Monday, 13 July 2020

மியூச்சுவல் ஃபண்டுக்கு முத்திரைக் கட்டணம்! முதலீட்டாளர்களுக்கு பாதிப்பா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குப் புதிதாக முத்திரைக் கட்டணம் (Stamp Duty) விதிக்கப்பட்டிருக்கிறது. இது ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்தப் புதிய வரி விதிப்பு, நாம் வாங்கும் எல்லா வகையான ஃபண்ட் திட்டங்களுக்கும் பொருந்தும்.

எவ்வளவு செலுத்த வேண்டும்?

புதிதாக ஃபண்ட் வாங்கும்போது 0.005%, ஒரு டீமேட்டிலிருந்து இன்னொரு டீமேட்டுக்கு ஃபண்டை மாற்றும்போது 0.015% முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

எப்போதெல்லாம் செலுத்த வேண்டும் ?

மியூச்சுவல் ஃபண்டை வாங்கும்போது இந்த ஸ்டாம்ப் டியூட்டியை செலுத்த வேண்டும். இது அனைத்து வகையான ஃபண்டுகளுக்கும் பொருந்தும். மொத்த முதலீடு, எஸ்.ஐ.பி முதலீடு, ஒரு ஃபண்டிலிருந்து மற்றொரு ஃபண்டுக்கு எஸ்.டி.பி மூலமாக மாற்றும்போது ஸ்டாம்ப் டியூட்டி செலுத்த வேண்டும்.

எப்படிச் செலுத்த வேண்டும் ?

ஸ்டாம்ப் டியூட்டியை நாம் தனியாகச் செலுத்தத் தேவையில்லை. முதலீடு செய்யும்போது அந்தத் தொகைக்கேற்ப ஸ்டாம்ப் டியூட்டி கணக்கிடப்பட்டு, அது கழிக்கப்பட்டு, மீதி முதலீடு செய்யப்படும்

ஒரு கணக்கீட்டு உதாரணம்...

உதாரணமாக, ஒருவர் மாதந்தோறும் 10,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால், அவருக்கு 50 பைசா முத்திரைக் கட்டணமாகப் பிடிக்கப்படும். இதுபோக உள்ள ரூ.9,999.50 முதலீட்டுக்குச் செல்லும். இதுவே, அவர் ஒரு ஃபண்டில் மொத்தமாக ஒரு முறை ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ரூ.5 முத்திரைக் கட்டணமாகப் பிடிக்கப்பட்டு ரூ.99,995 முதலீட்டுக்குச் செல்லும்.

சிறு முதலீட்டாளர்களுக்கு பாதிப்பா?

அரசின் இந்த நடவடிக்கையால் சிறு முதலீட்டாளர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை. மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்பவர் ஸ்டாம்ப் டியூட்டியாக வருடத்துக்கு 6 ரூபாய் கட்டினால் போதும். இது பெரிய தொகை இல்லை.

அதேசமயம், பெரு முதலீட்டாளர்களுக்கு (HNI), நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Corporates) இந்த வரி சிறு பாதிப்பை ஏற்படுத்தலாம். உதாரணமாக, இவர்கள் லிக்விட் ஃபண்டுகளில் (Liquid) ரூ.1 கோடி முதலீடு செய்தால், ரூ.500 ஸ்டாம்ப் டியூட்டி செலுத்த வேண்டும்.

இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சம், நாம் ஒவ்வொரு முறை முதலீடு செய்யும்போதும் ஸ்டாம்ப் டியூட்டி விதிக்கப்படுகிறது.



நாம் முதலீடு செய்த தொகையை நமது ஃபண்ட் மேலாளர் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது, அங்கும் இதே அளவு முத்திரைக் கட்டணம் பெறப்படுகிறது. எனவே, இது இரட்டை வரி விதிப்பாக (Double Taxation) இருக்கிறது.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete