புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த புது ஆண்டில் ஒரு சபதம் மேற்கொள்வோம். எக்காரணம் கொண்டும் நிதி திட்டங்களில் தவறான விற்பனை யுக்திகளில், மயங்கி முதலீடு செய்ய மாட்டோம், மாட்டிக்கொண்டு முழிக்கமாட்டோம்!
அது என்ன தவறான விற்பனை யுக்திகள்? இது அடிக்கடி விவாதிக்கப்படும் ஒரு முக்கிய கருத்துதான். செபியும் ( SEBI) , ஆர்பிஐ , (RBI) ஐ ஆர டி ஏ யும் (IRDA) அடிக்கடி உச்சரித்துக் கொண்டும் சொல்லிக் கொண்டும் வரும் கருத்துதான். என்ன சொன்னாலும் ஆங்காங்கே இந்த தவறான விற்பனை யுக்திகள் பல்வேறு வகையில் கையாளப்பட்டு வருகின்றது. முகவர்கள், நிறுவனங்கள், வங்கிகள், என்று ஏதோ ஒரு வகையில் ஒவ்வொன்றும் காரணமாகின்றன.
எனக்கு
தவறு என்று தோன்றுவது, உங்களுக்கு சரியாக இருக்கலாம். எனக்கு சரியாக தோன்றுவது உங்களுக்கு தவறாக இருக்கலாம். முடிவில் முதலீட்டில் செலுத்தும் பணம் உங்களுடையது, உங்களுக்கு சரியானது என்பதில் முதலீடு செய்யுங்கள். பின்னர் எப்போதாவது அந்த முதலீடு தவறு என்று தோன்றினால் அல்லது இந்த முதலீட்டில் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று கவலைப் பட்டாலே அது தவறான முடிவு. அது நீங்களாக தேடிகொண்டதாக இருக்கலாம் அல்லது உங்களுக்கு தினிக்கப்பட்டதாக இருக்கலாம். அது உங்களுக்கு திணிக்கப்பட்ட முடிவாக இருக்கும் பட்சத்தில் அதுவே தவறான விற்பனை யுக்திகள் எனப்படுகிறது.
இந்த சிக்கலில் இருந்து தப்பிப்பதற்கு நமக்கு தவறான விற்பனை யுக்திகள் பற்றி நல்ல தெளிவு வேண்டும். காரணிகளை நன்கு புரிந்து கொள்ள வேண்டும், அதற்கு யார் காரணமோ அவர்களை நாம் தவிர்க்க வேண்டும். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிலசமயம் அதற்கு நாமே காரணமாகி விடுவதும் உண்டு. மேலே படியுங்கள் பார்க்கலாம் மேலும்
விபரங்களை
முழு முதல் காரணம் முதலில் நாம்தான். “ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்”. ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
• முடிந்தவரை முதலீட்டிற்கு முன் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
• சாதக பாதகங்களை பார்க வேண்டும்.
• முதலீட்டு திட்டங்களை அலசி ஆராய வேண்டும்.
• தனக்காக தெரியாத பட்சத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்த பிரச்சினை, கேட்பதில்தான் தொடங்குகிறது யாராவது எது சொன்னாலும் அப்படியே “பூம் பூம்” மாடு மாதிரி தலையாட்டி ஒத்துக்கொண்டு முதலீடு செய்யக் கூடாது. கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்து முதலீடு செய்வது ஒருபோதும் உதவுவது இல்லை.
மியூச்சுவல் பண்ட் வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய 5 யுக்திகள்
1) நிதி திட்டங்கள் வாங்கும் முறை
ஒருவர் ஒரு மியூச்சுவல் பண்ட் திட்டத்தையோ காப்பீட்டையோ அல்லது வைப்பு நிதியோ தொடங்குகிறார் என்று வைத்து கொள்வோம். இதை இவர் முகவர் மூலமாகவோ இல்லை வங்கிகள் மூலமாகவோ அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ தொடங்கலாம்.
• முதலீட்டாளர்கள் பெரும்பான்மையாக முகவர் மூலம் வாங்கினால் நமக்கு நஷ்டம், மற்ற வகையில் வாங்கினால் லாபம் என்று என்னுகிறார்கள். இது தவறான கருத்து. வாங்கும் திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும் போது லாப நஷ்டம், திட்டத்தைப் பொறுதே அமையும். வாங்கும் முறையை பொறுத்து அமைவதில்லை.
• அடுத்த தவறான கருத்து முகவர்கள் எமாற்றுவார்கள், மற்ற வகையில் முதலீடு செய்தால் ஏமாற மாட்டோம் என்று எண்ணுவதும் தவறான கருத்து. ஏமாற்றுபவர்கள் அங்கிங்கு கெனாதுபடி எங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். மியூச்சுவல் பண்ட் நிதி திட்டங்களை வங்கிகள் மூலமாகவோ அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ தொடங்கினால் நிச்சியம் லாபம் என்று ஏதும் இல்லை.
2) நிதி திட்டங்கள் வாங்கும் படிவங்கள்
நாம் நிதி திட்டங்களில் முதலீடு செய்யும் போது எல்லா சமயமும் திரும்பவும் சொல்கிறேன் எல்லா சமயமும் நம் கைப்பட படிவங்களைப் பூர்த்தி செய்து கையெழுத்து போட்டு அதை சமர்ப்பிப்பது நல்லது. அதை விட்டுவிட்டு எக்ஸ் ( X) குறியிட்ட இடத்தில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு படிவங்களைக் கொடுக்கும்போது, நாம் ஏமாற்றப் படுவதற்கான சூழலும் அதிகமாகிறது. பிரச்சணை பூதாகாரமாக மாறுகின்றது. நாம் ஏமாறாமல இருக்க நாமே படிவங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைனில் பூர்த்தி செய்தாலும், நமது கணிணியில் அந்தப் படிவங்களை பூர்த்தி செய்வது நாம் ஏமாறுவதை அல்லது ஏமாற்றபடுவதை தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால்:
• முதலில் நாம் நினைத்த திட்டமும், எதிர்பார்ப்பும் வேறு மாதிரி இருக்கின்றது.
• முகவர்கள், மற்றம் நிறுவனங்கள் சொல்வது சற்று மாறி இருக்கின்றது.
• முடிவில் நிதி திட்டம் வாங்கும்பொழுது , உங்களுக்கு உடன் படாத, முற்றிலும் மாறுபட்ட திட்டமாக, வாங்கிய திட்டம் உள்ளது.
இது அடிக்கடி நிகழ்கின்றது. காரணம், புரிதல் என்பது வெவ்வேறு நிலையில் இருப்பதுதான். இதை கற்றவர்கள், நாமே படிவங்களை பூர்த்தி செய்து நாமே கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும் போது , இந்த மாறுதல்கள் நடக்க சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. நாமே படிவங்களை பூர்த்தி செய்ய இயலாத போது மற்றவர்கள் பூர்த்தி செய்து தரும் போது படிவங்களை படித்துப் பார்த்த பின் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதை வழக்காமிக்கு கொள்ளுங்கள். இது மிகவும் உசிதமானது. இவ்வாறு செய்யும் போது நிச்சயம் தவறாக திட்டங்கள் வாங்க படுவது குறையும. உங்களுக்குத் தேவையான நிதி திட்டங்களை நீங்கள் வாங்குமாறு அமையும்.
3) காப்பீடு மற்றும் மியூச்சுவல் பண்ட்
ஆயுள் காப்பீடு என்பது உங்களுக்குப் பிறகு உங்களை சார்ந்தவர்களுக்கு பணம் கிடைக்க வழி வகை செய்யும். மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் பணத்தை பெருக்குவதற்கு ஏற்றவாறே அமைகிறது - காப்பீடு மற்றும் மியூச்சுவல் பண்ட் இரண்டும் ஓன்றல்ல.
தவிர்க்க வேண்டியவை
• பிக்சட் டிபாசிட் அல்லது வைப்பு நிதி என்று நினைத்து காப்பீட்டில் முதலீடு செய்யாதீர்கள்.
• மியூச்சுவல் பண்ட் என்று நினைத்து காப்பீட்டில் முதலீடு செய்யாதீர்கள்.
• வங்கியில் சான்றிதழ்கள் பெற அவர்கள் மூலம் காப்பீடு முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சான்றிதழ்கள் பெற வங்கியில் ஏதேனும் கட்டணம் இருந்தால் வரைமுறைகள் இருந்தால் அதை மட்டும் செலுத்துங்கள்.
• பெரும்பாலும் வயதானவர்களுக்கு காப்பீடு தேவையில்லை, வயதானவர்கள் காப்பீடு செய்யும் முன் யோசித்து அதன் சாதக பாதக நிலை பார்த்து காப்பீடு எடுக்கவும்
4) மியூச்சுவல் பண்ட் திட்டங்களின் லாப விகிதங்கள்
எந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களும் இவ்வளவு வருமானம் வரும் இவ்வளவு லாபம் தரும் என்று சொல்வது இல்லை. செபியின்படி அது சொல்லவும் கூடாது. அனைத்து மியூச்சுவல் பண்ட் திட்டங்களில், லாப நஷ்டம், சந்தையின் ஏற்ற இறக்கத் திற்கு உட்பட்டு உங்களுக்குக் கிடைக்கும். இது தவிர யாராவது கடன் பத்திரத்தில் கட்டாயம் லாபமே, எஸ்.ஐ.பி யில் (SIP) நஷ்டம் வரவே வராது என்று கூறினால் நம்ப வேண்டாம். அதே சமயம் பெரும்பாலும்
இந்த திட்டங்களில் இதுவரை வந்த நஷ்டங்கள் குறைவு லாபத்திற்காக வாய்ப்புகள் அதிகம் அதை
நன்கு புரிந்து பார்த்து படித்து அறிந்து பின் முதலீடு செய்யவும்
5) தவறான எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன், தற்போது மிட் கேப் திட்டங்கள் கடந்த வருடத்தில் சுமார் நாப்பதிலிருந்து ( 40%)
அறுவது சதவீதத்தில் (60%)
லாபம் கொடுத்துள்ளது. இது போன்று லாபம் தரும் திட்டமே வேண்டும் என்று கறாராக என்னிடம் சொல்லிவிட்டார் . அதில் குறியாக இருக்கிறார். இதுவே
தவறான விற்பனை யுக்திக்கு காரணமாக அமைந்து வருகிறது. சிலர் இதை காரணம் கொண்டு அவர்களிடம் உள்ள அனைத்து முதலீடுகளையும் மிட் கேப் முதலீடாக மாற்றி விடுகிறார்கள். இது ஒரு தவறான செயல் என தோன்றுகிறது. காரணம், தற்போது சந்தை உச்சத்தில் உள்ளது அடுத்த ஒரு வருடத்தில் இதே போல் (50%)
ஐம்பது சதவீதம் லாபம் வருமா என்றால் , வரலாம், வராமலும் போகலாம். மிட் கேப் வருடா வருடம் ஐம்பது சதவிகிதம் (50%) லாபம்
தரும் என்று அறுதியிட்டுக் கூற முடிந்தால் சந்தையில் பிற திட்டங்கள் தேவையில்லை. நாம் அனைவரும் மிட் கேப்
பண்டுகளில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம் , அல்லது நான் இந்தக் கட்டுரை எழுதுவதை விட்டுவிட்டு எனக்குத் தெரிந்த அந்த ரகசியத்தை வைத்துக்கொண்டு எனது எல்லா சொத்துக்களையும் விற்று விட்டு, மிட் கேப்
பண்டில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. நிச்சயமாக அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை அல்லது குறைவு. எனவே இது ஒரு தவறான முதலீடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எவரேனும்
ஒரு குறிப்பிட்ட திட்டம் தொடர்ந்து காலம் காலமாக நிறுவனத்திலிருந்து 25%
லாபம் கொடுக்கும் என்று கூறினால் சுதாரித்துக் கொள்ளுங்கள். அது அவ்வளவு உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. கடந்த காலத்தில சில பங்கு திட்டங்கள் இருபது வருடங்களில் (20 years) சராசரியாக 20% மேல் வருமானம் தந்துள்ளதாக சரித்திரம் இருக்கின்றது. ஆனாலும் அதே திட்டங்கள் வருடாவருடம் தொடர்ந்து ஒரே மாதிரியாக 20% கொடுத்திருக்காது. சில
வருடம் தற்போது போல் நாப்பது பர்சன்ட் ( 40%) கொடுத்திருக்கலாம், சில வருடங்கள் 8%
கொடுத்திருக்கலாம் . சராசரியாக இருபத்தைந்து வருடங்களில் 20% என்பதை
புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வியும் பதிலும்
• கேள்விகள் கேட்பது அசிங்கம் இல்லை, கேட்காமலே முதலீடு செய்வது
நஷ்டத்தில் கொண்டு போய் முடியும்.
• முதலீட்டுக்கு முன் கேள்விகள் கேளுங்கள். இதனால் முதலீட்டிறக்கு பின் வரும் கேள்விகள் குறையும்.
• பெரும்பாலும் முதலீட்டுக்கு முன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.
முதலீட்டுக்கு பின் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை
ஆக
உஷராக இருப்பது அவசியம். எல்லா நிதி நிறுவனத்தின் எல்லா திட்டங்களும் எல்லோருக்கும் ஏற்றவாறு இருக்காது. சில பல திட்டங்கள், சில பல பிரிவு மக்களுக்கு மட்டுமே. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எதிர்பார்ப்புகள் குறைத்துக்கொண்டு , பேராசை இல்லாமல் நன்கு புரிந்த தெரிந்த எளிமையான திட்டங்களில் முதலீடு செய்வது இந்த வருடத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
ஆங்கிலத்தில் சொல்வார்கள் Buyers Beware. இது மிக சரியே. நிதி திட்டங்கள், வாங்கும் போது ,வாங்குபவர்கள் மிகவும் உஷராக இருப்பது மிக மிக அவசியம்!!
No comments:
Post a Comment