Tuesday, 15 September 2026

நேற்று நான் கண்ட குற்றம் இன்று என்னிடமா?

 

📘 எனது எஸ்.ஐ.பி புத்தகம்

“நேற்று நீ, இன்று நான்” — நம் மனித சுபாவங்கள் இப்படித்தான் சுற்றி வரும். ஆனால் பணத்தின் விஷயத்தில் இந்த பண சுழற்சியை நமக்குச் சாதகமாக மாற முடியும். நேர்மையான, வழிகளில் நான் சொல்வேன். நம்பிக்கையுடன் அணுகுங்கள். எனது எஸ்.ஐ.பி புத்தகத்தை அமேசானில் படியுங்கள். அச்சுப் பிரதி வேண்டுமா? நேரடியாக என்னிடம் வாங்கலாம்.

📖 அமேசான்: https://amzn.to/3Tqmvj4

📩 தொடர்பு: https://radhaconsultancy.blogspot.com/2016/10/email-me.html

 

✨ இந்தக் கட்டுரையை PDF ஆக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் — ஆஃப்லைனில் படிக்கவும், பகிரவும் ஏற்றது!


மனித யதார்த்தங்கள்

எனது பார்வையில் மனிதர்களும், மனித மனமும்

பகுதி 2 — “வெற்றி எனது, தோல்வி உனது”


கண்ணன் மீ

செயற்கை நுண்ணறிவு ஆலோசகர் | நிதி ஆய்வாளர் | சிந்தனையாளர்

radhaconsultancy.blogspot.com 



ஏன் இப்படி?

இன்று நாம் படிக்கப் போவது — உலகம் தழுவியது. உங்களுக்கும், எனக்கும், நம் எல்லோருக்குமானது. முதலில் நான் அப்படி இல்லை என்று நீங்கள் மறுக்கலாம். ஆனால் இதை வாசித்த பிறகு என்ன சொல்வீர்கள்? திரும்பவும் மறுப்பீர்களா? இல்லை, நான் சொல்வதை ஆதரிப்பீர்களா?

அது என்ன என்று சில நிகழ்வுகளை வைத்து பார்ப்போம். உங்கள் யூகத்திற்கு இது அலுவலகத்தில் அன்றாட நிகழ்வு. அரசியலில் கேட்கவே வேண்டாம் — அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த செயல். பல நட்புகள் இதனால் முறிந்தது உண்டு. சிலர் அலுவலகத்தை விட்டு வெளியேறுவதற்கே இதுவே காரணம்.

கை கொடுத்தவர், கை கழுவிப் போனாரே!

பெண்ணிற்கு வரன் தேடுவது அந்தக் காலம். இப்போது வரனுக்கு பெண் தேடுவது இந்தக் காலம். அருண் என்ற வரனுக்கு, அருணின் உறவினர் முருகன் தனது நண்பர் சுந்தரத்தின் மகளைப் பேசி, எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்தார். இரு வீட்டாரும் “இத்யாதி இத்யாதி” பேசிக் கொண்டு, வெற்றிலைப் பாக்கு மாற்றி, கல்யாண வேலைகளை ஆரம்பித்தார்கள்.

முருகன் பெருமையாகச் சொன்னார்: “நான் உதவி செய்தேன், இப்படிப் பட்ட பெண் பூலோகத்தில் இல்லவே இல்லை. நான் இதெற்கென்று எவ்வளவு மெனக்கெட்டேன். நான் இல்லாமல் இந்த கலியாணம் கைகூடியிருக்குமா?”

அந்தக் காலத்தில் இயலாதது, இந்தக் காலத்தில் இயல்பாய்போன ஒன்று. பெண்ணும் மாப்பிளையும் அவ்வப்போது வாட்ஸ்அப்பில் அளவளாவது, சேர்ந்து ஜனநாயகன் சினிமா பார்ப்பது என்று நாட்கள் கழிந்தன கல்யாண ஜோடிக்கு. எவர் கண் பட்டதோ, எங்கே பட்டதோ, எப்போது பட்டதோ — தெரியவில்லை. எத்தனை பிரச்சினைகள் வந்ததோ, என்னென்ன பிரச்சினைகளோ — அதுவும் தெரியவில்லை. இருவருக்கோ இல்லை ஒருவருக்கோ மனம் கசந்து விட்டது.

சில நாட்களில் திருமணம் நின்று போய்விட்டது.

கலியாணம் பேசிய நமது முருகன், திருமணம் நின்ற பிறகு இந்த நின்ற விஷயத்தை அதாவது கல்யாணம் நிகழாது என்று பெண் வீட்டாரிடம் சொல்லக்கூட மறுத்து விட்டார்.

கையை கழுவிக் கொண்ட முருகனின் வாதம்: “இப்பொழுது பெண்கள் சொன்ன பேச்சை கேட்பதில்லை. மாப்பிளை வீட்டுக்காரர்கள் அதிகம் கேட்கிறார்கள். செலவு ஒத்து வரவில்லை. இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இதில் நான் எங்கு வந்தேன். இதில் எனக்கு கடுகளவும் சம்பந்தமில்லை. பெண்வீட்டாரும் மாப்பிளை வீட்டாரும் அவரவர்கள் சௌரியத்திற்கு செய்து கொள்ள வேண்டியதுதான், நல்லத்துக்கு காலமில்லை” என்று உடனே அதில் எந்த சம்பந்தமும் இல்லாமல் பேசுகின்றார்.

இதை தரகர் சொன்னால் நான் இங்கு எழுத மாட்டேன். முருகனானவர் இரு வீட்டாருக்கும் தெரிந்த மற்றும் உறவினர். உறவினர் நல்லது செய்வார் என்று மாப்பிளை வீட்டாரும் பெண் வீட்டாரும் நம்பினார்கள். கல்யாணம் நின்ற காரணத்தை ஆராயாமல் அந்த இடத்தை விட்டு ஓட காரணங்களை தேடுபவர்களை என்னவென்று சொல்ல.

காலச்சக்கரம் யாரைத்தான் விட்டது? அருணின் கதை தொடருகின்றது.

மடிகணனி இல்லாததால் தோல்வி!

சென்னை பழைய மஹாபலிபுரம் சாலையில் ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனம். ஐந்து பேர் கொண்ட குழு. டீம் லீடர் நமது கல்யாண மாப்பிள்ளை அருண் தான், நான்கு மெம்பர்கள்.

பலருக்கும் தெரியும். இதில் பொதுவாக டீம் லீடர் எவ்வளவு பங்காற்றுவார் என்று அதை நான் விரிவாக விளக்கத் தேவையில்லை. அந்த ப்ராஜெக்ட் நன்றாக வந்துவிட்டால், அவர்களது உயரதிகாரிகள் அதை ஒத்துக்கொண்டு மேலே தொடரும்போது, உடனே டீம் லீடர், டீம் மேனேஜர் ஆகிவிடுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நமது மாப்பிள்ளை அருண் டீம் லீடர், அவரது உறவினர் முருகனுக்கு சற்றும் இளைத்தவர் இல்லை.

அருண் சொல்வார்: “எனது நிர்வாகத் திறனே மேலானது. நான் ராப்பகல் தூங்காமல் வேலை செய்து இந்த வெற்றியை பெற்றேன்.”

உண்மையில் அவர் சொன்ன ஐடியா குப்பையாக இருந்தது. டீம் மெம்பர் ஆஷா அதை நன்றாக மாற்றியிருப்பார். அதுவெல்லாம் வேற விஷயம். ஆஷாவிற்கு அடுத்த ப்ரோமோஷன் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.

எல்லாமே நாம் நினைத்தபடி நடப்பதில்லையே. மாற்றாக ப்ராஜெக்ட் தள்ளி போடப்பட்டால், அருணின் வசனங்கள் உறவினர் முருகனின் வசனங்களுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை.

“நான் சொன்னபடி யாரும் சரியாக code எழுதவில்லை. கிஷன் வேலை செய்யவில்லை. ஆஷா கல்லூரியில் என்ன படித்தாரோ தெரியவில்லை.” இத்தோடு புராணத்தை நிறுத்தினாரா என்றால் அதுவும் இல்லை — இன்னொரு படி மேலே: “எனக்கு புதிய மடிகணனி தரவில்லை. வீட்டில் இணைய வசதி இல்லை.”

ஒரு நிமிடம் நிறுத்திப் பாருங்கள். சில மாதங்களுக்கு முன், தன் சொந்தத் திருமணம் நின்றுபோனதற்கு முருகனின் தற்பெருமையைக் குறை சொல்லிக் கொண்டிருந்த அதே அருண்தான் இது. இதையெல்லாம் பார்க்காதவர்கள் அலுவலகத்தில் பணிபுரிந்திருக்கவே முடியாது.

முற்பகல் செயின் பிற்பகல் தாமே வரும் என்று வள்ளுவன் அன்றே சொல்லி வைத்திருக்கிறானே.

இதுதான் நம் மனித சுபாவம்

ஏன் இப்படி நடக்கிறது? யோசித்துப் பார்த்தால் ஒரு எளிய காரணம் தெரிகிறது. வெற்றி வரும்போது, அது நம் திறமை என்று சொல்வது நம் மனதுக்கு நிம்மதி தருகிறது. தோல்வி வரும்போதும் அதே மனம் அதே நிம்மதியைத் தேடுகிறது — அதனால் காரணத்தை வெளியே தேடுகிறது. உளவியலில் இதை Self-Serving Bias என்று அழைக்கிறார்கள்.

திருமணம் ஏன் தேவை தெரியுமா?

ஒரு பெண்மணி: “எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.” மற்றவர்: “நீங்கள் வெற்றிகரமான பெண்மணி. வெற்றி வந்தால் சந்தோஷம். தோல்வி வந்தால் என்ன செய்வீர்கள்?” அவர்: “தோல்வி எல்லாம் நான் தாங்க முடியாது.” அவர் தோழி: “அதற்காகத்தான் திருமணம் செய்யுங்கள். எல்லா தோல்விக்கும் உங்கள் கணவரையே காரணமாகக் காட்டலாம்!”

இது சிரிக்க மட்டும் அல்ல, சிந்திக்கவும்.

இதுதான் நம் மனித உண்மை. வெற்றி வந்தால் நாமே உரிமை எடுப்போம். தோல்வி வந்தால் blame உலகத்துக்கு. அலுவலகம், உறவுகள், நட்பு, குடும்பம் — எங்கும் ஒரே நியதி.

நம்மை பற்றி நாமே அறிந்து கொள்வது மன அமைதி தருமா? முயற்சித்து தான் பாருங்களேன். கோபம் கொஞ்சம் குறையலாம். மன அமைதி திரும்பலாம்.

சிந்திப்பதே மனிதத்தன்மை. அதைப் பாதுகாப்போம்.


நான் நடந்து வந்த பாதையில் சந்தித்த சில மனிதர்கள் — அவர்கள் நமது எண்ணங்களை, நம் மனதை ஏதேனும் ஒரு வகையில் பிரதிபலிக்கிறார்களா? நம்மை நாமே ஒரு சுய பரிசோதனை செய்துகொண்டால் என்ன? சுமார் 15 தலைப்புகளில் கட்டுரை எழுதும் இந்த முயற்சியில்.

முதல் கட்டுரை இது: பகுதி 1 — நமக்கு வந்தால் வழக்கறிஞர், அடுத்தவருக்கு நீதிபதி

இரண்டாவது கட்டுரை நீங்கள் படித்தது: பகுதி 2 — “வெற்றி எனது, தோல்வி உனது”

இந்தக் கட்டுரைத் தொகுப்பில் உங்களது எண்ணங்கள் ஏதும் பிரதிபலிக்கவேண்டுமா? என்னுடன் பகிரலாமே.


குறிப்பு

இக்கட்டுரையில் இடம்பெறும் நிகழ்வுகள் அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் அவதானிக்கக்கூடிய பொதுவான மனித சூழல்களை அடிப்படையாகக் கொண்டவை. தனிநபர் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில், பெயர்கள் மற்றும் விவரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது எவரையும் நேரடியாகக் குறிப்பிடும் நோக்கம் கொண்டதல்ல.

 

கண்ணன் மீ அவர்களுடன் இணைந்திருங்கள்

LinkedIn  |  Twitter  |  Instagram  |  Facebook

AI, வணிகம், மற்றும் தொழில்நுட்பமும் மனித ஞானமும் சந்திக்கும் சுவாரஸ்யமான புள்ளிகள் குறித்த மேலும் பல கருத்துகளுக்கு எங்கள் வலைப்பதிவைப் பின்தொடருங்கள்.

“பாரபட்சமற்ற தரமான ஆலோசனைக்கு”

தொடர்பு: https://radhaconsultancy.blogspot.com/2016/10/email-me.html

▶️ YouTube: எங்கள் சேனலை Subscribe செய்யவும்

💬 வலைப்பதிவு வழியாக செய்தி அனுப்ப

🌐 radhaconsultancy.blogspot.com


✨ இந்தக் கட்டுரையை PDF ஆக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் — ஆஃப்லைனில் படிக்கவும், பகிரவும் ஏற்றது!


#மனிதயதார்த்தங்கள் #தமிழ்உளவியல் #HumanRealities #SelfServingBias



No comments:

Post a Comment