Sunday 3 January 2021

2021 ல் பங்குகளில் இறங்குவது நேரடியாகவா? இல்லை பண்டுகள் மூலமா? ஒரு அலசல்


நாம் அறிந்ததே, லாக்டவுன் ஆரம்பித்தவுடன் டீ மேட் கணக்கு திறப்பது அதிகரித்து விட்டது.  இந்த ஜனவரி 2020 முதல் நவம்பர் 2020 வரையான காலகட்டத்தில்  8 மில்லியன் புதிய டீமேட் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது இது ஒரு கதை.  இன்னொரு பக்கம் இதே காலகட்டத்தில் சுமார் 4 மில்லியன் பண்டு கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.  இது இன்னொரு கதை   இப்பொழுது உள்ள புதிய சுழலில், இன்று புதிதாக சந்தைக்கு வரும் இளைய முதலீட்டாளர்கள் எந்த கணக்கை திறப்பது? அவர்கள் நேரடியாக பங்குச்சந்தையில்  இறங்குவது நல்லதா?  பங்கு பண்டுகளில்  களம் இறங்குவது நல்லதா?   என்பது பற்றி பார்ப்போம்.  ஒவ்வொரு வகையான நிகழ்வுகளிலும் ஒவ்வொரு சாதக பாதகங்கள் இருக்கின்றது. இந்த சாதக பாதகங்களை ஒவ்வொரு பிரிவாக இப்பொழுது பார்ப்போம்

 

1.    பங்குச்சந்தை அறிவு ( Knowledge)

குறிப்பாக நேரடியாக பங்குச்சந்தைக்கு வருபவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள், இது ஒரு விளையாட்டு மைதானம் என்று. பங்குச்சந்தையில் பல காலம் இருப்வர்களுக்கு தெரியும் இது ஒரு விளையாட்டு அல்ல என்று, மற்றும் இது ஒரு முழு நேர தொழில் என்று. பங்குச்சந்தையில் நேரடியாக களமாடுவது கடினம் என்பதாலேயே பண்டுகள் தொடங்கப்பட்டது என்பதே நிதர்சனம். பண்டுகளில் பண்டை  நிர்வகிக்க சந்தையை பற்றி தெரிந்து நல்ல மேலாளர்கள் இருக்கின்றனர்

2.    பங்குகளின் தெரிவு (Stock Selection)

நாம் பண்டுகள் மூலம் முதலீடு செய்யும்போது நாம் விரும்பிய பங்குகளை அதில் வாங்க முடியாது. பங்குகள் வாங்குவது பண்டு மேலாளர்களின் நிர்வாகத் திறமையை பொறுத்தே அமையும். அதே சமயம் நேரடியாக பங்குச்சந்தையில் ஈடுபடும் போது நாம் அறிந்த, தெரிந்த, நமக்கு பிடித்த பங்குகளை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்

 

3.    பண்டு மேலாளர் (Fund Manager)

நாம் மேற்கூறிய இரு கருத்துக்களையும் உற்றுநோக்கினால் பங்குகளை வாங்குவதற்கு நல்ல பங்குச் சந்தை விவரம் தெரிந்திருக்க வேண்டும்.  நாம் பங்குகளை தெரிவு செய்வதற்கும், பண்டு மேலாளர்  தேர்வு செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. பண்டு மேலாளர் பங்குகளை தேர்வு செய்வதில் சிறப்பானவராக கருதப்படுவதால் நாம் தெரிவு செய்வதை விட அவரது பங்கு தெரிவுகள் சிறப்பாக அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம்

 

4.    சந்தையின் ஏற்ற இறக்கங்களும் கிடைக்கும் லாபமும் ( Volatility and Returns)

சந்தை  ஏறுவதும் இறங்குவதும் சர்வசாதாரணமாக நடக்கின்ற செயல்.  நேரடியாக சந்தையில் இருந்தாலும், சரி பண்டு மூலமாக இருந்தாலும் சரி, ஏற்ற இறக்கங்களை நாம் சந்தித்தே தீர வேண்டும். இந்த ஏற்ற இறக்கங்களுக்கு இடையே கிடைப்பது தான் நமது லாபமே. இதில் நாம் நேரடியாக சந்தையில்  இறங்கும்போது நம்மிடம் இருக்கும் குறைந்த பணத்தில்  ஒரு சில பங்குகளை வாங்குகின்றோம், அதன் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும் பொழுது நமக்கு கிடைக்கும் லாபமும் மிக அதிகமாகவோ, அல்லது மிக மிக நஷ்டமாக அமைந்து விடுகின்றது. அதே நேரத்தில் பண்டுகள் மூலம்  அதே தொகை முதலீடு செய்யும்போது ஒரே சமயத்தில் ஒரு பண்டில்  30 அல்லது 40 பங்குகளை மறைமுகமாக வாங்குவதால் அதில் ஏற்ற இறக்கங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றது

 

5.    ரிஸ்க் (Risk)

மேற்கூரிய கருத்தை கொண்டு பார்க்கும் போது நேரடி சந்தையில் ரிஸ்க் அதிகம், பண்டு மூலம் முதலீடு செய்யும்போது ரிஸ்க் குறைவு

 

6.    எஸ்ஐபி (SIP)

பண்டுகளில் நாம் எஸ்ஐபி வகையில் முதலீடு செய்வது என்பது மிகவும் அதிகமாக முதலீட்டாளர்களால்  பின்பற்றக்கூடிய முதலீட்டு முறை.  இதே முறை தற்போது நேரடி பங்கு சந்தையிலும் வந்து விட்டது நாம் இந்த முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே பங்குகளை வாங்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன

 

7.    80-சி வரி சலுகைகள் ( 80C Tax benefits)

நாம் குறிப்பிட்ட பண்டு வகையான இ எல் எஸ் எஸ் (ELSS)  எனப்படும் பண்டுகளில்  முதலீடு செய்யும் போது வரிச்சலுகையை கிடைப்பதற்கு வசதிகள் உள்ளது. இது போன்ற வரிச்சலுகை பெற தற்போது நேரடி சந்தையில் எந்தவித ஏற்பாடுகளும் இல்லை

 

8.    காலம் (Time)

நேரடியாக சந்தையில் ஈடுபடும் போது, நமக்கு நிறைய நேர அவகாசம் தேவை. உதாரணமாக பங்குகளை தெரிவு செய்வதற்கு படிக்கவேண்டும், தெரிவு செய்த பங்குகளை வாங்கவேண்டும், வாங்கிய பங்குகளை பராமரிக்க வேண்டும், என்று நிறைய கால அவகாசம் தேவைப்படும் வேலை நேரடியாக சந்தையில் இறங்குவது. அதேநேரத்தில் நாம் பண்டுகள் மூலம், முதலீடு செய்யும்போது பண்டை மட்டும் தெரிவு செய்துவிட்டால் போதும். மற்றதை நமது பண்டு மேலாளர் பார்துகொள்வார்

 

9.    செலவு (Expenses)

நேரடியாக சந்தையில் பங்கு வாங்கும் போது, டீமேட் கட்டணம், வாங்கும் போதும் விற்கும் போதும் நாம் செலுத்தும் கமிஷன் தொகை மற்றும் எஸ்டிடி வரி (STT)  என்ற வகையில் செலவுகள் வருகின்றது அதே நேரத்தில் பண்டு வாங்கும்போதும் நமது முதலீட்டில் இருந்து செலவு விகிதாமாக ஒரு குறிபிட்ட தொகை கழிக்கபடுகின்றது. ஆக இரு முறையிலும் அதற்கான செலவை செய்தே ஆகவேண்டும்

 

10. உணர்ச்சிகள் (Emotions)

இது  மிக முக்கியமான காரணியாகும். அதிகம் பேசபடதா தவிரக்கபட்ட, ஆனால் தவிரக்க இயலாத காரணியாகும்  நாம் பங்குச்சந்தையில் நேரடியாக இருப்பதற்கும் பண்டுகள் மூலம் ஈடுபடுவதற்கும் நமது உணர்ச்சிகளின் தாக்கங்கள் வேறு மாதிரி இருக்கிறது. பங்குச் சந்தையில் கிடைக்கும் லாபமும், நஷ்டமும் நமது பங்குச் சந்தை அறிவை விட நமது உணர்ச்சிகளின் வெளிப்பாடு பொறுத்தேஅதிகம் அமைகின்றது என்று மிகுந்து ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நேரடி சந்தையில் நாம் பங்கு வாங்கி அது ஏறும் இறங்கும் போது நமது உடலில் அட்ரிலின் சுரப்பதும் ஏறி இறங்குகிறது. பண்டுகளில் முதலீடு செய்யும் போது இந்த உணர்ச்சிகளின் ஆதிக்கம் சற்று குறைவாகவே இருப்பதாக தெரிகின்றது

 

முடிவாக

மேற்கூறிய காரணீகளை வைத்து கூர்ந்து பார்த்தால் புதிய முதலீட்டாளர்கள் நேரடியாக சந்தையில் இறங்குவதைவிட முதலில் பண்டுகள் வாங்கி சந்தையை பற்றி தெரிந்து கொண்டு படிப்படியாக முன்னேறி, பின்னர் நேரடியாக சந்தையை தொடுவதே தக்கதாக தோன்றுகின்றது.  மற்றுமொரு கருத்துக் கணிப்பு  கூறுகிறது,தற்போது முதலீட்டாளர்களில்  சுமார் 40 சதவீதத்தினர் நேரடி சந்தை மற்றும் பண்டிகளிலும் முதலீடு செய்கிறார்கள் என்பதே. தற்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் சந்தை மிகவும் ஏறிவிட்டது. 2021ல் இதே அளவு சந்தை ஏறுமா என்பது கேள்விக்குறியே இதையும் நினைவில் கொள்ளுங்கள்

இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும் 

உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும்  feedback here

முந்திய கட்டுரைகளை  படிக்க 

_______________

On SIP

SIP dilemma

சிறுக சிறுக சேமிக்கலாம்

எஸ்.ஐ.பி யில் லாபத்தை அதிகரிக்கும் 6 வழிமுறைகள்

ஸ்.ஐ.பி முதலீடு... தெரிந்ததும் தெரியாததும்!

எஸ்.ஐ.பி முதலீடுதெரிந்ததும் தெரியாததும்! (10 அம்சங்கள்)

_______________

Time for Caution in investments / Time for Caution in investments in pdf format

Robbin Hood investors (New breed of investors)

Nomination

No comments:

Post a Comment