Sunday 5 March 2017

காலத்திற்கேற்ற முதலீடு - Dynamic Investing

கார்மேகம் சூழ்ந்த பருவம் இது. நான் கார்காலத்தை மட்டும் குறிப்பிடவில்லை. அமெரிக்கா அண்ணனின் அரசியல் மாற்றங்கள். எல்லையில் மாறும் மேக மூட்டங்கள். ஆகையால் சந்தையை மூடும் மேகங்கள் என்று சந்தையில் மாற்றங்கள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றது. சூரியனை மேகம் மூடுவதும் பின்னர் விலகுவதும் போல சந்தையை மேகம் மூடுவதும் விடுவதும் இயல்பு தான். நாம் இந்த மாதிரி சமயங்களில் மேகமூட்டத்திற்கு அதாவது காலத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு முதலீடு செய்யவேண்டும் என்பது பற்றி தற்போது பார்ப்போம்.


சமீபத்தில் நமது மத்திய வங்கியின் புதிய ஆளுநர் வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் அதாவது 0.25%, 4th அக்டோபர் அன்று குறைத்தார். அதே சமயம் நமது அண்ணன் அமெரிக்கா வட்டி விகிதத்தை கூட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றே தோன்றுகிறது. இந்த இரண்டுமே நமது கடன் பத்திரம் மற்றும் நமது பங்குகளில் வரும் லாபத்தை மாற்ற வல்லது. இது போன்று மேகங்கள் சந்தையை அவ்வப்போது ஆட்டிவைக்கும். இதை பார்த்து பார்த்து, யோசித்து யோசித்து நாம் பங்கிலிருந்து கடனுக்கும், கடனிலிருந்து பங்குக்கும் மாறுவது என்பது தேவை என்றாலும் அதை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. மழை வரும் என்று வானிலை அறிக்கை கூறினாலும், மழை வராத நாட்கள் எத்தனையோ! அதுபோலத்தான் வட்டி விகித ஏற்ற இறக்கங்களும் வரும் என்று நினைப்பில் வராது! இது மாதிரி தருணங்களில் இது மாதிரி சந்தையை தாக்கும் நிகழ்வுகளை சரியாக கவனித்து அதற்கேற்றவாறு நமது முதலீட்டை பங்கிலும் கடனிலும் கூட்டி குறைத்து அதிக லாபம் பெறுவது அவ்வளவு சுலபம் அல்ல. நமது ஆச்சிகள் காய் இல்லாதபோது சும்மா குழம்பு வைப்பது போல் இல்லாமல், இது போன்ற மாறும் மேகங்களை கணித்து முதலீட்டை மாற்றுவது எளிதல்ல! காய் இல்லை என்று ஆச்சிக்கு தெரியும், அதனால் சும்மா குழம்பு வைக்க முடிவெடுக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் சண்டை வருமா அமெரிக்கன் அண்ணன் அரசியல் எப்படி இருக்கும் என்பதெல்லாம் நமது சின்ன மூளைக்கு அப்பாற்பட்டது. இதெல்லாம் மேகம் வருமா வராதா என்று நமக்கு தெரியது போலத்தான்! அதனால் முதலீட்டு முடிவுகளை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றுவது மிகவும் கடினமாக உள்ளது.

இப்போது  என்னதான் செய்வது?? சர்வ ரோக நிவாரணி போல் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், இந்த டெக்னாலஜி யுகத்தில் எது தான் இல்லை!! இதற்கும் வழி உள்ளது. பங்கு மற்றும் முதலீட்டு அளவை கூட்டுவதும் குறைப்பதும் நமது செயல் பாடு இல்லாமல், நமது கடன் பங்கு முதலீட்டை, அதுவாகவே டெக்னாலஜி உபயோகத்தின் வழியாக, பங்கு மற்றும் கடன் திட்ட அளவுகளை மாற்றுவது.
Dynamic equity  திட்டங்கள் பரஸ்பர நிதிகளில் உள்ளது. இந்த வகை திட்டங்களில் சந்தையின் PE’கு ஏற்றவாறு பங்கின் அளவும், கடனின் அளவும் மாறும்.

PE பற்றி புரிய.. அறிய.. இதோ.. சந்தையின் விலை மதிப்பு எவ்வாறு உள்ளது என்று நமக்கு தெரிய வேண்டும். அதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் மிக முக்கியமான அளவுகோல் PE (Price Earnings Ratio ). மும்பை சந்தை குறியீட்டின் நெடு நாளைய சராசரி PE 18.6, தற்போதைய PE 20.78. மும்பை பங்கு சந்தை குறியீட்டு அதிக பட்சமாக  PE 29 ஆகவும்  ( 2000 வருடம்), குறைந்த பட்சமாக  PE 12 ஆகவும்  (2008 வருடம்) இருந்திருக்கிறது.
பங்கின் அளவு மாறும் திட்டங்கள்  - Dynamic Equity investing

முதல் வழியாக,  இந்த Dynamic Equity திட்டங்களில் சந்தையின் PE குறையும் போது, பங்கின் அளவு அதிகமாகும். PE அதிகமாகும் போது, கடனின் பங்கு அதிகமாக இருக்கும். இந்த வகை Dynamic Equity திட்டங்கள் சரிவிகித balance திட்டங்கள் வகையை சார்ந்தது. ஆனால் பங்கு விகிதம் சரிவிகிதமாக இல்லாமல் சந்தைக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும்.  உதாரணமாக, சந்தை இறங்கி அதாவது PE குறைவாக இருக்கும் போது பங்கின் விகிதம், 80-90% வரை இருக்கும். அதே சமயம் PE அதிகமாக இருக்கும் போது பங்கின் விகிதம் குறைந்து 30-40% வரை வரலாம். இந்த விகிதங்கள் திட்டத்திற்கு திட்டம் , திட்ட மேலாளர் பொறுத்து சற்று மாறலாம். ஆகா, சந்தை குறைந்திருக்கும் போது அதிக முதலீடு செய்வது லாபத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. இது போன்ற சில திட்டங்கள் இதோ:

1. ICICI Pru Balance Advantage Fund
2. Axis Equity saver
3. IDFC Dynamic Equity Fund
4. Franklin Templeton PE Fund

முதலீட்டின் அளவு மாறும் முறை  - PE STP. தாய் நாலடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்வது போல், இன்னொரு மேம்பட்ட Dynamic Investing முறை உள்ளது, அதன் பெயர் PE-STP .

சந்தையின் விலை தற்பொழுது  சற்று அதிகம் தான். எனவே கையில் இருக்கும் பணத்தை முழுவதுமாக பரஸ்பர நிதியின் பங்கு திட்டத்தில் முதலீடு செய்யாமல், கடன் பத்திர திட்டங்களில் முதலீடு செய்து, அதில் இருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கடன் திட்டத்தில் இருந்து பங்கு திட்டத்திற்கு STP (Systematic Transfer Plan ) மூலம் மாற்றிக்கொள்ளலாம். இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஒவ்வொரு மாதத்திலும் அதே தொகையை மாற்றம் செய்யாமல் சந்தை குறைந்திருக்கும் போது கூடுதல் தொகை மாற்றுவதும், தற்சமயம் போல் சந்தை கூடியிருக்கும் போது குறைந்த தொகை மாற்றுவதும் நமக்கு அதிக லாபம் கிடைக்க ஏதுவாக இருக்கும். ஆனால் இது மாதா மாதம் சந்தையை பார்த்து மாற்றும் தொகையை கூட்டுவதோ குறைப்பதோ எளிதான செயல் இல்லை. அதுவே திட்டத்தின் ஒரு பகுதியாக சந்தையின் PE அளவுக்கு ஏற்றாற்போல் மாறும் தொகையை கூட்டியோ குறைத்தோ லாபம் கிடைக்க ஏதுவாக IDFC பரஸ்பர நிதி நிறுவனம் புதிய வகை PE -STP திட்டத்தை அறிமுக படுத்தி உள்ளது.


இந்த முறை முதலீட்டில் PE 16'க்கு கீழ் இருக்கும் போது நாம் கடன் திட்டத்தில் இருந்து பங்கு திட்டத்திற்கு மாறும் தொகை ஐந்து மடங்காகவும் (Green Zone ), PE 16 - 19 ஆக இருக்கும் போது மாறும் தொகை இரண்டு மடங்காகவும் (Yellow Zone ), PE 19'க்கு மேல் இருக்கும் போது மாறும் தொகை ஒரு மடங்காக (Red Zone ) இருக்கும் (படம்-1 பார்க்கவும்). ஆக, சந்தை இறங்கி இருக்கும் போது பங்கு திட்டத்தில் அதிக முதலீடும், சந்தை ஏறி இருக்கும் போது குறைந்த முதலீடும் செய்கின்றோம். இவ்வாறு செய்வதால் சாதாரணமாக செய்கின்ற STP 'யை விட PE -STP மூலம் செய்யும் போது நமக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், நாம் வாங்கும் யூனிட்களின் NAV, PE -STP மூலம் வாங்கும் போது normal STP விட குறைவாக இருக்கிறது.

இரண்டாவது வகையான PE STP என்பது ஒரு குறிப்பிட்ட திட்டம் இல்லை. STP போன்ற முதலீட்டு முறையே. முதல் வகையான Dynamic Equity திட்டங்களில் PE பொறுத்து பங்கின் அளவு திட்டதில் மாறுபடும். இந்த PE STP இல் PE பொறுத்து நாம் முதலீடு செய்யும் பணத்தின் அளவு மாறும். Dynamic Equity ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் மட்டுமே முதலீடு. இந்த PE STP இல் எந்த பங்கு திட்டதிலும் முதலீடு செய்யலாம். ஒரு குறிபிட்ட பங்கு திட்டதில் இல்லாமல், எந்த பரந்து பங்கு திட்டத்திலும் ( Diversified Equity schemes)  சந்தை இறங்கி இருக்கும் போது அதிக அளவில் நம் முயற்சியின்றி ஆட்டோமேடிக்காக ( Automatic transfer) மூதலீடு செய்ய வழி வகை செய்யும்.

No comments:

Post a Comment