மனித யதார்த்தங்கள்
எனது பார்வையில் மனிதர்களும், மனித மனமும்
பகுதி 1 — நமக்கு வந்தால் வழக்கறிஞர், அடுத்தவருக்கு நீதிபதி
கண்ணன் மீ
செயற்கை நுண்ணறிவு ஆலோசகர் | நிதி ஆய்வாளர் | சிந்தனையாளர்
radhaconsultancy.blogspot.com
நமக்கு ஒரு நியாயம். அடுத்தவருக்கு இன்னொரு நியாயம்.
நமது வாட்ஸ்அப் குழுக்களில் முதல் கட்டளையே — அரசியல் பேசக்கூடாது என்பதுதான். இருப்பினும், எந்தக் குழுவும் அரசியல் பேசாமல் இருப்பதில்லை.
உணவகங்களில் கூட பெரிய எழுத்துகளில் போட்டிருப்பார்கள் — “இங்கு அரசியல் மற்றும் ரியல் எஸ்டேட் பேசக்கூடாது” என்று.
அரசியலும் ரியல் எஸ்டேட்டும் ஏன் ஒரே அறிவிப்புப் பலகையில் இடம் பிடித்திருக்கிறது என்று தனியாக யோசிக்க வேண்டாம். இரண்டும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடொன்று சேர்ந்துவிட்டதே என்பது பலகாலமாக நமக்குத் தெரிந்த விஷயம்தானே!
அதுவல்ல நமது இன்றைய கதை.
நாம் எப்போதும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம்.
என்ன பேசுகிறோம்?
பெரும்பாலும் அடுத்தவரைப் பற்றித்தான்.
நமது உறவுகள், நமது நண்பர்கள், அலுவலக மேலாளர்கள், நண்பா... நண்பிகள் என்று பேசிக்கொண்டே இருக்கிறோம்.
சிலருக்கு சந்தேகம் வரலாம் — “ஏன் இங்கு நண்பிகள் வந்துவிட்டார்கள்?”
அதற்கும் காரணம் இருக்கிறது. இதுவும் இந்தக் குழுவில் சேர்ந்தே பலகாலம் ஆகிவிட்டது!
வாட்ஸ்அப்பில் வரும் பெரும்பாலான ஃபார்வேர்டுகளை நாம் படிப்பதே இல்லை. படித்தாலும் ஒரு நகைச்சுவைக்கும் மேல் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆனால், இந்தக் கட்டுரையின் கருவே ஒரு வாட்ஸ்அப் ஃபார்வேர்டில் இருந்துதான் வந்தது — நமக்கு வந்தால் வழக்கறிஞர், அடுத்தவருக்கு வந்தால் நீதிபதி என்ற அந்த ஒற்றை வரி, யோசிக்க வைத்தது.
அடுத்தவரைப் பற்றி என்ன பேசுகிறோம்?
கிசுகிசு பெரும்பாலும். திட்டுவது பெரும்பாலும். புறம்பேசுவது பெரும்பாலும்.
இதுதான் நமது சராசரி பேச்சாகிவிட்டது.
ஆனால், நமது கதை அதுவல்ல.
சில அனுபவங்களைப் பார்ப்போம்.
பதவி உயர்வு வராதது பெரிய பிரச்சனை... ஆனால் யாருக்கு?
அலுவலகத்தில் வேலை செய்யும்போது, பணிச்சுமையைவிட நமக்கு எப்போதும் முக்கியமான இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.
அடுத்த பதவி உயர்வு எப்போது வரும்?
நமது சம்பள உயர்வு எவ்வளவு சதவீதமாக இருக்கும்?
நிறுவன உணவகங்களில் மதிய இடைவேளையின்போது நடக்கும் சுவாரஸ்யமான உரையாடல்களை கவனித்துப் பாருங்கள். பெரும்பாலும் இதைப் பற்றியோ, இதைச் சார்ந்தோ தான் இருக்கும்.
நமக்கு பதவி உயர்வு வரவில்லை என்றால், நமது பகுதியில் வேலை செய்பவர்களுக்கும் பதவி உயர்வு வரவில்லை என்றால், நமக்கு அவ்வளவு பெரிய கவலை இல்லை.
“என்ன செய்வது? இந்த வருடம் கம்பெனியே கொடுக்கவில்லை போலிருக்கிறது” என்று சொல்லிவிட்டு போய்விடுகிறோம்.
ஆனால்...
நமக்கு பதவி உயர்வு வரவில்லை. நமது பக்கத்தில் வேலை செய்கிற ஒருவருக்கு மட்டும் பதவி உயர்வு வந்துவிட்டால்?
அவ்வளவுதான்.
மிகப்பெரிய பிரளயமே வந்துவிடுகிறது!
“நான் என்ன குறைவாக வேலை செய்தேன்?”
“நிறுவனத்திற்கு நான் எவ்வளவு லாபம் கொண்டு வந்திருக்கிறேன் தெரியுமா?”
“அவரைவிட நான் எவ்வளவு வருடம் அனுபவம் உள்ளவன்?”
“அவர் செய்த வேலை என்ன? நான் செய்த வேலை என்ன?”
என்று நமது வாதங்கள் ஆரம்பமாகிவிடுகின்றன.
மேலதிகாரிகளிடம் நமது தரப்பில் இருக்கும் எல்லா நியாயங்களையும் எடுத்துவைக்கிறோம். நாம் செய்த வேலை, எடுத்த பொறுப்பு, நிறுவனத்திற்கு கொண்டு வந்த பயன், கடந்த வருடங்களில் செய்த சாதனைகள் — எல்லாவற்றையும் பட்டியலிட்டு, “இந்த வருடம் எனக்கு பதவி உயர்வு வர வேண்டியதே நியாயம்” என்று வாதாடுகிறோம்.
அந்த வாதம் சில நேரங்களில் எங்கே போகிறது என்றால், நமது மேலதிகாரிகளுடனான உறவே கெட்டுப்போகும் அளவுக்குப் போய்விடுகிறது.
அதன் விளைவு?
இந்த வருடப் பதவி உயர்வு மட்டுமல்லாமல், அடுத்த லிஸ்ட்டில் வர வேண்டிய பதவி உயர்வையும் நாமே கெடுத்துக்கொள்கிறோம்.
இப்படி தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அடுத்த பதவி உயர்வையும் கெடுத்துக்கொள்பவர்கள் இங்கே ஏராளம்.
சரி.
இப்போது அதே அலுவலகத்தில் இன்னொரு நாள்.
நமது அடுத்த வீட்டுக்காரருக்கு பதவி உயர்வு வரவில்லை. அல்லது நமது மனைவியின் தம்பிக்கு பதவி உயர்வு வரவில்லை.
இப்போது நமது அணுகுமுறை எப்படி மாறுகிறது பாருங்கள்.
“அவருடைய வேலை சரியாக இருந்திருக்காது.”
“அவரால் நிறுவனத்திற்கு என்ன லாபம்?”
“அவர் செய்த திட்டத்திலேயே பிரச்சனை இருந்திருக்கும்.”
“மேலதிகாரிகளுக்கு அவரைப் பற்றி வேறு ஏதாவது தெரிந்திருக்கும்.”
“ஒரு நிறுவனத்தில் எல்லோருக்கும் பதவி உயர்வு கொடுக்க முடியுமா?”
“ஒரு கம்பெனியில் ஒரு சி.இ.ஓ.தானே இருப்பார்?”
“பதவி உயர்வு என்றாலே ஒரு பிரமிட் அமைப்புதானே!”
என்று மிக எளிதாகக் கடந்து போய்விடுகிறோம்.
சற்று முன்பு நமக்காக இருந்த அதே பதவி உயர்வு, இப்போது அடுத்தவருக்குச் சென்றுவிட்டதும், அதற்கான நியாயங்களும் மாறிவிட்டன.
அவருக்கு ஏன் வரவில்லை என்பதற்கான காரணங்களைத் தேடுவதில் நாம் காட்டும் திறமை, அவருடைய மேலதிகாரிக்கே இருந்திருக்குமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருக்கும்!
பல காரணங்களைப் பட்டியலிட்டு, வழக்கறிஞரைவிட மூத்த வழக்கறிஞராக மாறிவிடுகிறோம்.
“அது ஒரு குழந்தைதான்!”
இப்போது நமக்குத் தெரிந்த சுமதியைப் பற்றிய இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம்.
சுமதி தனது மகனை கல்லூரியில் படிக்க வைப்பதற்காக, திருச்சியில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்க வைத்து, அங்கிருந்து கல்லூரிக்குச் சென்று வர ஏற்பாடு செய்கிறாள். கல்லூரி முடித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகும், அந்த உறவினர் வீட்டில் தங்கி அலுவலகத்திற்குச் சென்று வருவதற்கான ஏற்பாடும் தொடர்கிறது.
ஏதோ சில காரணங்களுக்காக, ஒரு நாள் அந்த மகன் உறவினர்களிடம் சொல்லாமலேயே அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிடுகிறான்.
உறவினர்களுக்கு அது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
சுமதியிடம் சொல்கிறார்கள்.
சுமதி உடனே சொல்கிறாள்:
“அது ஒரு குழந்தை. அவனுக்கு அவ்வளவாகத் தெரியாது.”
கொஞ்சம் நிறுத்திப் பாருங்கள்.
அந்தப் பையனுக்கு அப்போது வயது இருபத்திரண்டு. கல்லூரி படித்து முடித்து, அலுவலகத்தில் வேலை செய்யும் வயது.
ஆனால், சுமதிக்கு அவன் இன்னும் “ஒரு குழந்தை.”
சரி.
அதே சுமதியிடம் இன்னொரு நாள், உறவினர் முருகனின் மகன் ஏதோ ஒரு விஷயத்தில் அவளுடன் பேசுகிறான். அவன் சொல்வது முற்றிலும் தவறான விஷயம்கூட இல்லை. ஒரு சில சரியான காரணங்களுக்காக, மிகச் சிறிய அளவில் மறுத்துப் பேசுகிறான்.
அவ்வளவுதான்.
சுமதி உடனே:
“இவன் மரியாதையே தெரியாதவன். பெரியவர்கள் சொல்வதைக் கேட்பதே கிடையாது. இவனுடைய பெற்றோர்கள் இப்படித்தான் வளர்த்திருக்கிறார்கள்!”
என்று ஏக வசனங்களில் பேச ஆரம்பித்துவிடுகிறாள்.
தனது மகன் உறவினர்களிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வந்துவிட்டால் — “அது ஒரு குழந்தை. அவனுக்கு என்ன தெரியும்?”
அதே வயதில் இருக்கும் உறவினரின் மகன் ஒரு விஷயத்தில் கொஞ்சம் மறுத்துப் பேசினால் — “மரியாதையே தெரியாதவன். பெற்றோர்கள் சரியாக வளர்க்கவில்லை.”
இங்கேதான் நமது கதையின் சுவாரஸ்யம் இருக்கிறது.
நமது மனம் இப்படித்தான் வேலை செய்கிறதா?
இப்போது ஒரு கேள்வி வரலாம்.
நாம் ஏன் இப்படிச் செய்கிறோம்?
இது வெறுமனே நம்முடைய குணக்குறை என்று சொல்லிவிட முடியுமா?
நம்முடைய பதவி உயர்வை நியாயப்படுத்தும்போது இதைத்தான் பார்க்கிறோம். நமது தரப்பில் உள்ள காரணங்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துச் சொல்லி நியாயத்தை நிரூபிக்கிறோம்.
இதனால் நமக்கு ஒரு நியாயம், அடுத்தவருக்கு இன்னொரு நியாயம் உருவாகிறது.
இது கற்றுக் கொடுக்கப்பட்டதா, மரபில் வந்ததா, அல்லது சூழல் தொடர்ந்து தூண்டியதா என்று எளிதாகச் சொல்ல முடியாது. ஆனால் வேலை இடத் தகராறு, குடும்ப வாதம், பணம் சம்பந்தமான காரணங்கள் — எல்லாவற்றிலும் இந்த மனப்பாங்கு வெளிப்படுகிறது.
அதனால் இதை ஒரு குறையாக மட்டும் பார்க்காமல், மனித இயல்பின் ஒரு முரண்பாடாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரே மனிதர்.
ஒரே சம்பவம்.
ஆனால், அது நமக்கு வந்தால் ஒரு நியாயம்; அடுத்தவருக்கு வந்தால் இன்னொரு நியாயம்.
நமக்கு வந்தால் வழக்கறிஞர்.
அடுத்தவருக்கு வந்தால் நீதிபதி.
சிந்திப்பதே மனிதத்தன்மை. அதைப் பாதுகாப்போம்.
கண்ணன் மீ அவர்களுடன் இணைந்திருங்கள்
LinkedIn | Twitter | Instagram | Facebook
AI, வணிகம், மற்றும் தொழில்நுட்பமும் மனித ஞானமும் சந்திக்கும் சுவாரஸ்யமான புள்ளிகள் குறித்த மேலும் பல கருத்துகளுக்கு எங்கள் வலைப்பதிவைப் பின்தொடருங்கள்.
“பாரபட்சமற்ற தரமான ஆலோசனைக்கு”
✉️ contact us
▶️ YouTube: எங்கள் சேனலை Subscribe செய்யவும்
💬 வலைப்பதிவு வழியாக செய்தி அனுப்ப
🌐 radhaconsultancy.blogspot.com
✨ இந்தக் கட்டுரையை PDF ஆக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
#மனிதயதார்த்தங்கள் #தமிழ்உளவியல் #HumanRealities #சுயவிமர்சனம் #ActorObserverBias
No comments:
Post a Comment