Wednesday 27 December 2017

எஸ்.ஐ.பி முதலீடு... தெரிந்ததும் தெரியாததும்!

My new article "10 things to know about SIP investment" has been recently published in "Nanayam Vikatan" dated 24/12/2017. Click here to read the link directly from vikatan website. The same article is given below..

சந்தை ஏறுகிறதோ, இல்லையோ மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகும் தொகை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் முதலீடாகும் தொகை  குறைகிறமாதிரி தெரியவில்லை. இதனால்  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இந்த மகிழ்ச்சி எவ்வளவு நாள் நிலைக்கும்?


இந்தக் கேள்விக்குப் பல பதில்கள்; பல ஆருடங்கள். சந்தை இறங்கிவிட்டால் எஸ்.ஐ.பி  முதலீடு நின்றுவிடும் என்று ஒருசாராரும், இன்னொருசாரார் எஸ்.ஐ.பி இன்னும் பல வருடங்களுக்குத் தொடரும் என்றும் ஜோசியம் சொல்கிறார்கள். இந்தக் கேள்விக்கான சரியான பதில் ஒருபக்கம் இருக்கட்டும். எஸ்.ஐ.பி பற்றி அடிப்படையான விஷயங்களை முதலீட்டாளர்கள் புரிந்துகொண்டு முதலீடு செய்கிறார்களா என்பதுதான் நாம் எழுப்ப விரும்பும் முக்கியமான கேள்வி.

இதற்கு ஒரு சின்ன பரீட்சை வைப்போமா? சரி வாருங்கள் பரீட்சை எழுதலாம்... பாஸா பார்க்கலாம்?

1) எஸ்.ஐ.பி என்பது?
a) எனக்கு வேறு திட்டம் எல்லாம் வேண்டாம். எஸ்.ஐ.பி மட்டுமே போதும். அதுவே போதுமானது.

b) எஸ்.ஐ.பி என்பது திட்டம் இல்லை. அது ஒரு முதலீட்டுமுறை அவ்வளவே.

2) எஸ்.ஐ.பி யாருக்கு உகந்தது?

a) யார் வேண்டுமானாலும் எந்த வயதிலும் எப்போது வேண்டுமானாலும், தொடங்கலாம், கவலையில்லை.

b) எஸ்.ஐ.பி குறிப்பிட்ட வயதினருக்கு, குறிப்பிட்ட வருவாய் உள்ளவர்களுக்கு ஏற்ற முறை.

3) எஸ்.ஐ.பி-யில் லாபம்?

a) நிச்சயம் லாபம் கிடைக்கும். கவலையின்றி இருக்கலாம். சந்தை எப்படிப் போனால் எனக்கென்ன என்று இருக்கலாம்.

b) குறுகிய காலத்தில் லாபமும், நஷ்டமும் சகஜமே.

4) எஸ்.ஐ.பி பயன்பாட்டுக்கு வந்து எவ்வளவு காலம் ஆகியிருக்கிறது?  

a) இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருக்கலாம்.

b) காலங்காலமாக இருக்கிறது.

5) எஸ்.ஐ.பி என்பது ஒரு பரந்து விரிந்த முதலீடா?

a) ஆம், ஒரே தடவை முதலீடு செய்யாமல் ஒவ்வொரு மாதமும்  முதலீடு செய்வதால் அது ஒரு பரந்து விரிந்த முதலீடே.

b) எஸ்.ஐ.பி என்பது ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் தொடங்கு வதால், இது அவ்வளவாகப் பரந்த விரிந்த முதலீடாக இருக்காது.

எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் a-வை டிக் செய்திருக்கிறீர்களா? நீங்கள் ஃபெயில். இரண்டு கேள்விகளுக்கு மட்டும் நீங்கள் b-யைத் தேர்வு செய்திருக் கிறீர்களா? நீங்கள் பாஸ். ஐந்து கேள்விகளுக்கும் நீங்கள் b-யைத் தேர்வு செய்திருந்தால், உங்களுக்கு 100% மார்க்.

இந்த பரீட்சையில் பெயிலான வர்கள் எஸ்.ஐ.பி பற்றி நன்கு தெரிந்துகொள்ள, அதிலுள்ள பத்து முக்கியமான விஷயங்களை விளக்கமாகப் பார்ப்போம்.

1) நாற்பதுக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. அதில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து எஸ்.ஐ.பி தொடங்க லாம். எஸ்.ஐ.பி என்பது திட்டம் இல்லை - அது ஒரு முதலீட்டு முறை. எஸ்.ஐ.பி என்பது, குறிப் பிட்ட இடைவெளியில், குறிப் பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்வதே.




2) எஸ்.ஐ.பி என்பது ஒரு அத்தியாவசியமான முதலீடல்ல.  இது, குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்பட்சத்தில் முதியவர்களுக்கு அவ்வளவு ஏற்றதாக இருப்பதில்லை. அவர்களுக்குத் தேவை எஸ்.டபிள்யூ.பி (SWP). அதுபோல, மாதாமாதம் தவறாமல் சம்பளம்  வருகிறவர்களுக்கு எஸ்.ஐ.பி வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். 

3) எஸ்.ஐ.பி பற்றி இன்னொரு தவறான கருத்தும்  கண்ணோட்டமும் உள்ளது. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால், நஷ்டமே வராது, லாபம் மட்டும்தான். இதுவும் மிகத் தவறானது. எஸ்.ஐ.பி என்பது ஒழுங்கு முறையில், பணம் சேமிக்க உதவும் கருவி. லாப நஷ்டம் என்பது, திட்டம், அதன் செயல்பாடு, சந்தை நிலவரம் போன்றவற்றைப் பொறுத்து நாளுக்கு நாள் மாறும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ஏறுகிற சந்தையில், முழுத் தொகையையும் ஒரே சமயத்தில் முதலீடு செய்வது எஸ்.ஐ.பி-யைவிட நல்ல பலன் தரும். இறங்குகிற சந்தையில், முழுத் தொகையையும் முதலீடு செய்வதை விட, எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதே லாபத்துக்கான வழி.  

4) நிறைய பேர் எஸ்.ஐ.பி என்பது சில வருடங்கள் முன்புதான் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய முதலீடு என்று நினைக்கிறார்கள். ஆனால், அது பல ஆண்டு காலமாக  பயன்பாட்டில் இருக்கிறது. பயன்படுத்துவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.  

5) எஸ்.ஐ.பி என்பது ஒரு பரந்துவிரிந்த முதலீடா? இல்லவே இல்லை. சிலர் எஸ்.ஐ.பி-யில் ஒரே தவணையில் முதலீடு செய்யாமல் பல காலம் செய்வதால், அது பரந்துவிரிந்த முதலீடாகக் கொள்ள முடியாது. காரணம், நாம் எஸ்.ஐ.பி-யில் ஒரே திட்டத்தில் பல வருடங்கள் முதலீடு செய்தாலும், பணம் ஒரே திட்டத்தில்தான் முதலீடு செய்யப்படும்.  அதேசமயம், பரந்துவிரிந்த முதலீடு என்றால் கடன், தங்கம், பங்குச் சந்தை என வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். எனவே, எஸ்.ஐ.பி-க்கும் பரந்துவிரிந்த முதலீட்டுக்கும்  இருக்கும் வித்தியாசத்தைக் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

6) முடிவு தேதி கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றில்லை என்றாலும், எஸ்.ஐ.பி-யைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் கட்ட வேண்டும். முடிவு தேதி தராதபட்சத்தில், எஸ்.ஐ.பி தொடர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் வேண்டும்போது, எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுவனத்திடம் எழுத்து மூலமாகச் சொல்லி நிறுத்திக்கொள்ளலாம். எஸ்.ஐ.பி-யை ஆன்லைனிலும் ஆரம்பிக்கலாம்.

7) எஸ்.ஐ.பி-யின் முடிவில் நாம் வாங்கிய யூனிட்களின் சராசரி விலை, எஸ்.ஐ.பி காலத்தில் இருந்த அதிகபட்ச விலைக்கும் குறைந்தபட்ச விலைக்கும் இடையில் இருக்கும். உதாரணமாக, அதிகபட்ச விலை ரூ.12 என்றும், குறைந்தபட்ச விலை ரூ.8 என்றும் இருந்தால், ஒருவர் வாங்கிய யூனிட்களின் சராசரி விலை 12-க்கும், 8-க்கும் இடையில் இருக்கும்.  நாம் ரூ.9 என்று வைத்துக்கொள்வோம். இது ரூ.12-க்கும் குறைவு. ஆனால், இது எட்டைவிட அதிகம். சராசரி விலை குறைவாக இருப்பதால், லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு.

8) எஸ்.ஐ.பி-யில் ஒரு மாதம் சில பல காரணங்களால் பணம் கட்ட முடியாமல் போனால், நிதி நிறுவனங்கள் அதற்கு அபராதத்  தொகையை  வசூலிப்பதில்லை. எஸ்.ஐ.பி தேதியைத் தவறவிட்டால் அதே மாதத்தில் வேறு தேதியிலும் கட்டிக்கொள்ளலாம். அதேசமயம், வங்கியிலிருந்து மாதா மாதம் பணம் போவது தடைப்பட்டு வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிச் செல்லும்போது அந்தந்த வங்கி அபராதத் தொகை வசூலிக்கும் நிலை ஏற்படலாம். எனவே, ஜாக்கிரதை.

9) ஒவ்வொரு மாதமும் எஸ்.ஐ.பி முறையில் பணம் கட்டும்போது பெருபாலான வங்கிகள் கட்டணமாகப் பணம் ஏதும் வசூலிப்பதில்லை. இருந்தாலும், சில வங்கிகள் இதற்கும் கட்டணம் என்கிற பெயரில் ஒரு சிறு தொகையைப் பிடிக்கின்றன. எனவே, நீங்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கி இந்த விஷயத்தில் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.  

10) டாப் அப் எஸ்.ஐ.பி, ஃப்ளெக்ஸ் எஸ்.ஐ.பி, வேல்யூ எஸ்.ஐ.பி ஃப்ளெக்ஸ் எஸ்.ஐ.பி, வேல்யூ எஸ்.ஐ.பி எனப் பல வகை உண்டு என்பதையும் மறந்துவிடாதீர்கள். 

இந்தப் பத்து விஷயங்களையும் நீங்கள் புரிந்துகொண்டால், இனி நீங்கள் எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்யலாம்.

No comments:

Post a Comment