amul பற்றி தெரியும் தானே. குஜராத்தில் பால் காரர்கள் சேர்ந்து co-operative ஆக ஆரம்பித்த Amul இன்று இந்தியா எங்கும் பிரபலம். அடிப்படை தத்துவம், நிறைய பேர் குழுவாக சேர்ந்து பால் வியாபாரம் செய்வது. சரி, நமது தமிழ் நாட்டிற்கு வருவோம். மகளிர் சுய உதவி குழுக்கள் இருக்கின்றன. இதை போலவே, முதலீட்டாளர்கள் எல்லோரும் குழுவாக இணைந்து குழுவின் நன்மைக்காக நன்கு விவரம் தெரிந்த திட்ட மேலாளர் (fund manager) மூலமாக முதலீடு செய்வதே பரஸ்பர நிதிகளின் தாத்பரியம் ஆகும்.  முதலீட்டாளர்கள் சேர்ந்து கொடுக்கும் மொத்த பணத்தை முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கு இணங்க வெவ்வேறான முதலீடுகளில் (equity , debt , gold) முதலீடு செய்து வரும் லாப நஷ்டத்தில் செலவு போக மீதத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்து தருவார்கள்.

இதன் நன்மைகள் சிலவற்றை பார்ப்போம்:
1. நன்கு படித்த திட்ட மேலாளர் நிர்வகிப்பதால், திட்டம் சிறப்பாக அமைய வாய்ப்புகள் அதிகம்.
2. தனியாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் போது சிறிய முதலீட்டில் நிறைய பலதரப்பட்ட பங்குகள் வாங்க முடியாது, இதுவே குழுவாக செயல் படும் போது சாத்தியமே.
3. திறந்தவெளி  சீரான நிர்வாகம் (transparent and able administration)
4. எளிமையான வாங்கி விற்கும் முறைகள்.
5. முதல் நிலை முதல் கடை நிலை வரை அவரவர்கள் வசதிக்கேற்ப சிறிய பெரிய முதலீடு செய்து பங்கு பெறலாம். இங்கே கவனித்து கொள்ளவேண்டியது நிலம் வாங்குவதில் சாத்தியம் இல்லை.
6. அதே சமயம் திட்ட மேலாளர் வாங்கும் பங்குகளை நாம் தேர்வு செய்ய முடியாது. பங்கு திட்டமா கடன் பத்திரமா என்று தேர்வு செய்யலாமே தவிர, எந்த பங்கு என்று தேர்வு செய்ய முடியாது. திட்ட மேலாளர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

நம்மில் சிலர் நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்து சிறுது லாபமும் அநேக நஷ்டமும் அடைந்து பங்கு சந்தை விட்டு விலகி ஓடியிருப்பார்கள். ஆனால் பங்குகள் இல்லை எனில் நாட்டின் வளர்ச்சி இல்லை.. நாட்டின் வளர்ச்சி இல்லை எனில் நமக்கு தின கஞ்சிக்கே கஷ்டம் தான். எனவே நாட்டின் வளர்ச்சிக்கும் உதவி நமது வளர்ச்சிக்கும் வழி வகுக்க பரஸ்பர நிதி மூலமாக பங்கு சந்தையில் பங்கேற்கலாமே!!