Monday 26 March 2018

மியூச்சுவல் ஃபண்ட் வருமான கணக்கீடு - செபியின் அடுத்த அதிரடி!

My recent article has been published in "Nanayam Vikatan". Click here to read the article directly from vikatan website. The same article is given below.


மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை இன்னும்  எளிமையாக்கவும், முதலீட்டாளர்களின் லாபத்தை அதிகரிக்கவும்  செபி பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. அண்மையில், ஒரே மாதிரியான முதலீட்டு போர்ட் ஃபோலியோவைக் கொண்டுள்ள திட்டங்களில் ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே ஒவ்வொரு நிறுவனமும் வைத்திருக்க வேண்டும் என செபி உத்தரவிட்டது. இந்த உத்தரவு இப்போதுதான்   நடைமுறைக்கு வரத் தொடங்கியிருக்கிறது. 

இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் வருமான ஒப்பிட்டு முறையில் மாற்றத்தைக் கொண்டுவருமாறு, மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங்களுக்கு செபி தற்போது உத்தரவிட்டுள்ளது. இது என்ன உத்தரவு?    


பொதுவாக, ஒரு மியூச்சுவல் ஃபண்ட், நல்ல திட்டமா என்று பார்ப்பதற்கு, அதன் லாப விகிதத்தை, அதன் பெஞ்ச் மார்க் குறியீட்டுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.  அதாவது, ஒரு ஃபண்டின் லாபத்தையும், பெஞ்ச்மார்க் குறியீட்டின் லாபத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

தற்போது பெஞ்ச்மார்க் குறியீட்டின் இரண்டு இடைப்பட்ட தேதிகளின் வித்தியாசத்தை மட்டுமே வருமானத்தைக் கணக்கிட எடுத்துக் கொள்கிறோம். இதை மட்டும்  பார்க்காமல், குறியீட்டின் வித்தியாசத்தையும் அந்தக் குறியீட்டில் இடம்பெற்றுள்ள பங்குகள் மூலம் கிடைத்த டிவிடெண்ட் வருமானத்தையும் சேர்த்து, மொத்த வருமானத்தைக் கணக்கிட வேண்டும் என்பது செபியின் லேட்டஸ்  உத்தரவு. 

பொதுவாக, பங்காக இருந்தாலும் சரி, அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாக இருந்தாலும் சரி, அதன் லாப விகிதத்தைக் கணக்கிட, அதாவது ஒரு குறிப்பிட்ட தேதியிலிருந்து இன்னொரு தேதி வரை கிடைத்த லாப விகிதத்தைப் பெற, அந்தந்தத் தேதிகளில் உள்ள விலை வித்தியாசத்தை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படும்.  இந்த நடைமுறைதான் பொதுவாக,  எல்லோராலும் எல்லா நிலைகளிலும் பயன்படுகிறது. பிறகு  ஏன்  செபி, புதிய உத்தரவை இப்போது கொண்டு வருகிறது? 

காரணம், சற்று நுட்பமானது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள் வோம். ஏப்ரல் முதல் தேதியிலிருந்து மார்ச் 31-ம் தேதி வரை நிஃப்டி 9% லாபம் தந்தது என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் அதே காலகட்டத்தில் 10% லாபம் தந்தது என வைத்துக் கொண்டால், அந்த மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர், பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட 1% அதிக லாபம் தந்துள்ளேன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வார். இதுதான் ஆல்ஃபா என்று அழைக்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டின் சிறப்பே, சந்தையைவிட எவ்வளவு அதிக லாபம், அதாவது ஆல்ஃபா தந்திருக்கிறார் என்பதே. ஆனால், இந்த லாபம் உள்ளபடியே, சந்தை தந்த லாபத்தைவிட அதிகமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், சந்தையின் லாபம், விலையை மட்டுமே வைத்து  பார்க்காமல், மொத்த வருமான விவரத்தின்படி அதே தேதி களில் விலை வித்தியாசம், டிவிடெண்ட் வருமானம், அந்தக் குறியீட்டில் உள்ள பங்குகளுக்கு வந்த வருமானம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதன்படி லாபத்தைக் கணக்கிட  வேண்டும்.

உதாரணமாக, இந்தக் குறிப்பிட்ட கால கட்டத்தில் டிவிடெண்ட் வருமானம் 1.5% என்றால், நிஃப்டி குறியீட்டின் மொத்த வருமான விகிதம் 10.5 சதவிகிதமாக மாறும். ஆனால், ஃபண்டின் வருமானம் 10 சதவிகிதம்தான். அப்போது அந்த ஃபண்ட், நிஃப்டி குறியீட்டைவிட குறைவான வருமானம் கொடுத்துள்ளதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.   


இனிமேல் செபியின் புது உத்தரவின்படி, நிஃப்டி, சென்செக்ஸ் போன்ற குறியீடுகளில் மொத்த வருமானம், பெஞ்ச்மார்க் வருமானமாக எடுத்துக்கொள்ளப்படும். இனி, ஃபண்ட் மேலாளர்கள் குறியீடுகளைவிட அதிக வருமானம் தர மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். அப்படி வருமானம் தரவில்லை எனில், குறியீடுகளைவிட குறைவான லாபம் தந்ததாக ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.  

செபியின் இந்தப் புதிய உத்தரவை நடைமுறைக்குக்கொண்டு வந்து, மியூச்சுவல் ஃபன்ட் நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. முதலீட்டாளர்களும், இனி தங்கள் பங்குக்கு இந்தப் புதிய உத்தரவைப் புரிந்துகொண்டு, பங்குகளை அலசி ஆராய்ந்து முதலீடு செய்வது நல்லது!

No comments:

Post a Comment