My recent article on "Which is best - Dividend option vs Growth option" has been published in "Nanayam Vikatan". Click here to read the article directly from vikatan website. The same article is given below.
பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின்மீது இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் டிவிடெண்ட் விநியோக வரி (Dividend distribution tax) 10% மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% விதிக்கப்பட்டுள்ளது. இது பங்கு சார்ந்த ஃபண்ட் முதலீட்டாளர்களின் வருமானத்தைப் பாதிக்கும். இந்த வரிச் சுமையிலிருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி பார்ப்போம்.
டிவிடெண்ட் விநியோக வரி
டி.டி.டி எனப்படும் டிவிடெண்ட் டிஸ்டிரிபியூஷன் டாக்ஸ் பற்றி முதலில் பார்ப்போம். மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றின் யூனிட்டின் முகமதிப்பு பத்து ரூபாய். ஒரு வருடம் கழித்து இதன் லாபம் 20% அதிகரித்து, என்.ஏ.வி ரூ.12-ஆக உயர்கிறது என்று கொள்வோம். அப்போது அந்த ஃபண்டிற்கு 10% டிவிடெண்ட் கொடுத்தால், அதன் என்.ஏ.வி ரூ.11-ஆகக் குறைந்துவிடும். இந்தப் புதிய வரி விதிப்பிற்குப்பின் என்.ஏ.வி ரூ.10.9-ஆக இருக்கும்.
காரணம், நமக்குக் கொடுத்த டிவிடெண்ட் ரூ.1-க்கு மத்திய அரசுக்குக் கட்டிய டிவிடெண்ட் விநியோக வரி 10 பைசா. இதுவே ஒரு முதலீட்டாளர் 1000 யூனிட்கள் வைத்திருந்தால், வருமானத்தில் ரூ.100 குறைந்துவிடும். எனவே, முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் லாபம் இந்த வரியினால் குறைகிறது.
இங்கு நாம் நன்கு நினைவில்கொள்ள வேண்டியது, முதலீட்டாளர்களுக்குக் கையில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகைக்கு வரி கிடையாது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஒவ்வொரு முறை டிவிடெண்ட் அளிக்கும்போதும், டிவிடெண்ட் விநியோக வரியை ஃபண்ட் லாபத்தில் இருந்து அரசுக்குக் கட்ட வேண்டும். இதனால் நமக்கு ஃபண்டில் இருந்து வரும் லாபம் குறைகிறது. சமீபத்தில் அதிகம் முதலீடு செய்யப்பட்ட ஃபண்ட் திட்டங்கள் அனைத்தும் இந்த டிவிடெண்ட் விநியோக வரியால் பாதிக்கப்பட்டுள்ளன.
தப்பிப்பது எப்படி?
டிவிடெண்ட் ஆப்ஷன்கள் மற்றும் டிவிடெண்ட் ஃபண்டுகளிலிருந்து குரோத் (வளர்ச்சி) ஆப்ஷனுக்கு மாறுவதன் மூலம் இந்த வரிச்சுமையிலிருந்து தப்பிக்க முடியும். தற்போது கடன் ஃபண்டுகளில் (டிவிடெண்ட் ஆப்ஷன்) மொத்த முதலீட்டை மேற்கொண்டுவிட்டு, பங்கு சார்ந்த ஃபண்டுகளுக்கு சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (எஸ்.டி.பி - STP) மூலம் முதலீட்டை மாற்றி வருபவர்கள், எஸ்.ஐ.பி (SIP) முறையில் டிவிடெண்ட் வருமானம் தரும் பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள், இந்த எஸ்.டி.பி /எஸ்.ஐ.பி-யை குரோத் ஆப்ஷனுக்கு மாற்றிக்கொள்வது நல்லது. தேவைப்பட்டால், தற்போது செய்துவரும் முதலீட்டை நிறுத்திவிட்டு, புதிதாக குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்து, எஸ்.டி.பி / எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.
நடப்பு நிதியாண்டில் நமது பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் குரோத் ஆப்ஷனில் பங்கு சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் எஸ்.டி.பி /எஸ்.ஐ.பி முறையின் மூலம் முதலீட்டைத் தொடர்வது நல்லது.
குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்யும்போது இடையிடையே பணம் எதுவும் கிடைக்காது. இந்த நிலையில் குரோத் ஆப்ஷனில் முதலீடு செய்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு வருமானத்தைப் பெற எஸ்.டபிள்யூ.பி (SWP) முறையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறைஅல்லது ஆண்டுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கேற்ப அந்த ஃபண்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதனால் அவர்களுக்கு லாபம் கொஞ்சம் அதிகமாகக்கூட கிடைக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை.
ஆனால், இந்த எஸ்.டபிள்யூ.பி முறையின்மூலம் லாபத்தை எடுக்கும் போது மூலதன ஆதாய வரி (Capital gain tax) விதிக்கப்படும். எனவே, டிவிடெண்ட் டிஸ்டிரிபியூஷன் டாக்ஸைத் தவிர்க்க நினைத்து, மூலதன ஆதாய வரியில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ஒரு வழி உள்ளது. மூலதன ஆதாயத்தின் மூலம் லாபத்துக்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் வரை வரி இல்லை என்பதால் வரிச்சுமை குறைகிறது. இந்த வகையில் நமக்குக் கிடைக்கும் லாபம், ஒரு வருடத்திற்கு மேல் முதலீடு செய்யப் பட்டதாக இருக்க வேண்டும் என்பதை மறக்கக்கூடாது.
டிவிடெண்ட் மற்றும் குரோத் வகை முதலீடு
டிவிடெண்ட் ஆப்ஷன், குரோத் ஆப்ஷன் இடையே முக்கிய வித்தியாசம் உள்ளது. டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்திருக்கும் போது டிவிடெண்ட் தொகை, தேதியை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முடிவு செய்யும். பல சமயங்களில் நமது தேவைக்கேற்ற தொகை கிடைப்பதில்லை. மேலும், நாம் விரும்பிய நேரத்தில் அந்தத் தொகை கிடைப்பதில்லை. ஆனால், குரோத் ஆப்ஷனில் முதலீடு செய்து எஸ்.டபிள்யூ.பி முறையில் பணத்தை எடுத்துக்கொள்ளும்போது, மாதம் எவ்வளவு பணம் எடுக்கலாம்5 என்பதை நாமே முடிவெடுக்க முடியும்.
எனவே, டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, குரோத் ஆப்ஷனில் முதலீடுகளைச் செய்வது நல்லது. ஏற்கெனவே டிவிடெண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்துவந்தால், வரிச் சுமையைக் குறைக்க, குரோத் ஆப்ஷனுக்கு மாற்றிக்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு குரோத் ஆப்ஷனைத் தேர்வுசெய்து, கூடுதல் லாபம் பார்க்கலாம்!
No comments:
Post a Comment