Tuesday, 20 October 2026

ஒருவர் எப்படி வாழ்கிறார்? வெற்றி குறித்த சமூகத்தின் பொய்களும் உண்மையும்

 

🗣️ உரையாடலுக்குத் திறந்திருக்கிறேன்

இத்தொடர் ஒருவழிப் பேச்சாக மட்டும் இருக்கக் கூடாது என்பது என் விருப்பம். பேசிப் பேசித்தான் ஒரு விஷயம் தெளிவாகிறது.

✅ மாணவர்களுக்கான career ஆலோசனை: படிப்பு, வேலை, எதிர்காலத் தேர்வுகள் பற்றி மாணவர்களோடும் பெற்றோரோடும் மனம்விட்டுப் பேசத் தயாராக இருக்கிறேன்.

✅ மன்றங்களில் (forums) உரையாடல்: “மனித யதார்த்தங்கள்” பற்றிய உங்கள் குழுக்கள், அமைப்புகள், மன்றங்களில் பேசவும் கலந்துரையாடவும் தயார்.

✅ திறந்த கலந்துரையாடல்: கையில் உள்ள ஒரு பிரச்சினையை, பல கோணங்களில் பேசி, இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுவதே நோக்கம்.

📩 நேரடித் தொடர்புக்கு: வலைப்பதிவு வழியாகச் செய்தி அனுப்ப

 

✨ இந்தக் கட்டுரையை PDF ஆக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் — ஆஃப்லைனில் படிக்கவும், பகிரவும் ஏற்றது!

மனித யதார்த்தங்கள்

எனது பார்வையில் மனிதர்களும், மனித மனமும்

பகுதி 7 — “ஒருவர் எப்படி வாழ்கிறார் என்பதை, நாம் எதை வைத்து முடிவு செய்வோம்?”

கண்ணன் மீ

செயற்கை நுண்ணறிவு ஆலோசகர் | நிதி ஆய்வாளர் | சிந்தனையாளர்

🎤 Mind Your Mind அமர்வில் ஆற்றிய உரை

இக்கட்டுரை, 19 அக்டோபர் 2026 (திங்கள்) அன்று Mind Your Mind International நடத்திய இணையவழி அமர்வில் ஆசிரியர் ஆற்றிய உரையின் தொகுக்கப்பட்ட வடிவம். உரையுடன், அன்று நடந்த கலந்துரையாடலின் சாரமும், என் ஆய்வுக் குறிப்புகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

 

"ஒருவர் எப்படி வாழ்கிறார் என்பதை, நாம் எதை வைத்து முடிவு செய்வோம்?" — இது ஒரு சுவாரஸ்யமான, அதே சமயம் மிகச் சிக்கலான கேள்வி!

வெற்றி என்பது எப்போது, யாரால், எதை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது? இந்த மாதம் லட்சங்களில் சம்பளம் வாங்குகிற ஒரு நபர், எத்தனை நாட்களுக்கு சமூகத்தால் "வெற்றியாளர்" எனக் கருதப்படுவார்?

இத்தொடரின் முதல் பகுதியில் நாம் பார்த்தது நினைவிருக்கலாம்: "பிரச்சனை நமக்கு வந்தால் நாம் வழக்கறிஞர்; அதுவே அடுத்தவருக்கு வந்தால் நாம் நீதிபதி!" அன்று அந்தத் தீர்ப்புகளுக்குப் பின்னால் இருக்கும் மனித மனவியலைப் பார்த்தோம். இந்தப் பகுதியில், அந்த நீதிபதியின் கையில் இருக்கும் தராசையே (அளவுகோலையே) நாம் ஆராயப் போகிறோம்.

ஒருவரைப் பார்த்தவுடனேயே 'நாம்' சுலபமாக ஒரு தீர்ப்புச் சொல்லிவிடுகிறோம்: "வாழ்க்கையில நல்லா செட்டில் ஆயிட்டாருப்பா!" அல்லது "பாவம், வாழ்க்கையில தோத்துட்டாரு!" நீதிமன்றத்தில் கூட வாதம், சாட்சி, அவகாசம் எல்லாம் உண்டு. ஆனால், நாம் வழங்கும் தீர்ப்புகளுக்கு இவை எதுவுமே தேவையில்லை!

இத்தலைப்பில் உள்ள "நாம்" என்ற சொல்லைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். இக்கட்டுரை, வாழும் 'அவரைப்' பற்றியது மட்டுமல்ல... அவரைப் பார்த்து அவசரத் தீர்ப்பளிக்கும் 'நம்மைப்' பற்றியது!

நகரும் Goalpost: அளவுகோலே நகர்ந்தால்?

என் சொந்த அலுவலக அனுபவத்திலிருந்து தொடங்குகிறேன். பல ஆண்டுகள் software project-களில் இருந்தவன். நாங்கள் ஒரு specification கொடுப்போம். இரண்டு வாரம் கழித்து, “இல்லை சார், இதில் ஒரு மாற்றம் வேண்டும்” என்று நாங்களே வருவோம். உண்மையைச் சொல்கிறேன், மாற்றம் கேட்பது எங்கள் வழக்கம்.

மென்பொருள் குழுத் தலைவர் ஒவ்வொரு முறையும் வாதாடுவார்: “Goalpost-ஐ நகர்த்தாதீங்க சார்!” அவர் சொல்வது நியாயம்தான். நாங்கள் சிரித்துக்கொண்டே ஒப்புக்கொள்வோம். மறுபடியும் நகர்த்துவோம். அலுவலக வாழ்க்கையில் இது சகஜம்; இதில் தவறொன்றுமில்லை.

ஆனால் வாழ்க்கையில், அடுத்தவரின் வெற்றியை அளக்கும் goalpost-ஐயும் நாம் இப்படித்தான் நகர்த்திக்கொண்டே இருக்கிறோம். ஒரு பையனுக்கு சைக்கிள் வாங்குவது கனவு. சைக்கிள் கிடைத்தால் மகிழ்ச்சி எத்தனை நாள்? சில மாதங்கள். பிறகு பைக். பைக் கிடைத்தால் கார். கார் கிடைத்தால் பென்ஸ், BMW. அது கிடைத்தால் டெஸ்லா. பிறகு ரோல்ஸ் ராய்ஸ்.

ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருக்கும் ஒருவரிடம், “சார், நீங்க ஜெயிச்சிட்டீங்களா?” என்று கேட்டுப் பாருங்கள். “இன்னும் இல்லை” என்றுதான் சொல்வார் என்று எனக்குத் தோன்றுகிறது. (அது என் ஊகம் மட்டுமே. இதைப் பற்றி கலந்துரையாடலில் எழுந்த கருத்தை இக்கட்டுரையின் கடைசியில் பார்ப்போம்.)

நாம் அவரைப் பார்த்து “ஜெயித்துவிட்டார்!” என்று தீர்ப்பு எழுதுகிறோம். நேற்றைய வெற்றி இன்றைய சராசரி ஆகிவிடுகிறது. நகரும் தராசை வைத்து ஒருவர் வாழ்க்கையை எடைபோடுவது எவ்வளவு நம்பகமானது?

🧠 உளவியல் சொல்வது: இன்ப ஓடுபொறி (Hedonic Treadmill)

1971-ல் உளவியலாளர்கள் ஃபிலிப் ப்ரிக்மனும் (Brickman) டொனால்ட் கேம்பலும் (Campbell) முன்வைத்த கருத்து: புதிய கார், புதிய பதவி தரும் மகிழ்ச்சி சில மாதங்களில் பழகிவிடுகிறது; மனம் தன் பழைய நிலைக்கே திரும்பிவிடுகிறது. அதனால் அடுத்த இலக்கைத் தேடுகிறோம். Gym-ல் உள்ள treadmill போல ஓடுகிறோம், இடம் மட்டும் மாறுவதில்லை. (இதை நான் முதலில் Maslow-வின் தேவைப் படிநிலை என்று தவறாக நினைத்தேன். Maslow சொன்னது தேவைகள் மேல்நோக்கி வளர்வதை; இங்கே நடப்பது பழகிப்போவதால் வரும் முடிவில்லா ஓட்டம்.)

 நாம் எதைப் பார்க்கிறோம்? எதைப் பார்க்கவில்லை?

சரி, அளவுகோல் நகர்கிறது. அப்படியிருக்க, நாம் எதை வைத்துத்தான் தீர்ப்புச் சொல்கிறோம்? நல்ல சம்பளம், வீடு, CXO பதவி, வெளிநாட்டு வேலை, ஆடம்பரக் கார், பிள்ளைகளின் வெற்றி. இவற்றைத்தான். ஏன் இவற்றையே? ஒரே காரணம்: இவைதான் கண்ணுக்குத் தெரிகின்றன.

ஒருவருக்கு இரவு தூக்கம் வருகிறதா, வீட்டில் அமைதி இருக்கிறதா, EMI நெருக்கடி இருக்கிறதா, மனதில் என்ன கவலை இருக்கிறது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. தெரியாததைப் பற்றி நாம் யோசிப்பதே இல்லை; தெரிவதை வைத்து முடிவு சொல்லிவிடுகிறோம்.

Halo Effect (ஒளிவட்ட விளைவு): ஒருவரிடம் ஒரு பிரகாசமான அம்சத்தைப் பார்த்தால் (பெரிய பதவி, விலை உயர்ந்த கார்), மற்றதெல்லாம் நன்றாகவே இருக்கும் என்று நம் மனம் நம்பிவிடும்.

Fundamental Attribution Error (அடிப்படைக் காரணக் கணிப்புப் பிழை): நான் தாமதமாக வந்தால் “traffic”. அவர் தாமதமாக வந்தால் “பொறுப்பில்லாதவர்”. என் நடத்தைக்குச் சூழ்நிலை; அடுத்தவர் நடத்தைக்கு அவர் குணம்.

 

📊 ஆய்வு சொல்கிறது: தனக்கு ஒன்று, அடுத்தவருக்கு ஒன்று

LinkedIn நிறுவனம், YouGov புள்ளிவிவர நிறுவனம் மூலம் 2017-ல் நடத்திய ஆய்வில் (16 நாடுகளில் 18,000-க்கும் மேற்பட்டோர்; இந்தியாவில் சுமார் 1,000 பேர்), இந்தியர்களில் 72% பேர் “மகிழ்ச்சியாக இருப்பதே வெற்றி” என்றனர். சம்பள உயர்வே வெற்றி என்றவர்கள் 22% மட்டுமே. ஆனால் அதே நாம், அடுத்தவரைப் பற்றிப் பேசும்போது “அவர் சம்பளம் எவ்வளவு?” என்றுதான் கேட்கிறோம். தனக்கு ஒரு அளவுகோல், அடுத்தவருக்கு இன்னொரு அளவுகோல்.

 நமக்குத் தெரியாத 70 சதவீதம்

சமீபத்தில் WhatsApp-ல் ஒரு pie chart பார்த்தேன். ஒருவரைப் பற்றி நமக்குத் தெரிந்தது ஒரு 10, 15 சதவீதம்; தெரியாதது கிட்டத்தட்ட 70 சதவீதம். இந்த எண்கள் யாரும் அளந்தவை அல்ல, அறிவியல் ஆய்வும் அல்ல. ஆனால் கருத்து சரி. அது கேட்கும் கேள்வி இதுதான்: தெரியாத 70 சதவீதத்தை வைத்துக்கொண்டு, தெரிந்த 10 சதவீதத்தை மட்டும் வைத்து ஏன் தீர்ப்புச் சொல்கிறோம்?

இங்கே புள்ளியியல் தெரிந்த ஒருவர் எழுந்து சொல்லலாம்: “ஒரு சோறு பதம்! பானையில் ஒரு சோற்றைப் பிழிந்து பார்த்தால் முழுப் பானையும் வெந்ததா என்று தெரிந்துவிடும். தேர்தலில் கூட 4 கோடி பேரிடம் கேட்பதில்லை; 4,000 பேரிடம் கேட்டு யார் ஜெயிப்பார் என்று சொல்லிவிடுகிறார்கள். அப்படியிருக்க, ஒரு மனிதனின் 10 சதவீதத்தைப் பார்த்து அவரைப் புரிந்துகொள்ளக் கூடாதா?”

நியாயமான கேள்வி. நானே யோசித்தேன். உண்மைதான், sampling வேலை செய்யும். ஆனால் மூன்று நிபந்தனைகளோடு:

•        ஒன்று, ஒரே மாதிரி இருக்க வேண்டும்: பானையில் எல்லா அரிசியும் ஒரே மாதிரி, ஒரே சூட்டில் வேகும். ஒரு மனிதன் அப்படி இல்லை. வீட்டில் ஒருவர், அலுவலகத்தில் ஒருவர், நண்பர்களிடம் இன்னொருவர்.

•        இரண்டு, random ஆக எடுக்க வேண்டும்: தேர்தல் கணிப்பில் அந்த 4,000 பேரும் random ஆகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நாம் ஒருவரைப் பார்க்கும் அந்த 10 சதவீதம் random அல்ல; அவர் நமக்குக் காட்ட விரும்பும் பகுதிதான் அது. அதுவும் மெருகேற்றியது.

•        மூன்று, கேள்வி சிறியதாக இருக்க வேண்டும்: தேர்தல் கணிப்பு கேட்பது ஒரே ஒரு கேள்வி: “யாருக்கு வாக்கு?” ஆனால் “ஒருவர் எப்படி வாழ்கிறார்” என்பது ஒரு கேள்வி அல்ல. வருமானம், கடன், உடல்நலம், குடும்பம், மனம் எல்லாம் சேர்ந்தது. அதோடு, சரியான முறையில் எடுத்த தேர்தல் கணிப்புகளும் சில சமயம் தவறுகின்றன என்பதும் நமக்குத் தெரியும்.

எந்த நாட்டுத் தலைவரையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் காட்டும் ஒவ்வொரு படமும், உடையும், சிரிப்பும் கவனமாகச் செதுக்கப்பட்ட பிம்பம். அது அவர்களின் உண்மையான அன்றாட வாழ்க்கை அல்ல என்பது நமக்குத் தெரியும். ஆனால் தலைவர்கள் மட்டுமல்ல, நாமும் அப்படித்தான். LinkedIn படம், WhatsApp status, விழாவில் சிரிப்பு. நாம் மற்றவர்களுக்குக் காட்டுவது நம் மெருகேற்றிய பகுதி.

🧠 உளவியல் சொல்வது: முன் மேடை, பின் மேடை (Front Stage, Back Stage)

சமூகவியலாளர் எர்விங் காஃப்மன் (Erving Goffman) இதை இப்படிச் சொன்னார்: நாம் மற்றவர்கள் முன் ஒரு மேடை நடிப்பையே காட்டுகிறோம் (முன் மேடை); உண்மையான நாம் திரைக்குப் பின்னால் இருக்கிறோம் (பின் மேடை). நாம் பார்ப்பது அவரது முன் மேடையை மட்டுமே.

 ஒருவரின் நடத்தையைப் பற்றி நாம் சொல்லலாம். ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி முடிவு சொல்ல முடியாது.

இங்கே நான் முழுக்க மறுக்கவில்லை. சில நொடிகளில் ஒருவரின் சில பண்புகளை நாம் ஓரளவு சரியாகக் கணிக்கிறோம் என்று உளவியலில் “thin slices” ஆய்வுகள் (Ambady & Rosenthal) சொல்கின்றன. “அவர் பணியாளரிடம் மரியாதையில்லாமல் பேசினார்” என்று நாம் பார்த்த நடத்தையைச் சொல்லலாம்; அது சரியான கணிப்பு. ஆனால் “அவர் வாழ்க்கையில் தோற்றவர்” என்பது, நாம் பார்க்காத 70 சதவீதத்தைப் பற்றிய தீர்ப்பு.

ஆனால் முடிவு எடுத்துத்தானே ஆக வேண்டும்?

நான் junior engineer ஆக இருந்தபோது ஒருமுறை எங்கள் HR head-உடன் விவாதம் செய்தேன். “ஒரே ஒரு கேள்வியை வைத்து ஆளை எடைபோட முடியாது; குறைந்தது 10 கேள்வியாவது வேண்டும்” என்றேன். அவர் சிரித்தார். “கண்ணன், 5 கேள்வியோ 10 கேள்வியோ 50 கேள்வியோ, கடைசியில் முடிவு yes அல்லது no தானே!”

அவர் சொன்னது சரி. முடிவு இரண்டு தேர்வுதான்; ஆளை எடுப்பீர்கள் அல்லது எடுக்க மாட்டீர்கள். ஆனால் நான் சொன்னதும் சரி என்றுதான் இப்போது நினைக்கிறேன்: முடிவு yes/no என்ற இரண்டு தேர்வாக இருந்தாலும், அதற்குப் பின்னால் இருக்கும் ஆதாரம் மெல்லியதாக இருக்கலாம். ஒரு மருத்துவரும் இறுதியில் “அறுவை சிகிச்சை செய்வதா, வேண்டாமா” என்றுதான் முடிவு செய்கிறார்; அதற்காக ஒரே ஒரு அறிகுறியை வைத்து முடிவு செய்ய மாட்டார்.

இன்னொன்றையும் கவனியுங்கள். interview-ல் இரண்டு பக்கமும் நடிக்கிறார்கள். வேட்பாளர் தன் சிறந்த பகுதியை மட்டும் காட்டுகிறார்; interviewer-உம் 10 நிமிடம்தான் பார்க்கிறார். பத்து நிமிடம் இருவர் நடிக்கிறார்கள், ஒருவர் முடிவு சொல்கிறார்.

🧠 ஆய்வுகள் சொல்வது: Interview-ன் நம்பகத்தன்மை

வேலைத் தேர்வு பற்றிய ஆய்வுகள் (எ.கா., Schmidt & Hunter, 1998) பொதுவாகக் காட்டுவது: திட்டமிடாத இயல்பான interview-ஐ விட, எல்லோரிடமும் அதே கேள்விகளைக் கேட்டு ஒரே அளவுகோலில் மதிப்பிடும் structured interview நம்பகமானது; வேலையைச் செய்து காட்டச் சொல்வது (work sample) இன்னும் நம்பகமானது. interviewers பெரும்பாலும் முதல் சில நிமிடங்களிலேயே ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, மீதி நேரத்தை அந்த முடிவை உறுதிப்படுத்தவே செலவிடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது; இதற்கு Confirmation Bias (உறுதிப்படுத்தும் சார்பு) என்று பெயர்.

 எனவே முடிவு எடுத்தே ஆக வேண்டிய இடங்களில், வேலைக்கு ஆள் எடுப்பது போல, நாம் எடுக்கத்தான் வேண்டும். ஆனால் அதை “இறுதித் தீர்ப்பு” என்று அல்ல, “தற்போதைய கருதுகோள்” என்று கையாளுங்கள். பல கேள்விகள், பல பேர், வேலையைச் செய்து பார்ப்பது என ஆதாரத்தைக் கூட்டுங்கள். ஆனால் தெருவில் ஒருவரைப் பார்த்து “தோத்துட்டாரு” என்று நாம் சொல்லும்போது, யார் நம்மைக் கேட்டார்கள்? அங்கே yes/no என்று முடிவு எடுக்க வேண்டிய கட்டாயமே இல்லை.

முடிவு தேவைப்படும் இடத்தில் முடிவு எடுங்கள். தீர்ப்பு தேவையில்லாத இடத்தில் தீர்ப்புச் சொல்லாதீர்கள்.

மதிப்பெண் சமூகம்: தீர்ப்பையே எண்களிடம் கொடுத்துவிட்டோம்

முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லாதபோதும் ஏன் தீர்ப்புச் சொல்கிறோம்? இன்னொரு மாற்றமும் நடந்திருக்கிறது: தீர்ப்பளிக்கும் வேலையையே இன்று நாம் எண்களிடம் கொடுத்துவிட்டோம். Google-ல் எத்தனை star? Instagram-ல் எத்தனை likes? LinkedIn-ல் எத்தனை connections?

Google rating-உம் நிபுணர்களும்

ஒரு மருத்துவர், ஒரு உளவியலாளர், தன் வாழ்நாள் முழுவதும் படித்து, மனிதர்களின் மனதைப் புரிந்து சேவை செய்கிறார். இன்று அவரை மதிப்பிடுவது எது? “Google-ல் உங்களுக்கு எத்தனை star?” 5-க்கு 4.8 வாங்குவதற்காக reviews-ஐப் பார்த்துப் பார்த்துக் கவலைப்படும் சில நிபுணர்களும் இருக்கிறார்கள். மன அமைதிக்கு வழிகாட்ட வேண்டியவரே ஒரு digital எண்ணுக்கு அடிமையாகும் விசித்திரம். இது அவர்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் நடப்பதுதான்.

தோல் மருத்துவமனையின் பலகை

இதற்கு நேர் எதிரான ஒரு காட்சியை நான் பார்த்திருக்கிறேன். புகழ்பெற்ற ஒரு தோல் மருத்துவமனை. மருத்துவர் மிகத் திறமைசாலி, எப்போதும் கூட்டம் அலைமோதும். ஆனால் வரவேற்பு அறையில் ஒரு பெரிய பலகை. எனக்கு நினைவிருக்கும் வரை, அதில் இப்படி எழுதியிருந்தது: “நாங்கள் சேவையைத்தான் தருகிறோம், பொருளை விற்கவில்லை. அதனால் எங்களை Google-லோ சமூக வலைத்தளங்களிலோ rating செய்ய வேண்டாம்.” (வார்த்தைக்கு வார்த்தை இதுவா என்று உறுதியாகத் தெரியாது; கருத்து இதுதான்.)

தன் சேவையின் தரத்தை வெளியே இருக்கும் மூன்றாம் மனிதனின் star தீர்மானிக்கக் கூடாது என்று அவர் முடிவு செய்திருந்தார். அவர் rating-ஐப் பார்த்துப் பயப்படுகிறாரா, அல்லது அதை நம்பாமல் தன் வேலை நிறைவையே நம்புகிறாரா என்பது எனக்குத் தெரியாது. இதுதான் இன்றைய பேச்சின் சாரம்: ஒருவர் மனதுக்குள் என்ன நினைக்கிறார் என்பது நமக்குத் தெரியாது; அவர் எடுத்த நிலைப்பாடு மட்டும்தான் நமக்குத் தெரியும்.

WhatsApp குழுக்களும் HbA1c-உம்

60 வயதைக் கடந்தவர்களின் WhatsApp குழுக்களைக் கவனித்திருக்கிறீர்களா? முன்பெல்லாம் போட்டி, “உங்கள் மகன் அமெரிக்காவில் என்ன வேலை?” என்பது. இப்போது ஒருவர் சொல்கிறார்: “எனக்கு HbA1c 7.2 ஆகக் குறைந்துவிட்டது!” அடுத்தவர் பெருமையோடு: “எனக்கு 6.5தான் வந்திருக்கிறது, நான்தான் winner!”

30 வயதில் சம்பளத்தை வைத்துப் போட்டி போட்ட மனம், 60 வயதில் இரத்த சர்க்கரை அளவை வைத்துப் போட்டி போடுகிறது. அளவுகோல் மாறியது, போட்டி மட்டும் மாறவில்லை. (தவறு அளவீட்டில் இல்லை; HbA1c உண்மையிலேயே முக்கியம். அதை வைத்துப் பெருமைப் போட்டி வைப்பதில்தான் தவறு.)

மூன்று தளங்களில் மூன்று கதைகள்

வெளியே இருந்து நாம் பார்ப்பது ஒன்று; உள்ளே நடப்பது இன்னொன்று. இதை மூன்று தளங்களில் பார்க்கலாம்: உலக அளவில் ஒன்று, என் அன்றாட வாழ்வில் ஒன்று, ஊர் அளவில் ஒன்று.

கதை 1: உலகத் தளம் — அதிகாரத்தின் உச்சத்தில் ஒருவர்

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றின் முப்படை அதிகாரம், கோடிக்கணக்கான சொத்து, உலகை ஆட்டிப்படைக்கும் செல்வாக்கு. நாம் பார்த்துச் சொல்வோம்: “இவர்தான் உச்சக்கட்ட வெற்றியாளர்!”

ஆனால் அவர் நோபல் பரிசு பற்றிப் பொதுவெளியில் பலமுறை பேசியதாகச் செய்திகளில் படித்திருக்கிறோம். இரவில் அவர் மனதுக்குள் என்ன ஓடுகிறது என்பது நமக்குத் தெரியாது; அதைச் சொல்ல நமக்கு உரிமையும் இல்லை. ஆனால் ஒன்று தெரிகிறது: உலகையே ஆட்டிப்படைக்கும் அதிகாரம் இருந்தும், ஒரு சிறிய குழுவின் அங்கீகாரம் வேண்டும் என்ற பேச்சு. அதிகாரம் நிறைவைத் தரவில்லை; மூன்றாம் மனிதனின் அங்கீகாரம் அவருக்கும் வேண்டியிருக்கிறது.

கதை 2: அன்றாடத் தளம் — படைப்பவரின் திருப்தி

ஒரு எழுத்தாளர். இரவு பகலாக உழைத்து, தன் சிந்தனையைப் பிழிந்து ஒரு கட்டுரையோ புத்தகமோ எழுதுகிறார். வெளியிடுகிறார். சமூக ஊடகங்களில் 10 likes கூட வரவில்லை, பெரிதாக விற்பனையும் இல்லை. வெளியே இருப்பவர்கள் சொல்வார்கள்: “ஐயோ, யாருமே like போடலையே, forward பண்ணலையே... இவர் தோத்துட்டார்.”

இது என் கதையும்தான். நான் கட்டுரைகள் எழுதுகிறேன்; AI பற்றியும் SIP பற்றியும் புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஒரு கட்டுரைக்கு மூன்று மணி நேரம், சில நேரம் மூன்று நாள் ஆகலாம். புத்தகத்துக்கு மூன்று மாதம். யாரும் படிக்காவிட்டாலும், No Likes, No Forwards, No Engagement என்றாலும், எழுதி முடித்ததும் “நன்றாக எழுதிவிட்டோம், நினைத்தது நடந்தது, நேரம் நன்றாகச் செலவானது” என்று தோன்றினால் அதற்கு ஈடு இணையே இல்லை. வெளியே இருந்து பார்த்தால் அது “தோல்வி”; உள்ளே அது இரவு நிம்மதியான தூக்கம்.

கதை 3: ஊர்த் தளம் — 65 வயதில் ஒரு தேர்தல்

ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். 65 வயதான ஒருவர், சூழ்நிலை காரணமாக, ஒரு சங்கத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். முடிவு வருகிறது. எதிர்த்து நின்றவர் அமோக வெற்றி. இவர் தோல்வி.

ஊர் என்ன சொல்லும்? “அடடா... 65 வயசுல போயி தோத்துட்டாரே! என்ன பரிதாபம்!” தோல்வி முத்திரை தயார். ஒட்டுவதற்கு பெவிகால் கூடத் தேவையில்லை.

ஆனால் தோற்றவரின் உள்மனசு என்ன சொல்கிறது தெரியுமா? “அப்பாடா... நல்லவேளை தோத்தோம்! 65 வயசுல சங்கத்துல ஓடிக்கிட்டு, மைக்ல கத்திக்கிட்டு, பேச்சுக்குப் பேச்சு காலாய்ச்சிக்கிட்டு எப்படி இருக்கப் போறோம்? தப்பிச்சோம்டா சாமி!” இப்போது அக்கடான்னு உட்கார்ந்து, பேரக் குழந்தைகளோடு நேரம் செலவழிக்கலாம், அடுத்த கட்டுரையை எழுதலாம். ஊர் எதை “தோல்வி” என்று முத்திரை குத்தியதோ, அதை அவர் தன் வாழ்க்கையின் மிகப்பெரிய விடுதலையாக உணர்கிறார்.

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். இவர் தோற்றவரா? அல்லது நாம்தான் நம் அளவுகோலால் தவறாக முடிவு செய்தோமா?

Labeling (முத்திரை குத்துதல்): ஒருமுறை ஒட்டிய முத்திரை, அந்த மனிதரையே அந்த முத்திரையாகப் பார்க்க வைக்கிறது. தேர்தல் தோல்வி ஒரு நிகழ்வு; “தோல்வியாளர்” என்பது நாம் ஒட்டிய அடையாளம்.

தலைவர், எழுத்தாளர், வேட்பாளர். மூவரையும் நாம் வெளியே இருந்து எடைபோட்டோம். மூவரின் உள்ளே இருந்தது வேறு.

ஏன் இப்படி எடைபோடுகிறோம்? ஏன் தீர்ப்புக்குப் பயப்படுகிறோம்?

நாய் துரத்தினால் vs கிணற்றில் குதித்தால்

இயற்கை நமக்குத் தந்த அடிப்படை உணர்வு, உயிர் காக்கும் இயல்பூக்கம் (Survival Instinct). தெருவில் நடக்கும்போது ஒரு வெறிநாய் துரத்தினால் என்ன செய்வோம்? “நான் யார், என் அந்தஸ்து என்ன” என்றெல்லாம் யோசிக்க மாட்டோம். உயிருக்குப் பயந்து தொலைதூரம் ஓடுவோம்.

ஆனால், அதே மனிதரிடம் சமூகம் வந்து, “இந்தக் கிணற்றில் குதித்தால் உனக்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன், நாளிதழில் உன் படம் போட்டுப் பாராட்டுகிறேன்” என்றால்? உயிருக்கு ஆபத்தான காரியத்தையும் செய்யத் துணிகிறான். பணத்துக்கும் புகழுக்கும் உயிரைப் பணயம் வைக்கிறோம். ஏன் அப்பொழுது Survival Instinct காணாமல் போகிறது?

நம் முன்னோர்களுக்குக் குழுவின் ஏற்புதான் உயிர்; குழு ஒதுக்கினால் ஆபத்து. அந்தப் பழைய பயம்தான் இன்று “நாலு பேர் என்ன நினைப்பாங்க?” என்ற வடிவில் ஓடுகிறது. “நாம் மற்றவர்கள் பார்வையில் வெற்றி பெற்றவராகத் தெரிய வேண்டும்” என்ற சமூக அழுத்தம்தான் காரணம். அதனால்தான் நாம் தீர்ப்புக்கும் அஞ்சுகிறோம், தீர்ப்பும் சொல்கிறோம்.

🧠 உளவியல் சொல்வது: சேர்ந்திருக்கும் தேவை (Need to Belong)

ரோய் பாமைஸ்டரும் (Baumeister) மார்க் லியரியும் (Leary) 1995-ல் முன்வைத்த கருத்து: மற்றவர்களோடு சேர்ந்திருக்கவும், அவர்களால் ஏற்கப்படவும் வேண்டும் என்பது மனிதரின் அடிப்படைத் தேவை. நிராகரிப்பு நம் மனதைக் கடுமையாகப் பாதிக்கிறது.

 Square 1 விளையாட்டு

வாழ்க்கை ஒரு தாயக்கட்டம் போன்றது. 3 வயதில் ஒரு குழந்தை தடுமாறி நடக்கும்போது, சுற்றி இருக்கும் நாலைந்து பேர் கைதட்டிப் பாராட்டுவார்கள். 20 முதல் 50 வயதில் உலகத்தை வெல்லப்போவதாக ஓடுகிறோம்: பங்களா, கார், பதவி. 70 வயதில் மீண்டும் தடுமாறி நடக்கும்போது, சுற்றி இருப்பவர்கள் கைபிடித்து அழைத்துச் செல்கிறார்கள். 3 வயதில் எங்கே தொடங்கினோமோ, அதே Square 1-க்குத்தான் 70 வயதிலும் வந்து சேர்கிறோம். நடுவில் ஓடிய ஓட்டமும் ஏறிய படிகளும் எங்கே?

10 வினாடி நினைவுச் சோதனை

நீங்களும் முயன்று பாருங்கள். பதில் சொல்ல வேண்டாம், மனதுக்குள் மட்டும்.

1. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் சிறந்த தொழிலதிபராக விருது வாங்கிய 5 பேரின் பெயர்களை உங்களால் சொல்ல முடியுமா?

2. உங்கள் வாழ்க்கையில் மிகக் கடுமையான கஷ்டத்தில் இருந்தபோது, ஓடி வந்து உதவி செய்த 3 நண்பர்கள் அல்லது உறவினர்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா?

முதல் கேள்விக்குப் பெரும்பாலோருக்குப் பதில் தெரியாது. இரண்டாவதற்கு உடனே சொல்லிவிடுவீர்கள். உலகம் தரும் சாதனைகளும் பட்டங்களும் 10 வினாடியில் மறந்துவிடும். நாம் மனிதர்களிடம் காட்டிய அன்பும், அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய நேர்மறைத் தாக்கமும் மட்டுமே காலத்தைக் கடந்து நிற்கும். அப்படியானால், ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்குக் கடைசியில் மிஞ்சும் சாட்சி எது? அவர் வாங்கிய கார் அல்ல; அவர் செய்த உதவிதான்.

முடிவாக: “எனக்குத் தெரியாதது என்ன?”

அடுத்த முறை ஒருவரைப் பார்த்து “செட்டில் ஆயிட்டாரு!” என்றோ “தோத்துட்டாரு!” என்றோ சொல்லத் தோன்றினால், ஒரே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்: “எனக்குத் தெரியாதது என்ன?” ரோல்ஸ் ராய்ஸுக்குள் இருப்பவரின் இரவு நமக்குத் தெரியாது. தேர்தலில் தோற்றவரின் அக்கடா நிம்மதி நமக்குத் தெரியாது. எழுத்தாளரின் மௌனமான திருப்தி நமக்குத் தெரியாது. அதனால் மூன்று விஷயங்கள்:

1. முத்திரை குத்தும் முன் கேளுங்கள்: “எனக்குத் தெரியாதது என்ன?”

2. எண்ணைப் பார்க்காதீர்கள், ஆளைப் பாருங்கள். Star, like, சம்பளம், பதவி இவை மனிதரை அளக்காது.

3. யாரையாவது “தோத்துட்டாரு” என்று தவறாக நினைத்திருந்தால், இன்றே ஒரு போன் பண்ணிப் பேசுங்கள்.

இறுதியாக, 

இதுவரை “ஊர் எப்படி எடைபோடுகிறது” என்று பேசினோம். இனி என் சொந்தக் கருத்து: ஊர் என்ன நினைக்கிறது என்பதைவிட, நாம் நம்மைப் பற்றி எப்படி உணர்கிறோம் என்பதுதான் முக்கியம்.

ஊரை முழுவதுமாக உதறித் தள்ளவும் வேண்டாம். குடும்பமும் நண்பர்களும் சொல்லும் அன்பான ஆலோசனை நமக்குத் தேவை. ஆனால் தீர்ப்பளிக்கும் உரிமையை அவர்கள் கையில் கொடுக்க வேண்டாம். நான் மற்றவர்களுக்காக முழுவதுமாக வாழ முடியாது; வாழ வேண்டிய அவசியமும் இல்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நாம் நேரத்தைக் கடத்தியாக வேண்டும். நமக்குப் பிடித்தபடி, நாம் விரும்பியபடி அந்த நேரம் கழிந்தால், அதுவும் ஒரு வெற்றிதானே?

ஆபீஸ் வேலையைத் திருப்தியாக முடிப்பது, மேலதிகாரி பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும். வீட்டின் தலைவி “இன்று நன்றாக, புதிதாக, வித்தியாசமாகச் சமைத்தோம்” என்று நினைக்கும்போது, கணவன் “நல்லாயில்லை” என்று சொன்னால் கூட, அதைத் தாண்டி நிற்கும் மனநிறைவு. இவை சிறியவை போலத் தெரியலாம். “இதெல்லாம் வெற்றியா?” என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு: பதில் சொல்லும் முன், முதல் வரியிலிருந்து கடைசி வரை படித்துவிட்டுப் பதில் சொல்லுங்கள். மனநிறைவே, மனநிம்மதியே வெற்றி என்பேன் நான்.

சிக்கல் தீர்ந்ததா? இல்லை... தேடுங்கள்! வெளியே அல்ல; மற்றவர்களைத் தவறான அளவுகோல்களால் மதிப்பிடுவதை நிறுத்திவிட்டு, உள்ளே!

“வெற்றி என்பது ஊர் மெச்சுவது அல்ல... உன் மனம் மெச்சுவது!”

கலந்துரையாடலில் எழுந்த கேள்விகளும் என் பதில்களும்

அமர்வில் உரை சுமார் 45 நிமிடம்; அதன் பிறகு ஒரு மணி நேரம் கலந்துரையாடல். பொதுவாக 5, 10 நிமிடம்தான் கேள்வி பதில் எதிர்பார்ப்பேன்; இங்கே ஒவ்வொருவரும் தங்கள் பார்வையைப் பகிர்ந்தார்கள். ஒருதலைப் பேச்சாக இல்லாமல், ஒரு உரையாடலாக அமைந்தது. அங்கே எழுந்த முக்கியமான கருத்துகளையும் அவற்றுக்கு என் பதில்களையும் பெயர்கள் இல்லாமல் இங்கே பகிர்கிறேன். ஒத்துக்கொள்ளாத இடங்களும் உண்டு; அதுவே நல்ல விவாதத்தின் அடையாளம்.

அமர்வில் எழுந்த கருத்துகள்

❓ “ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பவர் மகிழ்ச்சியாகவும் இருக்கலாமே?”

இருக்கலாம்; நான் மறுக்கவில்லை. ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ நான் தீர்ப்புச் சொல்லவில்லை. என் வாதம் வேறு: ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பவர் எப்போதும் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார் என்று நாம், அதாவது சமூகம், அனுமானிக்கிறது. அவர் மன அமைதியோடு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். நமக்குத் தெரியாது. அந்த அனுமானத்தை மறுபரிசீலனை செய்வதுதான் நான் சொல்ல வந்தது.

❓ “புகழும் பெருமையும் வாழ்க்கையின் ஒரு பகுதிதானே? அது தேவைதானே?”

இது அமர்வில் அதிகம் விவாதிக்கப்பட்ட இடம். என் பார்வை: புகழும் பெருமையும் இயற்கையாக நம்மிடம் இருக்கும் பொருட்கள் அல்ல; அவை பிறர் சொல்லும் கதைகள் (narrative). ஒருவரைப் பற்றி மற்றவர்கள் சொல்லும் கதைதான் அவரது புகழ். உலகை ஆட்டிப்படைக்கும் ஒரு தலைவருக்கே நோபல் போன்ற வெளி அங்கீகாரம் தேவைப்படுகிறது என்பது அதே கதையின் இன்னொரு வடிவம்தான்; அவருக்கும் வெளியிலிருந்து யாராவது ஆதரிக்க வேண்டியிருக்கிறது. அது வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்று கலந்துரையாடலில் சிலர் சொன்னார்கள். உண்மைதான். நான் சொல்வது, அவை கதைகள் என்பதை உணர்ந்து அவற்றைக் கையாளுங்கள் என்பதே. நம்மைச் சுற்றி எப்போதும் கதைகள் பொழிந்துகொண்டே இருக்கின்றன; அவை எல்லாம் தனிமனிதர்களின் narrative.

அமர்வில் ஒரு பெண்மணி இந்த narrative என்ற பார்வையை உடனே ஏற்றுக்கொண்டார்; சிலருக்கு ஜீரணிப்பது கடினமாக இருந்தது. இது ஒரு கோணம் (lens) மட்டுமே; இதை யார் மீதும் திணிக்கவில்லை. இதில் சரி, தவறு என்று எதுவும் இல்லை. நான் இதைச் சரியாகச் சொன்னேனா, அல்லது மனதுக்குள் யாராவது “இவர் ஒரு முட்டாள்” என்று நினைக்கிறார்களோ என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. அதுவும் நான் அறியாத அந்த 70 சதவீதத்தில் ஒன்றுதான்!

❓ “திருவள்ளுவரே புகழைப் போற்றியிருக்கிறாரே?”

ஆம், வள்ளுவர் புகழுக்கு என்றே ஓர் அதிகாரம் ஒதுக்கியிருக்கிறார். நான் அவரைக் குறை சொல்லவில்லை; அவர் மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு. அவர் எழுதியது அவர் காலத்தின் அறக் கருத்து; அதுவும் ஒரு கதையாடல்தான் (narrative) என்பது என் பார்வை. இந்த இடத்தில் நாம் ஒத்துப்போகவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். இதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

❓ “ஒருவர் எப்படி வெற்றி பெற்றார், என்னென்ன தடைகளைக் கடந்தார், என்ன தியாகம் செய்தார் என்பதையும் பார்க்க வேண்டாமா?”

நல்ல கோணம்தான்; அது இன்னொரு சிறந்த தலைப்பாக அமையும். இந்த உரையின் கேள்வி வேறு: நாம் வெளியே இருந்து ஒருவரை எப்படி மதிப்பிடுகிறோம் என்பது. அந்தப் பாதைக் கதைகளிலும் ஒரு எச்சரிக்கை உண்டு. வெற்றி பெற்றவர்களின் கதைகள்தான் சொல்லப்படுகின்றன; அதே தியாகங்களைச் செய்தும் வெற்றி பெறாதவர்களின் கதைகள் சொல்லப்படுவதில்லை (இதற்கு Survivorship Bias என்று பெயர்). அதனால் அவற்றை மதிப்பீட்டுக்கான அளவுகோலாக அல்லாமல், கற்றுக்கொள்வதற்கான கதைகளாகக் கொள்ளலாம்.

வாசகர்களுக்காக நான் எதிர்பார்த்த சில கேள்விகள்

❓ “இது புளிக்கும் திராட்சை (Sour Grapes) சமாதானம் இல்லையா? தோற்றவர்கள் சொல்லும் ஆறுதல்?”

Sour Grapes என்பது கிடைக்காததை “எனக்கு வேண்டாம்” என்று மறுப்பது. நான் சொன்ன 65 வயது வேட்பாளர் உதாரணத்தில், அவர் அதை முதலில் விரும்பவே இல்லை; சூழ்நிலையால் நிறுத்தப்பட்டார். தவிர, இந்தப் பேச்சு என் தோல்விகளை நியாயப்படுத்துவது அல்ல; மற்றவரை நாம் எப்படித் தவறாக எடைபோடுகிறோம் என்பது பற்றியது. முயற்சி செய்வதும் இலக்கு வைப்பதும் தவறில்லை; அடுத்தவர் கையில் நம் மதிப்பைக் கொடுப்பதுதான் தவறு.

❓ “வெளிப்புற அளவுகோல்கள் எல்லாமே தவறா? ஆரோக்கியம், வருமானம் உண்மையிலேயே முக்கியம்தானே?”

முக்கியம்தான். HbA1c-ஐ நான் குறை சொல்லவில்லை; அது ஒரு மருத்துவ அளவீடு. அதை வைத்துப் போட்டி போடுவதைத்தான் சொன்னேன். அளவீடு ஒரு கருவி. அதை வைத்து ஒருவரின் வாழ்க்கை முழுவதையும் “வெற்றி/தோல்வி” என்று முத்திரை குத்துவதுதான் பிழை.

❓ “சமூக அழுத்தத்தை மீறி மன அமைதியைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு சாத்தியம்?”

மூன்று படிகள். ஒன்று, தீர்ப்புச் சொல்லும் முன் “எனக்குத் தெரியாதது என்ன?” என்று கேட்பது. இரண்டு, நாம் செய்த ஒரு வேலையை, யாரும் பாராட்டாவிட்டாலும், நாமே ஒப்புக்கொள்ளும் பழக்கம்; என் கட்டுரை அனுபவம் போல. மூன்று, “நான் இதை யாருக்காகச் செய்கிறேன்?” என்று அவ்வப்போது கேட்டுக்கொள்வது.

❓ “மூத்த வயதில் வரும் மனமாற்றங்களை எப்படி எதிர்கொள்வது?”

நான் உளவியல் நிபுணர் அல்ல; என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். வாழ்க்கை Square 1-க்குத் திரும்பும்போது, சாதனைகளைவிட உறவுகள்தான் மிஞ்சும். அதனால் இப்போதிருந்தே நமக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கு, ஒரு நட்பு வட்டம், ஒரு பங்களிப்பு என்று வைத்துக்கொள்வது நல்லது. தேவைப்பட்டால் தகுதிபெற்ற உளவியல் நிபுணரின் ஆலோசனையையும் நாடலாம்.

“தீர்ப்புச் சொல்லும் முன் ஒரு கணம்: எனக்குத் தெரியாதது என்ன?”

ஆதாரங்கள்

#1 இந்தியர்களின் “வெற்றி” பற்றிய கருத்து (LinkedIn–YouGov, 2017)

ஆதார அமைப்பு: LinkedIn ஆய்வு (YouGov புள்ளிவிவரம்), அக்டோபர் 12 – நவம்பர் 3, 2017; 16 நாடுகள், 18,191 பெரியவர்கள், இந்தியாவில் 1,004 பேர். (செய்தித்தள வழி இரண்டாம்நிலை ஆதாரம்)

இணைப்பு: https://www.socialsamosa.com/2018/03/linkedin-survey-reveals-indians-rank-happiness-and-health-over-money

#2 இன்ப ஓடுபொறி (Hedonic Treadmill)

ஆதார அமைப்பு: Brickman & Campbell (1971), “Hedonic Relativism and Planning the Good Society”; விளக்கத்துக்கு Wikipedia.

இணைப்பு: https://en.wikipedia.org/wiki/Hedonic_treadmill

 📚 மனித சுபாவங்கள்! எனது பார்வையில்

நான் நடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்கள் — அவர்களின் சுபாவங்கள் உண்மையில் நமது எண்ணங்களின் பிரதிபலிப்பா? மாறுபட்ட முகங்களில் எது அசல்? எது போலி? நாம் காண்பிப்பது எது? நம் அன்றாட வாழ்க்கையைச் சற்றே கவனித்து, நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ளும் ஒரு முயற்சியே இந்த 15 அத்தியாயங்கள் கொண்ட தொடர்.

🔗 பகுதி 1: நமக்கு வந்தால் வழக்கறிஞர், அடுத்தவருக்கு நீதிபதி

🔗 பகுதி 2: வெற்றி எனது, தோல்வி உனது

🔗 பகுதி 3: சொல்வது எளிது. செய்வது கடினம்

🔗 பகுதி 4: பேச்சில் புரட்சி, செயலில் சமரசம்

🔗 பகுதி 5: நம்புவது உண்மையா, நமக்கு சாதகமானதா!

🔗 பகுதி 6: கனவை விற்கிறார்கள், மாயையில் வாங்குகிறோம்!

📌 பகுதி 7: ஒருவர் எப்படி வாழ்கிறார் என்பதை, நாம் எதை வைத்து முடிவு செய்வோம்? (நீங்கள் இப்போது படித்தது)

இக்கட்டுரையில் இருப்பது போல், சமூகம் “தோல்வி” என்று நினைத்தது உங்களுக்கு “விடுதலையாக” மாறிய அனுபவம் உண்டா? அல்லது யாரையாவது அவசரப்பட்டுத் தவறாக எடைபோட்ட அனுபவம்? உங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் என்னுடன் கமெண்ட்டில் பகிரலாமே! அதுவே அடுத்த பகுதியின் கருத்தாக அமையும்.

 

📌 குறிப்பு

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள உதாரணங்கள் (65 வயது தேர்தல் உதாரணம் உட்பட), நாம் அன்றாட வாழ்க்கையில் காணும் பொதுவான மனித இயல்புகளை விளக்குவதற்காகச் சொல்லப்பட்டவை. எந்த ஒரு தனி நபரையோ, நிறுவனத்தையோ, அமைப்பையோ சுட்டிக்காட்டும் நோக்கம் இல்லை. கலந்துரையாடல் கருத்துகள் பெயர்கள் இன்றி, என் புரிதலின்படி சுருக்கமாகத் தொகுக்கப்பட்டவை. உளவியல் குறிப்புகள் பொதுவான புரிதலுக்கானவை; தனிப்பட்ட மனநல ஆலோசனை அல்ல. இது என் தனிப்பட்ட கவனிப்பும் பகிர்வும் மட்டுமே; வாசகர்கள் இதனைத் தங்கள் சிந்தனைக்கான ஒரு பொதுவான பார்வையாகக் கொள்ளலாம்.

 

🤝 கண்ணன் மீ அவர்களுடன் இணைந்திருங்கள்

LinkedIn  |  Twitter  |  Instagram  |  Facebook

மனித ஞானமும், நவீன AI தொழில்நுட்பமும் இணைந்த புதிய பார்வைகளுக்கு எங்களின் வலைப்பதிவைப் பின்தொடருங்கள்: radhaconsultancy.blogspot.com

நாங்கள் வழங்கும் சேவைகள்:

🔹 AI பயிற்சி & விழிப்புணர்வு (AI Training)

🔹 தனி நபர் முதலீட்டு வழிகாட்டுதல் (Mutual Fund Investments)

🔹 மென் திறன் பயிற்சி & வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் (Soft Skills & Career Guidance)

🔹 மாணவர்களுக்கான பிராஜெக்ட் வழிகாட்டுதல் (Project Work Assistance)

உங்களது குறிப்பிட்ட தேவைக்கேற்ப நேரடியாக என்னுடன் பேசுங்கள் — உங்களது தேவையைப் புதிய கோணத்தில் பார்க்கத் தெரிந்துகொள்வோம்; உங்கள் பிரச்சினைக்கான முடிவு எப்போதும் உங்கள் கையில்தான்!

💡 “பாரபட்சமற்ற, தரமான ஆலோசனைக்கு நம்பிக்கையுடன் அணுகுங்கள்!”

📩 தொடர்பு கொள்ள:

▶️ YouTube: எங்கள் சேனலை Subscribe செய்யவும்

💬 வலைப்பதிவு வழியாக செய்தி அனுப்ப

🌐 radhaconsultancy.blogspot.com

📖 அமேசான்  (எஸ்.ஐ.பி புத்தகம்): amzn.to/3Tqmvj4

✨ இந்தக் கட்டுரையை PDF ஆக பதிவிறக்கம்செய்ய இங்கே கிளிக் செய்யவும் — ஆஃப்லைனில் படிக்கவும், பகிரவும் ஏற்றது!

#மனிதயதார்த்தங்கள் #வெற்றி #மனநிம்மதி #உளவியல்சிந்தனை #சமூகப்பார்வை #வாழ்க்கைப்பாடம் #மனிதசுபாவம் #தமிழ்க்கட்டுரைகள் #MindYourMind

#HumanRealities #SuccessAndPeace #SocialPerception #HedonicTreadmill #HaloEffect #BehavioralPsychology #LifeLessons #KannanMeenakshiSundaram #TamilBlog