முதலில் தங்கத்தை பற்றி தெரிந்துகொள்வோம். தங்கத்தின் சுத்தம் காரட்டில் கூறுவார்கள். இது 10 காரட் முதல் 24 காரட் வரை உள்ளது. 24 காரட் என்பது 100% சுத்தத் தங்கம். நமது நகைகள் பெரும்பாலும் 22 காரட்டாக இருக்கும், இதில் 91.6% தங்கம் உள்ளது (22/24=91.6%). இன்னும் எளிதாகவிளக்குகிறேன், 8 கிராம் என்பது ஒரு பவுன். இதில் 7.328 கிராம் சுத்த தங்கம் இருக்கும், மீதம் 0.672 கிராம் செம்பு அல்லது மற்ற உலோகம் இருக்கும். ஆகையால் தான், 24 காரட் தங்க விலை 22 காரட் தங்க விலையை விட அதிகமாக இருக்கிறது.
நமது செட்டிய வீடுகளில் மகளின் திருமணத்தின் போது கழுத்தீருடன் சேர்த்து மற்ற தங்க நகைகளும் சீதனமாக கொடுக்கப்படுகிறது. புதுயுக பெண்களுக்கு கழுத்தீரின் மேல் அவ்வளவு நாட்டம் இருப்பதாக தெரியவில்லை. IT ஆச்சிகள் சீதனமாக கொடுக்கப்பட்ட நகைகளை அணிந்து அலுவலகம் சென்றால் எப்படி இருக்கும்? அப்பச்சி கொடுத்த அனைத்து நகைகளையும் அணிந்து அலுவலகம் செல்ல முடிகிறதா? சரி வேணடாம்... ஊரில் கல்யாணம், காட்சிகளுக்காவது அணிந்து கொள்கிறார்களா? சிலர் அணிந்து கொள்கிறார்கள். ஆனால் இது குறைந்து கொண்டே வருகிறது. காரணம் என்ன?
நமது கோட்டை மாதிரியான வீடுகளில், தங்கம் வெள்ளி வைப்பது தற்போது உசிதமல்ல. சமீபத்தில் ஊரில் நடந்த திருட்டுகளை வைத்து பார்க்கும் போது இது நிச்சயம் ஏற்புடையதல்ல. இதற்கு மாறாக வங்கி அல்லது, தனியார் நடத்தும் லாக்கரில் தங்கத்தை வைப்பது நம் மக்களிடையில் மிகவும் பிரபலம். இதன் காரணமாகத்தான் நகைகளை கல்யாணம் காட்சிகளுக்கு எடுப்பது, பிரம்ம பிரயத்தனமாக உள்ளது. நாம் எப்போது ஊருக்கு வருகிறோம் போகிறோம், எப்போது நமக்கும் பிள்ளைகளுக்கும் வாராந்திர விடுமுறை, எப்போது லாக்கர் விடுமுறை, என்றெல்லாம் கணக்குப் போட்டு இந்த நகைகளை எடுத்து அணிவதும் பிறகு அதை லாக்கரில் திரும்ப வைப்பதும்... அப்பப்பா, ஒரு பெரிய வேலை!! இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு சில ஆச்சிமார்கள் இருப்பதை போட்டு கொள்வோம் போதும், என்று இருந்து விடுகிறார்கள், லாக்கர் பக்கம் கூட போவதில்லை. நம் உபயோகத்திற்கு பயன் படாத நகைகளை லாக்கரில் வைத்து அதற்க்கு வாடகை கட்டிக் கொண்டிருக்கிறோம். வருடாந்திர வருமானம் இல்லாத தங்கத்திற்கு, வருடா வருடம் ரூ 500, முதல் ரூ 5000 வரை செலவழித்து கொண்டுள்ளோம். புது அலைபேசி வைத்திருக்கும் போது கிடைக்கும் சமூக மதிப்பு, ஆத்தாவின் பழைய நகையில் கிடைக்குமா என்ற எண்ண ஒட்டம், திருட்டு பயம், சோம்பேறித்தனம், வழிப்பறி போன்ற பல தரபட்ட காரணங்களால்தான் நகை அணிவது குறைகிறது என்றுதான் கொள்ளவேண்டும். “இல்லை... அணிந்து அழகு பார்க்காவிட்டாலும் பாதகமில்லை, மகள் கல்யாணத்திற்கு நகை சேர்கின்றோம்” என்கிற ஆச்சிகளின் குரல் கேட்கின்றது. மேலும் படியுங்கள்.
தங்கத்தில் முதலீடு என்று தங்க நகைகள் வாங்குதல் புத்திசாலித்தனம் இல்லை. தங்க நகையில் சுத்த தங்கத்தின் அளவு குறைவாக இருக்கும். இது கடைக்குக் கடை மாறுபடும். அவற்றை விற்கும் பொழுது குறைவான விலையில்தான் வாங்குவார்கள். ஆத்தாளின் நகையை அழித்து மகளுக்கு நகை செய்தால், டிசைன் புதிதாக இருக்குமே தவிர, மதிப்பு குறைந்து விடும் என்பது நிதர்சனம். சரி, நாம் சிவனே என்று இருந்தாலும், நகை கடை விளம்பரங்கள் நம்மை இருக்க விடுவதில்லை. விளம்பரம், அதற்கு போட்டி விளம்பரம் என்று தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் தொடர்களை விட அதிக நேரம் நகை கடை விளம்பரங்கள் தான் அதிகம் பார்கின்றோம். பார்த்த பிறகு புரிந்ததைவிட, புரியாதது தான் அதிகம் இருக்கும்!! நாம் தங்கம் வாங்கும் போது எதற்க்கெல்லாம் பணம் கொடுக்கின்றோம் என்பதை நன்கு புரிந்து, கூர்ந்து கவனிக்க வேண்டும். நாம் வாங்கும் தங்க நகையின் விலை, தங்கத்திற்கு மட்டும் அல்ல கூலி சேதாரத்திர்க்கும் சேர்த்து தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்! இது ஆச்சிகள் அறிந்ததே... ஆனால் அறியாதது, கூலி சேதாரம் எப்படி முதலீட்டின் லாபத்த்தை பாதிக்கின்றது என்பது தான். கூலி சேதாரம் 3% முதல் 15% வரை, சில சமயம் அதற்கு மேல் போடப்படும். இதை புரிந்துகொள்ள அட்டவணை பார்க்கவும்.
வாங்கியது
|
|||
தேதி
|
11-Apr-13
|
26-Sep-11
|
21-Oct-10
|
தங்கத்தின் எடை (கிராமில்)
|
71.98
|
44.68
|
71.7
|
கூலி சேதாரம் (கிராமில்)
|
7.9178
|
10
|
18
|
மொத்த எடை (கிராமில்)
|
79.8978
|
54.68
|
89.7
|
சந்தையில் 1கிராம் தங்க விலை (ரூ)
|
2,632.00
|
2,447.00
|
1,835.00
|
நகைக்காக நாம் கொடுத்த மொத்த பணம் (ரூ)
|
210,291.01
|
133,801.96
|
164,599.50
|
இறுதியில் நாம் வாங்கிய ஒரு கிராம்தங்க விலை (ரூ)
|
2,921.52
|
2,994.67
|
2,295.67
|
விற்பது
|
|||
தேதி
|
7-Sep-15
|
7-Sep-15
|
7-Sep-15
|
சந்தையில் 1கிராம் தங்க விலை (ரூ)
|
2,505.00
|
2,505.00
|
2,505.00
|
கழிவு சதவீதம்
|
5%
|
5%
|
5%
|
நாம் விற்ற ஒரு கிராம் தங்க விலை (ரூ)
|
2,379.75
|
2,379.75
|
2,379.75
|
நமக்கு கிடைத்த மொத்த பணம் (ரூ)
|
171,294.41
|
106,327.23
|
170,628.08
|
லாபம்/நஷ்டம் - தங்க சந்தை விலையில் (ரூ)
|
(18,156.96)
|
(3,004.73)
|
39,058.58
|
லாபம்/நஷ்டம் நகை வாங்கியவகையில் (ரூ)
|
(20,839.65)
|
(24,470.00)
|
(33,030.00)
|
மொத்த லாபம்/நஷ்டம்
|
(38,996.60)
|
(27,474.73)
|
6,028.58
|
நகையே வேண்டாம், காசாக.... தங்ககாசாக வாங்கிவிடலாமா? என்று நீங்கள் கேட்ப்பது புரிகிறது. தங்கக் காசாக நகை கடையில் வாங்கினாலும், கூலி சேதாரம் போடுவார்கள், வியப்புதான்! ஆனால் அதுதான் நடைமுறை. தங்கம் மற்றும் கூலி சேதாரம் சேர்த்துதான் நாம் தங்கக் காசு வாங்க வேண்டும். எனவே முடிவில் நாம் வாங்கும் ஒரு கிராம் தங்கதின் விலை, சந்தையின் விலையைவிட கூட இருக்கும். பிற்பாடு ஒரு தேவைக்காக அந்த தங்கக் காசை விற்கச் சென்றால், சந்தையின் விலையைவிட குறைவாகத்தான் வாங்குவார்கள். ஆக நமக்கு கிடைக்கும் லாபம், தங்கச் சந்தையின் லாபத்தைவிட குறைவாக இருக்கும். நஷ்டம் எனில் தங்கச் சந்தையின் நஷ்டத்தை விட கூட இருக்கும். ஆனால் ஆயாக்களுக்கு தெரியும், கழுத்தீறும் தங்க நகைகளும் அவசரகால பணம் என்பது. தங்கம் அவசரகால பணமாகவும் வேண்டும், இந்த காலத்திற்க்கு ஏற்றாற் போலும் இருக்க வேண்டும், செலவில்லாமல் லாபமாகவும் இருக்க வேண்டும், இதெல்லாம் எப்படி சாத்தியம்? நாம் எவ்வளவு படித்திருந்தாலும் பொன்னைக் கண்டால் மனம் ஈர்க்கத்தானே செய்கிறது! பொன்னாசையைய் வென்றவர் யார் சொல்லுங்கள் பார்போம்.
தங்கத்தை பல்வேறு முறைகளில் வாங்கலாம். முதலாவதாக, தங்க நகைகள அணிவதற்கு மட்டும் வாங்கலாம், முதலீட்டிற்கு அல்ல. முதலீட்டிற்கு வாங்கினால், சுத்தம் அதிகமான Hall Mark முத்திரையுள்ள, கல் பதிக்காத, கூலி சேதாரம் குறைவாக இருக்கும் தங்க நகை அல்லது தங்ககாசு வாங்கலாம். வங்கிகளில் தங்ககாசு வாங்குவது கடந்த சில வருடங்களில் பிரபலாமான முறை. தற்போது வங்கிகளில் தங்ககாசு விற்பது இல்லை. காரணம் பின்னர் தெளிவாக தெரியும்.
இராண்டவதாக, தங்கத்தை Gold ETF (Gold Exchange traded Fund) முறையில் வாங்கலாம். இதை DeMat முறையில் வாங்க வேண்டும். வங்கிக் கணக்கில், வங்கி இருப்பு என்பது நமது கையில் தொகையாக இல்லாமல், வங்கி கணக்கேட்டில் வரவாக குறிக்க மட்டுமே படுகிறதோ, அது போலவே நாம் வாங்கிய தங்க அளவு மின்னணு வடிவில் டீமாட் கணக்கில் இருக்கும். இதில் கூலி சேதாரம் இல்லை. நாம் சந்தையில் இந்த ETF வாங்கி நமது டீமாட் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். தேவைபட்டபோது விற்றுக் கொள்ளலாம். இது போன்று சுமார் பத்துக்கும் மேற்ப்பட்ட தங்க ETF சந்தையில் உள்ளது. இதை பாதுகாக்க லாக்கரோ, லாக்கர் வாடகையோ தேவையில்லை. இதன் விலை தங்கத்தின் சந்தை விலையை ஒட்டியே இருக்கும். நமக்கு கிடைக்கும் லாப நஷ்டமும் தங்கதின் சந்தை விலையை ஒட்டியே இருக்கும். இந்த ETF யை தங்கமாக மாற்றுவது சற்று கடினமான வேலை. தங்கதில் முதலீடு செய்ய இது சிறந்த வழியாகும்.
மூன்றாவதாக E-Gold. இதை E-GOld கமாடிட்டி சந்தையில் வாங்க வேண்டும் (Commodity market). இதுவும் Gold ETF போலவே தான். வித்தியாசம் யாதெனில் இந்த E-GOldஐ தங்கமாக மாற்ற முடியும்.
முதல் முறையில் தங்க நகை வாங்கி விற்பதில் லாபம் குறைவாகவும் நஷ்டம் அதிகமாகவும் இருக்கும். மீதமுள்ள இரு முறைகளிலும் லாப நஷ்டம் தங்கதின் சந்தை விலையை ஒட்டியே இருக்கும். ஆனால் வாங்கி விற்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக தோன்றும். இதற்கு என்னதான் வழி?
நான்காவதாக பரஸ்பர நிதி வழி தான். பரஸ்பர நிதியில் தங்க முதலீடு செய்ய இரண்டு வகை உள்ளது. முதல் வகை, பரஸ்பர நிதியில் தங்கத்தை அடிப்படையாக கொண்ட திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். பரஸ்பர நிதி நிறுவனம் நமது முதலீட்டை Gold ETF இல் மறு முதலீடு செய்யும். இதன் விலை தங்கதின் சந்தை விலையை ஒட்டியே இருக்கும். அதே போலவே நமக்கு கிடைக்கும் லாப நஷ்டம் தங்கதின் சந்தை விலையை ஒட்டியே இருக்கும். இரண்டாவது வகை, பரஸ்பர நிதி நிறுவனம் நமது முதலீட்டை தங்க உற்பத்தி செய்யும் நிறுவன பங்குகளில் மறு முதலீடு செய்யும். இத்திட்டத்தின் லாப நஷ்டம் தங்க உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் லாப நஷ்டம் மற்றும் பங்கு சந்தை ஏற்ற இறக்கதிற்கு ஏற்றவாறு அமையும். நம் தேவைக்கேற்ப இதை எப்போது வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம். தங்கத்தில் முதலீடு செய்ய முதல் வகை பரஸ்பர நிதி திட்டம் மிகவும் சிறந்த வழியாகும்.
தங்கத்தில் எப்படி முதலீடு செய்யலாம் என்று பார்த்தோம். தங்க விலையை வைத்து பார்தால், லாபம், விலைவாசி ஏற்றத்தைவிட சிறிது கூட இருக்கும். தங்க முதலீடு வீட்டிற்கு நல்லது என்று நம்பி, “அடாது மழை பெய்தாலும், விடாது தங்க முதலீடு செய்வோம்” என்ற பழக்கத்தை நம்மில் பலர் பின்பற்றுகிறோம். இது நம் நாட்டிற்க்கு நன்மை பயக்காது. காரணம், நாம் தங்கம் வாங்குவதால் நாட்டின் அந்நிய செலவாணி குறைகிறது. தங்கம் லாக்கரில் இருப்பதால், அது முடக்கி வைக்கபட்ட மூலதனமாக உள்ளது. பணம் பெருக வாய்ப்பு இல்லாமல் , பணச்சுழற்சியில் பங்கு பெறாமல் உள்ளது. இது நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு உதவுது இல்லை. இதை ஆங்கிலத்தில் “Gold is an unproductive asset” என்று கூறுகிறார்கள். இதனால்தான் வங்கிகள் தங்க காசு விற்பது தற்போது நடைமுறையில் இல்லை. லாக்கரில் இருக்கும் தங்கத்தை பணச்சுழற்சியில் பங்கு பெறவைக்க அரசாங்கம், இரண்டு புது திட்டம் கொண்டு வருகின்றது. முதல் திட்டம் Gold Monetisation schemes, இதன் படி லாக்கரில் இருக்கும் தங்கத்தை வங்கிகளிடம், கொடுத்து விட வேண்டும், திட்ட முடிவில் தங்க மதிப்பு மற்றும் வட்டி கூடுதலாக பெறலாம். இரண்டாவது திட்டம், அரசாங்க தங்க பத்திரம், தங்கமாக வாங்காமல், தங்கத்திற்கு நிகரான அரசாங்க தங்க பத்திரம் வாங்கி பயன் பெறுவது.
ஆக ஆச்சிகளே, தங்க நகைகளை அணிவதற்கு மட்டும் வாங்கவும். தங்க முதலீட்டிற்க்கு உங்கள் மொத்த முதலீட்டில் சுமார் 10% மட்டும், பரஸ்பர நிதி நிறுவனத்தின் தங்க ETF / நேரடியாக தங்க ETF/ அரசாங்க தங்க பத்திரம், மூலம் மூதலிடு செய்யலாம். தற்பொழுது தங்க விலை இறங்கு முகமாக இருப்பதால், குறைந்த கால எண்ணத்தில் வாங்காமல், நீண்ட கால முதலீட்டில் தங்கம் வாங்கலாம்.
No comments:
Post a Comment