Showing posts with label Jewels. Show all posts
Showing posts with label Jewels. Show all posts

Friday, 6 May 2016

பரந்து விரிந்த முதலீடு (Asset Allocation)

கடந்த பல வருடங்களில் தங்கம் ஏறு முகமாக இருந்த்தால், ஆச்சிகள் பல ரூபத்தில் எல்லா வருடங்களில் தங்கம் வாங்கி சேர்த்து இருந்த்தால், இப்போது என்ன ஆகி இருக்கும்.  லாபம், இல்லாமல், அசலும். மிக குறைந்து இருக்கும். அப்படியெனில், தனி நபர் நிதி பராமரிப்பில் நமது முதலீடுகள் எப்படி இருக்க வேண்டும்?   ஒரு பழமொழியை உங்களுக்கு நினைவு படுத்துகின்றேன்.  நமக்கு தெரிந்ததுதான்.. “எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே!!” காரணம் என்ன? தட்டு தடுமாறி விழுந்தால், எல்லாமும் உடைந்து விடும். சாப்பாட்டிற்க்கு எதுவும் இருக்காது..நம் முதலீட்டை சரியான முறையில் எவ்வாறு ஒதுக்கீடு செய்வது என்பதை தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்...



இந்த வருடமோ அல்லது  போன  வருடமோ, காரைக்குடிக்கு அருகில், திருச்சி இராமேஷ்வரம் நான்கு வழி சாலையில், ஒரு நல்ல இடம் வாங்கி, அது சற்று ஏறுமுகமாக இருந்தால், உடனே அடுத்ததாக சென்னைக்கு அருகில் செங்கல்பட்டு தாண்டி, ஒரு நல்ல இடம் விலைக்கு வந்தால் அதை வாங்கிவிடலாம் என்று தானே தோன்றும்.. அது இயல்பு.. ஆனால்அதை நாம் வாங்க முனையக் கூடாது. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு இடமாகவும், வெவ்வேறு ஊராகவும் இருந்தாலும், அடிப்படையில் இரண்டும் ஒரே வகையான முதலீடு!!  செட்டியார்கள் இடமாக சேர்கிறார்கள், அடுத்து ஆச்சிமார்கள் தங்கமாக சேர்க்க விரும்புகிறார்கள்.  அவர்களுக்காக எழுதிய “தணியுமா தங்க தாகம்”, தீபாவளி இதழில் வெளிவந்ததை படித்து இருப்பார்கள். அதை படித்துவிட்டு நீங்கள் கூற நினைப்பது கேட்கிறது.... தங்கத்தை காசாக வைத்து இருக்கின்றோம், நீங்கள் எழுதிய படி, அரசாங்க தங்ககடன் பத்திரமாக வைத்து இருக்கின்றோம், தங்கம் நகையாகவும் உள்ளது. ஆனால் நாம் அறியாதது யாதெனில் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு ரூபங்களில் முதலீடு இருப்பது போல் தோன்றினாலும், அடிப்படையில் எல்லாம் தங்க முதலிடே!!

சராசரி முதலீட்டார்களின் எதிர்பார்பு என்ன? நமது முதலிடு, பல்கி பெருக வேண்டும். கொடுக்கும் கடவுள், கூரையை பிய்த்துக்கொண்டு கொடுத்தால் அதிக சந்தோஷம். இது எல்லோருக்கும், எல்லா சமயத்திலும் சாத்தியமில்லை... நம் அனைவரின் மனதிலும் ஓடும் ஒரு பொதுவான புலம்பல் “அது சரி, அடுத்த வீட்டு அண்ணாமலையின்  அணைத்து முதலீடும் ஏற்றம்தான், எப்போது நமக்கு ஏறி இருக்கு, சொல்ல!! எப்போதும், அடுத்தவனுக்கு தானே  ஏறுகிறது!!” இதற்கென்ன சொல்கீற்ர்கள்? என்வரையில், இது  ஊன்றி கவனிக்க வேண்டிய சமாசாரம். இந்த முதலீட்டு முறையில், நாம் சிறிது மாற்றம் செய்யலாம்.... செய்யவேண்டும், என்பதே என் விருப்பம்.

பொருளாதார  நிபுணர்கள் அடிக்கடி கூறுவார்கள், நமது எல்லா முதலீடும் ஏற்றத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலது, சிறிது இறக்கத்தில் இருந்தாலும், பாதகமில்லை... மொத்த முதலீட்டில் ஏற்றம் இருந்தால், நன்மையே!! (காரணம், உலக வர்தக பரிமாற்றத்தில், உலகலாவிய பணத்தின் சுழற்சியில் (கொடுக்கல், வாங்கல் ) எல்லா பொருட்களும், தங்கம், கச்சா எண்ணை, (crude oil), நாடுகளின் பணத்தின் மதிப்பு, மற்றும், சேவைகளுக்கான வருமானம் ( Services) , ஆகிய அணைத்தும், ஒரே போல் ஏறுவதில்லை, அதே போல் இறங்குவதில்லை). ஆனால்  நிச்சியமான  ஒன்று,  நமக்கு  கிடைக்கும்  முதலீட்டு  வருமானம், இந்த  ஏற்ற  இறக்கங்களை  வைத்துதான்  அமைகிறது.

இதில் தங்க விலை ஏற்ற இறக்கம், நமக்கு தெரிந்தது, எளிதாக புரியக்கூடியது. இந்த ஏற்ற இறக்கங்கள், ஒன்றோடு  ஒன்று  பின்னி  பிணைந்தது. எளிதாக புரிவதற்க்கு, சில தொடர்புகளை  பற்றி  கூறுகின்றேன். உலகில், அமைதி தடைபடும் போது, போர் காலங்களில், தங்க விலை ஏறுவதற்கான வாய்புகள் அதிகம். மத்திய வங்கி, வட்டி  விகிதம்  குறைக்கும் போது, கடன்  பத்திர விலை ஏறும், இதன் விளைவாக கடன் பத்திர  முதலீட்டு வருமானம் பெருகலாம். நாட்டின் GDP யை பொறுத்து, பங்குச் சந்தை மாறுபடும்.

இதற்க்கும்  செங்கல்பட்டில்  இடம்  வாங்குவதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு, பதில் இதோ … இடத்தின் விலைகளும், பண  சுழற்சியை வைத்தே அமைகின்றது, Easy liquidity என்று கூறுவார்கள் (குறைந்த வட்டி விகிதத்தில், நிறைய  பணம்).

சரி  ஏதோ  புரிந்தது என்கிறீர்களா. விக்ஷயத்திற்கு  வருவோம். நாம் எப்படியெல்லாம் முதலீடு  செய்யலாம்  என்பதற்கு  பல வகைகள் உள்ளன:

1. அணைவருக்கும் தெரிந்த தங்கம், வெள்ளி, வைரம், வைடுரியம்....
2. அலைந்து திரிந்து, தேடி பிடிக்கும் இடம், வீடு, அசையா சொத்துக்கள்
3. வங்கி வைப்புகள், கடன் பத்திரங்கள், நிறுவன கடன் முதலீடு
4. சிறு சேமிப்பு, அஞ்சலக திட்டங்கள், அரசாங்க திட்டங்கள்
5. பங்கு சந்தை
6. பரவலாக தெரியாத ஒவியம், மற்றும் புராதனமான பொருட்கள்

மேற்கூறிய  ஆறு வகைகளில் பரஸ்பர நிதிகளை கூறாததற்கு காரணம், இந்த ஆறு வகை முதலீடும் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வகையை சார்ந்த முதலீடு. பரஸ்பர நிதிகள் மூலம், 1,3,5 வகைகளை உள்ளிட்டு மூன்று வகைகளில், வீட்டில் இருந்தபடியே முதலீடு செய்யலாம். இதன் மூலம், பரஸ்பர நிதியில் மூதலீடு செய்து, பரந்து விரிந்து முதலிட்டின் பயன் பெறலாம்.

பரஸ்பர நிதி  முதலீட்டில், ஒரு  பகுதி  பங்கு சந்தை திட்டத்திலும்,  இன்னொரு பகுதி அரசாங்க கடன் பத்திர பரஸ்பர நிதி திட்டத்திலும், எஞ்சிய  பகுதி  பரஸ்பர நிதி தங்க திட்டத்திலும் முதலிடு  செய்வதன்  மூலம், ஒரே மாதிரியான முதலீடு  என்று தோன்றினாலும், அடிப்படையில் இது பங்குச் சந்தை, கடன் பத்திரம், தங்கம் என்ற வெவ்வேறான முதலீடே!! நான் சற்று மேலே கூறியே ஒரே மாதிரியான தங்க முதலீடு உதாரணத்திற்கும்  இப்போது கூறிய பரஸ்பர நிதி பற்றிய உதாரணத்திற்கும் ஆன வேறுபாட்டை புரிதல் அவசியம்!!

இதெல்லாம் சரி, ஒவ்வொரு வகையிலும், என்ன சதவீதம் முதலீடு  செய்ய வேண்டும் என்பதற்கு முன்.... நமது நிதி நிலைமை, குடும்பத்தினரின் எதிர்பார்புகள், முதலீட்டின் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் வலிமை ( Risk tolerance),  முதலீட்டின் காலம், முதலீட்டின் காரணம், மகள் கல்யாணம், பிள்ளைகள் மேற்படிப்பு, நமது  ஒய்வு  ஊதியம் ஆகிய  பல்வேறு கோணங்களை  ஒட்டியே  என்ன  சதவீதம், எங்கு முதலீடு  செய்ய வேண்டும்  என்று   நாம் தீர்மானிக்க வேண்டும்.

பரந்து விரிந்த முதலீட்டின் வகைகளை படத்தில் காணலாம். இது ஒரு வகை மட்டுமே. முதலீட்டாரின் வயது, முன் கூறிய முதலீட்டின் காரணங்கள் பொறுத்து  இந்த சதவீதம் மாறுபடும்.

Real estate
இடம், வீடு மற்றும் அசையா சொத்துக்கள்
50%
Equities
நேரடியான அல்லது பரஸ்பர நிதி மூலம் பங்கு முதலீடு
30%
Debt
கடன் பத்திரங்கள் - நேரடியான அல்லது பரஸ்பர நிதி மூலம
10%
Gold
தங்கம்
5%
Cash
கையில் பணம் - அவசர தேவைகளுக்காக
5%


இந்த பரந்து விரிந்த வெவ்வேறான முதலீடுகளை  பராமரிப்பதில், கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :
1. சொத்துக்களின் இன்றைய  மதிப்பை பார்க்க வேண்டும்
2. தங்கம் என்றால் நம்மிடம் லாக்கரில் மற்றும் வீட்டில் உள்ள நகை, அணிந்திருக்கும் நகை, தங்கக் காசு, தங்கப் பத்திரம் என்று எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளவேண்டும்
3. பங்குகளில், நேரடி மற்றும் பரஸ்பர நிதியில் வாங்கியது , எல்லாவற்றையும் சேர்த்து கொள்ளவேண்டும்
4.   சிலர் கட்டாயத்திற்கு வாங்கி விட்டு, பின் அதை மறந்துவிடுவார்கள், இது பலன் அளிக்காமல் போகலாலம்.

மீண்டும் படத்தை பாருங்கள்… ஆரம்பத்தில் நமது பங்குச் சதவீதம்  30% ஆக இருந்து, ஒரு வருடம் கழித்து 40% ஆகலாம். அப்போது, நாம் 10%  சதவீதம் பங்குகளை  விற்று, கடன் பத்திர முதலீடு குறைந்திருந்தால், அதில் முதலீடு செய்யவேண்டும். இதனால், ஏறிய பங்குகளில் லாபம் பார்க முடிந்த்து. அதே சமயம் பங்கு சதவீதம் திரும்பவும் 30%, கொண்டு வருவதன் மூலம், நமது Risk கட்டுக்குள்  இருக்கும். இதற்கு Asset Rebalance என்று பெயர். இது பெரும் பாலோனர் கவனிக்காதது.. ஆனால் மிகவும் அவசியாமானது! Asset Rebalance  செய்வது, கடினாமாக தோன்றினால், பரஸ்பர நிதியில் இதற்கென்று தனி திட்டங்கள் உள்ளது. ( Axis Triple Advantage fund)  குறிப்பிட்ட  இடைவெளியில், அவர்களாகவே பங்கு, மற்றும் கடன் பத்திர முதலீடுகளை மாற்றி அமைத்துக் கொள்வார்கள்.



முதலிலேயே பாரத்தோம். எல்லா முதலீடும், தங்கத்தில் மட்டுமே இருக்க கூடாது. அதற்கு பதிலாக, பங்கு, தங்கம், கடன்பத்திரம், ஆகிய மூன்றும் கலந்த முதலீடு எப்படி லாபம் தரும் என்பதை அட்டவனை படத்தில் பாரக்கவும்

என்ன முதலீட்டாளர்களே...  தனி  நபர்  நிதி  பராமரிப்பில் நமது முதலீடுகள் எப்படி இருக்க வேண்டும், அது  பரந்து  விரிந்து  இருப்பதன் நன்மைகள் பற்றி  புரிந்து  இருக்கும்.  முதலீட்டின் எல்லா பணத்தையும், ஒரே வகை முதலீட்டில் செய்வது நன்றன்று என்பது, தெளிவு.  

Gold investments - A review / தணியுமா தங்கத் தாகம்


பெண்களுக்கும் தங்கத்திற்கும் ஆன ஈடுபாடு  அனைவருக்கும் தெரிந்ததே. அதுவும் நமது ஆச்சிகளுக்கு  தங்கத்தின் மேலான ஆசையும் அளவிற்கு அடங்காதது.  தங்கத்தை நகைகளாக வைத்திருப்பது ஆச்சிகளிடம் மட்டுமல்ல... இந்தியாவில் மட்டுமல்ல... உலகளவில் மிகவும் பிரபலமானதாக உள்ளது. உலக தங்க மையத்தின் ஆராய்வின் படி உலகின் மொத்த தங்கத்தில் 50% தங்க நகைகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!!

முதலில் தங்கத்தை பற்றி தெரிந்துகொள்வோம். தங்கத்தின் சுத்தம் காரட்டில் கூறுவார்கள். இது 10 காரட் முதல் 24 காரட் வரை உள்ளது. 24 காரட்  என்பது 100%  சுத்தத் தங்கம். நமது நகைகள் பெரும்பாலும் 22 காரட்டாக இருக்கும், இதில் 91.6% தங்கம் உள்ளது (22/24=91.6%). இன்னும் எளிதாகவிளக்குகிறேன், 8 கிராம்  என்பது ஒரு பவுன். இதில் 7.328 கிராம் சுத்த  தங்கம் இருக்கும், மீதம்  0.672 கிராம் செம்பு அல்லது மற்ற உலோகம் இருக்கும். ஆகையால் தான், 24 காரட்  தங்க விலை 22 காரட் தங்க விலையை விட அதிகமாக இருக்கிறது.

நமது செட்டிய வீடுகளில் மகளின் திருமணத்தின் போது கழுத்தீருடன் சேர்த்து மற்ற தங்க நகைகளும் சீதனமாக கொடுக்கப்படுகிறது. புதுயுக பெண்களுக்கு கழுத்தீரின் மேல் அவ்வளவு நாட்டம் இருப்பதாக தெரியவில்லை. IT ஆச்சிகள் சீதனமாக கொடுக்கப்பட்ட நகைகளை   அணிந்து அலுவலகம் சென்றால் எப்படி இருக்கும்? அப்பச்சி கொடுத்த அனைத்து நகைகளையும்  அணிந்து அலுவலகம் செல்ல முடிகிறதா? சரி வேணடாம்... ஊரில் கல்யாணம், காட்சிகளுக்காவது அணிந்து கொள்கிறார்களா? சிலர் அணிந்து கொள்கிறார்கள். ஆனால் இது குறைந்து கொண்டே வருகிறது. காரணம் என்ன?

நமது கோட்டை மாதிரியான வீடுகளில், தங்கம் வெள்ளி வைப்பது தற்போது  உசிதமல்ல. சமீபத்தில் ஊரில் நடந்த திருட்டுகளை வைத்து பார்க்கும்  போது இது நிச்சயம் ஏற்புடையதல்ல. இதற்கு மாறாக வங்கி அல்லது, தனியார் நடத்தும் லாக்கரில் தங்கத்தை வைப்பது நம் மக்களிடையில் மிகவும் பிரபலம். இதன் காரணமாகத்தான் நகைகளை  கல்யாணம் காட்சிகளுக்கு  எடுப்பது, பிரம்ம பிரயத்தனமாக உள்ளது. நாம் எப்போது ஊருக்கு வருகிறோம் போகிறோம், எப்போது நமக்கும்  பிள்ளைகளுக்கும் வாராந்திர விடுமுறை, எப்போது லாக்கர் விடுமுறை, என்றெல்லாம் கணக்குப் போட்டு இந்த  நகைகளை எடுத்து அணிவதும் பிறகு அதை லாக்கரில் திரும்ப   வைப்பதும்... அப்பப்பா, ஒரு பெரிய வேலை!! இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு சில ஆச்சிமார்கள் இருப்பதை போட்டு  கொள்வோம் போதும், என்று இருந்து விடுகிறார்கள்,  லாக்கர் பக்கம் கூட போவதில்லை. நம் உபயோகத்திற்கு பயன் படாத நகைகளை லாக்கரில் வைத்து அதற்க்கு வாடகை கட்டிக் கொண்டிருக்கிறோம். வருடாந்திர வருமானம் இல்லாத தங்கத்திற்கு, வருடா வருடம் ரூ 500, முதல் ரூ 5000 வரை செலவழித்து கொண்டுள்ளோம். புது அலைபேசி வைத்திருக்கும் போது கிடைக்கும் சமூக மதிப்பு, ஆத்தாவின் பழைய  நகையில் கிடைக்குமா என்ற எண்ண ஒட்டம், திருட்டு பயம், சோம்பேறித்தனம், வழிப்பறி போன்ற பல தரபட்ட காரணங்களால்தான் நகை அணிவது குறைகிறது என்றுதான் கொள்ளவேண்டும். “இல்லை... அணிந்து அழகு பார்க்காவிட்டாலும் பாதகமில்லை, மகள் கல்யாணத்திற்கு நகை சேர்கின்றோம்” என்கிற ஆச்சிகளின் குரல் கேட்கின்றது. மேலும் படியுங்கள்.


தங்கத்தில் முதலீடு  என்று தங்க நகைகள் வாங்குதல் புத்திசாலித்தனம் இல்லை. தங்க நகையில் சுத்த  தங்கத்தின் அளவு குறைவாக இருக்கும். இது கடைக்குக்  கடை மாறுபடும். அவற்றை விற்கும் பொழுது குறைவான விலையில்தான் வாங்குவார்கள். ஆத்தாளின் நகையை அழித்து மகளுக்கு நகை செய்தால், டிசைன் புதிதாக இருக்குமே தவிர, மதிப்பு குறைந்து விடும் என்பது நிதர்சனம். சரி, நாம் சிவனே என்று இருந்தாலும், நகை கடை விளம்பரங்கள் நம்மை இருக்க விடுவதில்லை. விளம்பரம், அதற்கு போட்டி விளம்பரம் என்று தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் தொடர்களை விட அதிக நேரம் நகை கடை  விளம்பரங்கள் தான் அதிகம் பார்கின்றோம். பார்த்த பிறகு புரிந்ததைவிட, புரியாதது தான் அதிகம் இருக்கும்!! நாம் தங்கம் வாங்கும் போது எதற்க்கெல்லாம் பணம் கொடுக்கின்றோம் என்பதை நன்கு புரிந்து, கூர்ந்து கவனிக்க வேண்டும். நாம் வாங்கும் தங்க நகையின் விலை, தங்கத்திற்கு மட்டும் அல்ல கூலி சேதாரத்திர்க்கும் சேர்த்து தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்! இது ஆச்சிகள் அறிந்ததே... ஆனால் அறியாதது, கூலி சேதாரம்  எப்படி முதலீட்டின் லாபத்த்தை பாதிக்கின்றது என்பது தான். கூலி சேதாரம்  3% முதல் 15% வரை, சில சமயம் அதற்கு மேல் போடப்படும்.  இதை புரிந்துகொள்ள  அட்டவணை பார்க்கவும்.



வாங்கியது
தேதி
11-Apr-13
26-Sep-11
21-Oct-10
தங்கத்தின் எடை (கிராமில்)
71.98
44.68
71.7
கூலி சேதாரம் (கிராமில்)
7.9178
10
18
மொத்த எடை (கிராமில்)
79.8978
54.68
89.7
சந்தையில்  1கிராம் தங்க  விலை (ரூ)
2,632.00
2,447.00
1,835.00
நகைக்காக நாம் கொடுத்த மொத்த பணம் (ரூ)
210,291.01
133,801.96
164,599.50
இறுதியில் நாம் வாங்கிய ஒரு கிராம்தங்க விலை (ரூ)
2,921.52
2,994.67
2,295.67
விற்பது
தேதி
7-Sep-15
7-Sep-15
7-Sep-15
சந்தையில் 1கிராம் தங்க  விலை (ரூ)
2,505.00
2,505.00
2,505.00
கழிவு சதவீதம்
5%
5%
5%
நாம் விற்ற ஒரு கிராம் தங்க விலை (ரூ)
2,379.75
2,379.75
2,379.75
நமக்கு கிடைத்த மொத்த பணம் (ரூ)
  171,294.41
   106,327.23
   170,628.08
லாபம்/நஷ்டம் - தங்க சந்தை விலையில் (ரூ)
  (18,156.96)
     (3,004.73)
     39,058.58
லாபம்/நஷ்டம் நகை வாங்கியவகையில்  (ரூ)
  (20,839.65)
   (24,470.00)
   (33,030.00)
மொத்த லாபம்/நஷ்டம்
  (38,996.60)
   (27,474.73)
       6,028.58


நகையே வேண்டாம், காசாக.... தங்ககாசாக வாங்கிவிடலாமா? என்று நீங்கள் கேட்ப்பது புரிகிறது. தங்கக் காசாக நகை கடையில் வாங்கினாலும், கூலி சேதாரம்  போடுவார்கள், வியப்புதான்! ஆனால் அதுதான் நடைமுறை. தங்கம் மற்றும் கூலி சேதாரம் சேர்த்துதான் நாம் தங்கக் காசு வாங்க வேண்டும்.  எனவே  முடிவில் நாம் வாங்கும் ஒரு கிராம் தங்கதின் விலை, சந்தையின் விலையைவிட கூட இருக்கும். பிற்பாடு ஒரு தேவைக்காக அந்த தங்கக் காசை விற்கச் சென்றால், சந்தையின் விலையைவிட குறைவாகத்தான் வாங்குவார்கள். ஆக நமக்கு கிடைக்கும் லாபம், தங்கச் சந்தையின் லாபத்தைவிட குறைவாக இருக்கும். நஷ்டம் எனில் தங்கச் சந்தையின் நஷ்டத்தை விட கூட இருக்கும். ஆனால் ஆயாக்களுக்கு தெரியும், கழுத்தீறும்  தங்க நகைகளும்  அவசரகால பணம் என்பது. தங்கம் அவசரகால பணமாகவும் வேண்டும், இந்த காலத்திற்க்கு ஏற்றாற் போலும் இருக்க வேண்டும், செலவில்லாமல் லாபமாகவும் இருக்க வேண்டும், இதெல்லாம் எப்படி சாத்தியம்?  நாம் எவ்வளவு படித்திருந்தாலும் பொன்னைக் கண்டால் மனம் ஈர்க்கத்தானே செய்கிறது! பொன்னாசையைய் வென்றவர் யார் சொல்லுங்கள் பார்போம்.

தங்கத்தை பல்வேறு முறைகளில் வாங்கலாம். முதலாவதாக,   தங்க நகைகள அணிவதற்கு மட்டும் வாங்கலாம், முதலீட்டிற்கு அல்ல. முதலீட்டிற்கு வாங்கினால், சுத்தம் அதிகமான Hall Mark முத்திரையுள்ள,  கல் பதிக்காத, கூலி சேதாரம்  குறைவாக இருக்கும் தங்க நகை அல்லது தங்ககாசு வாங்கலாம். வங்கிகளில் தங்ககாசு வாங்குவது கடந்த சில வருடங்களில் பிரபலாமான முறை.  தற்போது வங்கிகளில் தங்ககாசு  விற்பது இல்லை. காரணம் பின்னர் தெளிவாக தெரியும்.

இராண்டவதாக, தங்கத்தை Gold ETF (Gold Exchange traded Fund) முறையில் வாங்கலாம். இதை DeMat முறையில் வாங்க வேண்டும். வங்கிக் கணக்கில், வங்கி இருப்பு என்பது நமது   கையில் தொகையாக இல்லாமல், வங்கி கணக்கேட்டில் வரவாக குறிக்க மட்டுமே படுகிறதோ, அது போலவே நாம் வாங்கிய தங்க அளவு மின்னணு வடிவில் டீமாட் கணக்கில் இருக்கும். இதில்  கூலி சேதாரம்  இல்லை. நாம் சந்தையில் இந்த ETF  வாங்கி  நமது டீமாட் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். தேவைபட்டபோது விற்றுக் கொள்ளலாம். இது போன்று சுமார் பத்துக்கும் மேற்ப்பட்ட தங்க  ETF  சந்தையில் உள்ளது.  இதை பாதுகாக்க லாக்கரோ, லாக்கர் வாடகையோ தேவையில்லை.  இதன் விலை தங்கத்தின் சந்தை விலையை ஒட்டியே இருக்கும். நமக்கு கிடைக்கும் லாப நஷ்டமும் தங்கதின் சந்தை விலையை ஒட்டியே இருக்கும். இந்த ETF யை  தங்கமாக மாற்றுவது சற்று கடினமான வேலை. தங்கதில் முதலீடு  செய்ய இது சிறந்த வழியாகும்.

மூன்றாவதாக E-Gold. இதை E-GOld கமாடிட்டி சந்தையில் வாங்க வேண்டும் (Commodity market). இதுவும் Gold ETF போலவே தான். வித்தியாசம் யாதெனில்  இந்த E-GOldஐ தங்கமாக மாற்ற முடியும்.

முதல் முறையில் தங்க நகை வாங்கி விற்பதில் லாபம் குறைவாகவும் நஷ்டம்  அதிகமாகவும் இருக்கும்.  மீதமுள்ள இரு முறைகளிலும் லாப நஷ்டம் தங்கதின் சந்தை விலையை ஒட்டியே இருக்கும். ஆனால் வாங்கி விற்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக தோன்றும். இதற்கு என்னதான் வழி?

நான்காவதாக பரஸ்பர நிதி வழி தான். பரஸ்பர நிதியில் தங்க முதலீடு செய்ய இரண்டு வகை உள்ளது. முதல் வகை, பரஸ்பர நிதியில் தங்கத்தை அடிப்படையாக கொண்ட திட்டத்தில் முதலீடு செய்ய  வேண்டும். பரஸ்பர நிதி நிறுவனம்  நமது முதலீட்டை  Gold ETF இல் மறு முதலீடு  செய்யும்.    இதன் விலை தங்கதின் சந்தை விலையை ஒட்டியே இருக்கும். அதே போலவே நமக்கு கிடைக்கும் லாப நஷ்டம் தங்கதின் சந்தை விலையை ஒட்டியே இருக்கும். இரண்டாவது  வகை, பரஸ்பர நிதி நிறுவனம்  நமது முதலீட்டை  தங்க உற்பத்தி செய்யும் நிறுவன பங்குகளில் மறு முதலீடு  செய்யும்.  இத்திட்டத்தின் லாப நஷ்டம் தங்க உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் லாப நஷ்டம் மற்றும் பங்கு சந்தை ஏற்ற இறக்கதிற்கு ஏற்றவாறு அமையும். நம் தேவைக்கேற்ப இதை எப்போது வேண்டுமானாலும்  விற்றுக் கொள்ளலாம். தங்கத்தில் முதலீடு  செய்ய முதல் வகை பரஸ்பர நிதி திட்டம் மிகவும்  சிறந்த வழியாகும்.

தங்கத்தில் எப்படி முதலீடு செய்யலாம் என்று பார்த்தோம். தங்க விலையை வைத்து பார்தால், லாபம், விலைவாசி ஏற்றத்தைவிட சிறிது கூட இருக்கும்.  தங்க முதலீடு வீட்டிற்கு நல்லது என்று நம்பி, “அடாது மழை பெய்தாலும், விடாது தங்க முதலீடு செய்வோம்” என்ற பழக்கத்தை நம்மில் பலர் பின்பற்றுகிறோம்.  இது நம் நாட்டிற்க்கு நன்மை பயக்காது.  காரணம், நாம் தங்கம் வாங்குவதால் நாட்டின் அந்நிய செலவாணி குறைகிறது. தங்கம் லாக்கரில் இருப்பதால், அது முடக்கி வைக்கபட்ட மூலதனமாக உள்ளது. பணம் பெருக வாய்ப்பு இல்லாமல் , பணச்சுழற்சியில் பங்கு பெறாமல் உள்ளது. இது நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு உதவுது இல்லை. இதை ஆங்கிலத்தில் “Gold is an unproductive asset” என்று கூறுகிறார்கள். இதனால்தான் வங்கிகள் தங்க காசு விற்பது தற்போது நடைமுறையில் இல்லை. லாக்கரில் இருக்கும் தங்கத்தை  பணச்சுழற்சியில் பங்கு பெறவைக்க அரசாங்கம், இரண்டு புது திட்டம் கொண்டு வருகின்றது. முதல் திட்டம்  Gold Monetisation schemes, இதன் படி  லாக்கரில் இருக்கும் தங்கத்தை  வங்கிகளிடம், கொடுத்து விட வேண்டும், திட்ட முடிவில் தங்க மதிப்பு மற்றும் வட்டி கூடுதலாக பெறலாம். இரண்டாவது திட்டம், அரசாங்க தங்க பத்திரம், தங்கமாக வாங்காமல், தங்கத்திற்கு நிகரான  அரசாங்க தங்க பத்திரம் வாங்கி பயன் பெறுவது.

ஆக ஆச்சிகளே, தங்க நகைகளை அணிவதற்கு மட்டும் வாங்கவும். தங்க முதலீட்டிற்க்கு  உங்கள் மொத்த முதலீட்டில் சுமார் 10% மட்டும், பரஸ்பர நிதி நிறுவனத்தின்  தங்க ETF / நேரடியாக தங்க ETF/  அரசாங்க தங்க பத்திரம், மூலம் மூதலிடு செய்யலாம். தற்பொழுது தங்க விலை இறங்கு முகமாக இருப்பதால், குறைந்த கால எண்ணத்தில் வாங்காமல், நீண்ட கால முதலீட்டில் தங்கம்  வாங்கலாம்.