Tuesday, 6 February 2018

பட்ஜெட்: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்னென்ன பாதிப்புகள்..!

My article on "Impact of budget proposal on Mutual Funds" has been recently published in "Nanayam Vikatan". Click here to read the link directly from vikatan website. The same article is given below..

பட்ஜெட் 2018-19 ஆல்  மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் என பார்ப்போம். 

பிப்ரவரி 1  பட்ஜெட், 
பிப்ரவரி 2 சென்செக்ஸ்  839 புள்ளிகள் சரிவு,
பிப்ரவரி 5  சந்தையில் இறக்கம்.


ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில், நீண்ட கால மூலதன ஆதாய வரி, ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு 10% கட்ட வேண்டும். இது 01-02-2018 முதல் நடைமுறைக்கு வரும். மேலும், விலைவாசி உயர்வு சரிகட்டல் (இண்டெக்ஸேஷன்)  செய்ய இயலாது.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் டிவிடண்ட் விநியோக வரி 10%   01-04-2018  முதல் அமலுக்கு வரும்.

இந்த இரண்டு விஷயங்களும் முக்கியமாக மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களை பாதிக்கும் வகையில் உள்ளது. அந்தப் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்று இப்போது பார்க்கலாம்.

தற்சமயம் கடன் சார்ந்த ஃபண்ட்களுக்கு 25% டிவிடெண்ட் விநியோக வரி உள்ளது. பட்ஜெட்க்கு பிறகு ஈக்விட்டி ஃபண்ட்களுக்கு 10% டிவிடெண்ட் விநியோக வரி இருக்கும்.

ஈக்விட்டி ஃபண்ட்களில் குறிப்பாக டிவிடெண்ட் ஃபண்ட்கள் என்பது மிகவும் பிரபலமான ஒன்று. இந்த புதிய வரி விதிப்பு காரணத்தால் இந்த டிவிடண்ட் ஃபண்ட்கள் பிரபலம் சற்றே குறையலாம்.

குறிப்பாக பேலன்ஸ்ட் ஃபண்ட்களில் மாத வருமானத்தை மனதில் கொண்டு முதலீடு செய்தவர்களுக்கு மாத டிவிடண்ட் வருவாய் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. உதாரணமாக மாத டிவிடண்ட் வருமானம் 1,000 ரூபாயாக இருக்கும் சமயத்தில் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து அது 900 ரூபாய்க்கு மாறலாம்.

டிவிடெண்ட் விநியோக வரி 01/04/2018 முதல் நடைமுறைக்கு வருவதால் இடைப்பட்ட பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஈக்விட்டி ஃபண்ட்களிலிருந்து கணிசமான டிவிடெண்ட் முதலீட்டாளர்களுக்கு வர  வாய்ப்பு உள்ளது. காரணம் 31/03/2018-க்கு  முன் ஈக்விட்டி ஃபண்ட்களில் டிவிடண்ட்க்கு வரி கிடையாது. 

தற்சமயம் ஈக்விட்டி சார்ந்த பேலன்ஸ்ட் ஃபண்ட்கள் வரும் காலங்களில் கடன் சார்ந்த பேலன்ஸ்ட் ஃபண்ட்களாக மாற்றக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன.

சில பங்குச் சந்தை சார்ந்த பேலன்ஸ்ட் ஃபண்ட்கள் தொடர்ந்து இரண்டு இலக்கு (10% -12%)  லாபம் கொடுத்து வந்த  நிலையில் இனி அந்த லாபம் கிடைக்குமா என்பது கேள்வி குறியே. 10% டிவிடெண்ட் விநியோக வரி, சந்தையின் போக்கு மற்றும் உலகச் சந்தையில் குரூட் ஆயிலின் விலை, மற்றும் தேர்தல் வருடம் போன்றவை லாப விகித்த்தை பாதிக்கும்  காரணிகளாக  உள்ளன.

டிவிடெண்ட் விநியோக வரியால் ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் லாபம் குறையும். எனவே, இந்த ஃபண்ட்களுக்கு ஆதரவு குறைய  கூடும்.

புதிய நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பில் 31-01-2018 வரை கிடைத்த லாபத்திற்கு வரி செலுத்த தேவையில்லை. 01/02/2018 முதல் ஈக்விட்டி ஃபண்ட்களில் ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட  லாபத்திற்கு 10% வரி கட்ட வேண்டும். லாபத்தை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்படலாம்.  இது முதலீட்டாளர்களுக்கு தலைவலியாக கூட இருக்கலாம். வரி கட்ட வேண்டிய லாப கணக்கீடு செய்வதற்கு இரண்டு என்.ஏ.வி பதிலாக நமக்கு மூன்று என்.ஏ.வி  தேவைப்படுகிறது. வாங்கிய என்.ஏ.வி, 31-01-2018 என்.எ.வி மற்றும் விற்ற என்.ஏ.வி,    மூன்றும் இருந்தால் மட்டுமே லாபத்திற்கு  எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்று கணக்கிட முடியும்.

பட்ஜெட்டால் ஈக்விட்டி ஃபண்டுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. கடன் ஃபண்ட்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை 3.5% ஆக அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் அது பங்குச் சந்தையைப் பாதித்து வருகிறது. கடன் சார்ந்த ஃபண்ட்களில்  லாபமும் குறைந்து வருகிறது.  10 வருட அரசு கடன் பத்திரங்களின் வருமானம் 7.5% ஆக அதிகரித்துள்ளதால், கடன் சார்ந்த ஃபண்ட்களின் லாபம் குறைந்து, கடந்த ஒரு வருட காலத்தில் கடன் சார்ந்த டைனமிக் பாண்ட் ஃபண்ட்களின் லாபம் 5%  அல்லது அதற்கும குறைவாக உள்ளது.

தற்போதய சூழலில் குறுகிய கால கடன் சார்ந்த ஃபண்ட்களில் முதலீடு செய்தால், கூடுதல் வருமானம் கிடைக்கும். 

No comments:

Post a Comment