Monday, 5 August 2019

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள்: செபியின் புதிய விதிமுறைகள் (SEBI Regulations on debt fund Management)


முதலீட்டாளர்களின் சுமார் 26 லட்சம் கோடி ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகம் நிர்வகித்து வருகின்றது. இந்த நிர்வாகம் சரிவர நடந்து வருகின்றதா? அதிலும் குறிப்பாக கடன் பத்திர நிர்வாகம் நடத்துவதில் மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங்களுக்கு கடந்த ஒரு வருடமாக சில சங்கடங்கள், சில சிக்கல்கள், அதன் அணுகுமுறை பற்றி விவாதங்கள், என்று கடன் பத்திர முதலீடுகள் சந்தித்துவரும் பிரச்சனைகள் ஏராளம். கடந்த செப்டம்பர் இல் ஐ.எல் & எஃப்.எஸ் ( IL&FS) பிரச்சனையில் ஆரம்பித்து இன்று  டி.ஹெச்.எஃப்.எல் ( DHFL) பிரச்சனை வரை கடன் பண்டுகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் இந்த ஒரு வருட நிகழ்வின் அடிப்படையில் செபி,(SEBI) தனது பங்காக கடன் பண்டுகள் நிர்வாகம்  சிறந்த முறையில் நடத்தி வர பல புதிய விதிமுறைகளை ஜூன் 27 அன்று வெளியிட்டுள்ளது. என்னென்ன மாற்றங்கள், அதன் தாக்கங்கள்  எவ்வாறு இருக்கும் என்பதை இங்கு சற்று விரிவாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.


மாற்றம் 1 : லிக்விட் ஃபண்டுகளில் கையிருப்பு பணம் ( Cash and cash equivalent)  சுமார் 20% இருக்க வேண்டும் (Mandatory liquid assets)

லிக்விட் ஃபண்டுகளில் (Liquid) கையிருப்பு பணம்  20% இருக்கவேண்டும். பணமாவகவோ அல்லது  எளிதில் பணமாக மாற்றக்கூடிய அரசாங்க பத்திரங்களில் (government securities) 20% முதலீடு இருக்க வேண்டும். தற்சமயம் பல லிக்விட் திட்டத்தில்  இந்த கையிருப்பு தொகை 20% குறைவாகவே உள்ளது.

தாக்கம்: லிக்விட் திட்டத்தில்  இருந்து முதலீட்டாளர்கள் வெளியேற நினைக்கும் போது, எளிதில் வெளியேறுவதற்கு இந்த மாற்றம் உதவி செய்கின்றது. கடன் பண்டுகளின் முதலீடு வராக்கடன்களில் (Non-performing loans)  இருக்கும்போது , அந்த முதலீட்டை திரும்பப் பெறுவதில் சிக்கல்  ஏற்படும்போது  கடன் பண்டுகளின் முதலீட்டாளர்களுக்கு உடனே பணம் பெற முடியாத சூழ்நிலை உருவாவதை இது ஓரளவு தடுக்கின்றது.  கையிருப்பு தொகை அதிகமாவதால், வரும் வருமானம் சற்று குறையும்.

மாற்றம் 2 : துறை சார்ந்த கடன் பத்திர முதலீடுகள்  20 சதவீதமே (Sector exposure cap reduced)

துறை சார்ந்த கடன் பத்திர முதலீடுகள் 25 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கப்படுகிறது.  உதாரணமாக முன்னர் ஒரே துறையில் கடன் பத்திர முதலீடுகள்  25% இருக்கலாம்.  கடந்த ஒரு வருடமாக,  மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங்கள், வீட்டு கடன் வசதி நிறுவனங்களிடம் (Housing finance companies) இருந்தும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் (Non-banking finance companies) இருந்து கொடுத்த கடனை திருப்பி பெறுவதில்  சிக்கலை சந்தித்து வருகின்றது. ஆகவே ஒரே துறையில் அதிக கடன் பத்திர  முதலீட்டை தடுப்பதற்கு,  ஒரே துறை கடன் பத்திர  முதலீடு   20 சதவீதமாக குறைக்கப்படுகின்றது 

தாக்கம் : கடன் சார்ந்த முதலீடுகள்  பரவலாக்கபடுகின்றது. ஒரே துறையில் முதலீடுகள் குறைக்கப்படுகின்றது. ஒரு துறையில் வரும் சிக்கல்களால் வரும் பாதிப்புகள  குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாற்றம் 3 : கடன் பத்திரங்களின் சந்தை விலையை கொண்டு மட்டுமே எண்.ஏ.வி கணக்கிடப்பட வேண்டும் (Mark-to-market:)

முன்காலங்களில் லிக்விட் திட்டங்களில் எவ்வாறு எண்.ஏ.வி (NAV)  கணக்கிடப்படும் என்பது மாறி மாறி வந்திருக்கின்றது. அட்டவணையில்  பார்த்து  கொள்ளலாம். தற்போது எல்லா கடன்பத்திர  முதலீடுகளும் சந்தை விலையில் மட்டுமே எண்.ஏ.வி   கணக்கிடப்பட வேண்டும் எனறு மாற்றப்பட்டுள்ளது. இனி (amortisation) 
அமாரிடைஸேன் மூலம் எண்.ஏ.வி கணக்கிடபடமாட்டாது

காலம்
கடன்பத்திர முதலீடுகளுக்கு வரும் வட்டியை  வைத்துக் கொண்டு எண் ஏ வி    கணக்கிடப்படும் (based on amortisation)
பிப்ரவரி 2010
90 நாட்களுக்குள் இருக்கும் கடன்பத்திர முதலீடுகள்
பிப்ரவரி 2012
60 நாட்களுக்குள் இருக்கும் கடன்பத்திர முதலீடுகள்
இந்த வருட ஆரம்பம்
30 நாட்களுக்குள் இருக்கும் கடன்பத்திர முதலீடுகள்
தற்போது
எந்த முதலீடும் இந்த வகையில் கணக்கிடப்பட மாட்டாது

தாக்கம் : இதனால் லிக்விட்   திட்டங்களின் எண்.ஏ.வி   நேர்கோட்டில் செல்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் கானபடும். முன்னர் லிக்விட் திட்டத்தில் உள்ள கடன் பத்திர முதலீடு வாராக் கடனாக மாறிவிட்டால் அல்லது அதன் சந்தை விலை பாதிக்கப்பட்டால் அதன் எண்.ஏ.வி சில சமயம் பாதிக்கப்படுவதில்லை. இந்த  நிலை மாறி எப்பொழுது கடன் பத்திரங்களின் சந்தைவிலை மாறினாலும் லிக்விட்   திட்டங்களின் எண்.ஏ.வி பாதிப்புக்கு உள்ளாகும். இதுவே சரியான முறை என்று கருதப்படுகின்றது. 

மாற்றம் 4: லிக்விட் ஃபண்ட், மற்றும் ஓவர்நைட் பண்டுகள் கட்டமைக்கப்பட்ட கடன்  பத்திர முதலீடுகள் செய்யக்கூடாது (No structured obligations)

கட்டமைக்கப்பட்ட கடன் பத்திரங்கள் முதலீடு என்றால என்ன என்று தெரிந்து கொள்வோம். அதாவது நிறுவனங்கள் கடன் கொடுக்கும் பொழுது , கடன் பெறுபவரகளிடம் இருந்து, அதற்கு ஈடாக (collateral)  நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடு பெற்று கொள்கிறார்கள். (ஆங்கிலத்தில் SPV – Special purpose vehicle என்று சொல்வார்கள்). இந்த வகையான ஈடுகளின் மதிப்பும் பெறபட்ட முறையும் அவ்வப்போது விவாதத்திற்கு உள்ளாகின்றது. தற்சமயம் இதுபோன்று மியூச்சுவல் ஃபண்ட்  கொடுத்த  கடன்கள் சில வராக்கடனாக (Non-performing assets – NPA) மாறும் சுழல் உருவாகிவருகின்றது.  லிக்விட் ஃபண்ட், மற்றும் ஓவர்நைட்  திட்டங்கள் (overnight), பண்ட் திட்டங்களிலேயே மிக ரிஸ்க் குறைந்த திட்டமாகும்  எனவே லிக்விட் ஃபண்ட், மற்றும் ஓவர்நைட் பண்டுகள் கட்டமைக்கப்பட்ட கடன்  பத்திர முதலீடுகள் செய்யக்கூடாது என்பதே இந்த மாற்றம் ஆகும்.  

தாக்கம்:  லிக்விட் ஃபண்ட், மற்றும் ஓவர்நைட் பண்டுகள்  ரிஸ்க் குறைகின்றது இது லிக்விட் ஃபண்ட், மற்றும் ஓவர்நைட் பண்டு முதலீட்டாளரகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும் 

மாற்றம் 5 : லிக்விட் ஃபண்டுகளில் எக்ஸிட் லோடு அமல்படுத்த படுகின்றது (Exit load on liquid fund)

இதுநாள் வரை லிக்விட் ஃபண்டுகளில் வெளியே வருவதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இனி வரும் காலகங்களில் நாம் ஏழு நாட்களுக்குள் லிக்விட் பண்டை விட்டு வெளியேறினால்  எக்ஸிட் லோடாக சிறு கட்டணத்தை கட்ட வேண்டும்

தாக்கம்:  இப்பொழுதும் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் லிக்விட் ஃபண்டில் இருந்து வெளியை வரலாம் ஆனால் ஏழு நாட்களுக்குள் வரும்போது நாம் லோடு செலுத்த வேண்டும். ஏழு நாட்களுக்குள் முதலீடு செய்து பின் லோடு செலுதி பணம் திரும்பப் பெறும்போது லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் குறைவு.  எனவே ஏழு நாட்களுக்குள் குறைந்து முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஓவர்நைட் பண்டுகளில் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

மாற்றம் 6 : முதலீட்டு பத்திரங்கள் சந்தையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் (Invest only in listed NCDs)

கடன் ஃபண்டுகள், நிறுவன பத்திரங்களில் முதலீடு செய்யும் பொழுது சந்தையில் பதியபட்ட, சந்தையில் விற்க /வாங்க முடிந்த  கடன் பத்திர முதலீடுகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். பண்ட்  நிறுவனங்கள் முதலீட்டை விட்டு வெளியேற நினைக்கும்போது சந்தையில் விற்றுவிட்டு எளிதாக வெளியேற முடியும். தனிப்பட்ட, பட்டியலிடபடாத ( unlisted bonds) பத்திர முதலீடுகளில் முதலீடு செய்யும் பொழுது, முதலீட்டு பணத்தை பெற்று, எளிதாக வெளியேற முடிவதில்லை. ஆனால் பதியப்பட்ட பத்திரங்களை விற்பதும் வாங்குவதும் எளிது, எனவே  பண்டு நிறுவனங்கள்  கடன் பத்திர முதலீட்டில்  இருந்து வெளியேற  ஏதுவாக அமைந்துள்ளது
தாக்கம்:  சந்தையில் முதலீடு பத்திரங்களை பதிவு செய்ய நிபந்தனைகள் உள்ளன( listing agreements). இது தனிப்பட்ட முறையில் முதலீடு செய்வதைவிட சந்தையில் பதியப்பட்ட பத்திரங்களில் முதலீடு செய்யும் பௌது, கூடுதல் வெளிப்படைத் தன்மையும் நம்பகத்தன்மையும் வாய்ந்ததாக இருக்கின்றது

மாற்றம் 7 : கடன் பத்திரங்களில் ஈடு நான்கு மடங்காக இருக்க வேண்டும் (Security cover of four times)

பண்ட் நிறுவனங்கள் கடன் கொடுத்து அதற்கு ஈடாக பெறும்போது தற்போது இரண்டு மடங்கு ஈடுகளை பெற்றுக் கொள்கின்றது. வரும் காலங்களில் இந்த தொகை, நான்கு மடங்காக இருக்க வேண்டும். இங்கே ஒரு உதாரணத்தைப் பார்ப்போம் பண்டு நிறுவனங்கள் சுமார் 100 கோடி ஒரு நிறுவனத்திடம் கடன் கொடுக்கும் போது அதற்கு ஈடாக சுமார் 200 கோடி  மதிப்புள்ள பங்குகளை பெற்று கொள்கின்றது.  இனிவரும் காலங்களில் 100 கோடி கடன் கொடுக்கும்போது 400 கோடிக்கு மதிப்பு வாய்ந்த பங்குகளை ஈடாக ஏற்றுக்கொள்ள வேண்டும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது தற்போது சீ டிவி  குழும்ம் (ZEE TV group) வாங்கிய  கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத போது,  சீ டிவி  பங்கின் விலை குறைந்து வந்த்தால், பண்டு நிறுவனங்களால் சீ டிவி   பங்குகளை எதிர் பாரத்து முறையில் விற்க முடியவில்லை.  விற்கும் பங்குகளின் மதிப்பிற்கும் , கொடுத்த கடனுக்கும் மிகுந்த வித்தியாசம் என்பதே இதன் காரணம். நான்கு மடங்கு ஈடு பெற்றால் கொடுத்த கடனை மதிப்பை திரும்பப் பெற்று விட வாய்ப்புகள் அதிகமாகின்றது . இதனால்  கொடுத்த கடன் திரும்ப கிடைக்காதபோது நமது பணத்தை இந்த வகையான ஈடுகள் மூலம் திரும்ப பெற முடியம்

தாக்கம்:  பண்டுகளில் ரிஸ்க் குறைகின்றது அதே சமயம் நிறுவனங்களிடம் பண்டுகள் கடன் கொடுக்கும் வாய்ப்புகள் குறைகிறது ஏனெனில் நிறுவனம் நான்கு மடங்கு ஈடுகொடுக்க சிரமப்படும் என்ற எண்ணமும் நிலவுகின்றது

முடிவாக

இந்த மாற்றங்களால் கடன் பத்திர முதலீடுகளில் ரிஸ்க் ஓரளவு குறைகின்றது. ரிஸ்க் குறையும்போது வரும் வருமானமும் குறையும். அதுபோல் கடன் பண்டுகளில் வரும் லாப விகிதம் சற்று குறையலாம்.  இங்கு நாம் கவனத்தில் அதிகமாக கொள்ளவேண்டியது கடன் பண்டுகளில் முதலீடு செய்யும்போது அந்த பண்டுகள் எந்த நிறுவனத்திற்கு கடன் கொடுத்துள்ளன  என்ற விவரத்தை நன்கு பரீசிலித்து அதன்பின் முதலீடு செய்வது உத்தமமாகும்.

No comments:

Post a Comment